Friday 29 December 2017

சங்ககாலத்திற்கு முன்னரே பெண்களின் வர்ணனையும் உவமைகளும் தொடங்கிவிட்டது.


உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கவிஞன் காளிதாசனும், சங்க காலப் புலவர்கள் கபிலர், பரணர், நக்கீரர், மாமுலனார், ஓரம்போகியார், அம்மூவனார் போன்றோரும், பைபிளில் சில பகுதிகளை எழுதியவர்களும் சில விநோதமான உவமைகளைப் பயன்படுத்தினர். அழகிகளை — நகர்கள் சிற்றுர்கள், பேரூர்களின் அழகுக்கு ஒப்பிட்டுப் புகழ்ந்து பாடினர். இன்று நான் ஒரு அழகான சினிமா நடிகையின் அழகை — அவள் லண்டன் போல அழகானவள், மதுரை போல அழகானவள், ஸ்ரீரங்கம் போல அழகானவள் — என்று எழுதினால் என்னைப் பார்த்து நகைப்பர். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இதுவே ஒரு சிறப்பான உவமையாக கருதப்பட்டது.

இதோ சில உவமைகள்:
நற்றிணை 35, 253, 265, 350, 358, 367, 395
குறுந்தொகை 238, 258 ஐங்குறுநூறு 58, 175, 177 மற்றும் பல இடங்களிலும் காணப்படும் உவமைகளில், நற்றிணை என்னும் நூலில் இருந்து ஒரு சில மட்டும்:

துறைகெழு மரந்தை அன்ன இவள் நலம் (பாடல் 35, அம்மூவனார்)
(அவள் மரந்தை என்னும் ஊர் போல அழகானவள்)
பாரி பலவு உறு குன்றம் போல கவின் எய்திய ((பாடல் 253, கபிலர்)
( நீ பாரியின் பலா மரம் பழுக்கும் குன்று போல அழகி )
தேர் வண் விரா அன் இருப்பை அன்ன (பாடல் 350, பரணர்)
(கொடை வள்ளலான விராவன் உடைய இருப்பை போல அழகு)
பசும்பூண் வழுதி மருங்கை அன்ன (பாடல் 358, நக்கீரர்)
(பாண்டிய மன்னனின் மருங்கை என்னும் ஊர் போல அழகு வாய்ந்தவள்)
அம்மமூவன் என்பவர் ஒரு அழகியை, தொண்டி நகருக்கும் ஓரம் போகியார் மற்றொரு அழகியை சோழ நாட்டு ஆமூருக்கும் ஒப்பிடுவதை ஐங்குறு நூற்றில் படித்து ரசிக்கலாம்

நக்கீரர் பாடிய பாடல்களில் இந்த நகர=அழகி ஒப்புமை அதிகம் காணப்படும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் இப்படிப் பாடுகிறான்:

ரகுவம்சத்தில் (11-52) ஒரு ‘’செக்ஸி’’ உவமை வருகிறது:
தசரத மன்னனுடைய படைகள் மிதிலா நகரத்தை அடைந்தன. அங்குள்ள தோட்டங்களையும் மரங்களையும் படைவீரர்கள் படுத்திய பாடு, அன்புமிக்க கணவன் தனது மனைவியை அன்போடு அணைத்துச் செய்யும் சேஷ்டைகள் போல இருந்தது.
இங்கே மிதிலை என்னும் நகரம் ஒரு பெண்ணுக்கு ஒப்பிடப்படுகிறது.

மற்றொரு இடத்தில் (14-12), “அயோத்தி என்னும் அழகிய நகரில் கார் அகில் புகை எழுந்தது ஒரு அழகான பெண் தன் கூந்தலில் நறுமணம் ஏற்ற அகில் புகையை எழுப்பியது போல இருந்தது என்பான். இது போல காளிதாசன் காவியங்கள் முழுதும் படித்து ரசிக்கலாம்.

காளிதானின் கவிதைகளைப் படித்து ரசித்த கபிலர் என்னும் புலவர் அதன் மூலமாகவே பிரஹத் தத்தன் என்ற வடக்கத்தியானுக்கு தமிழ் கற்பித்தார். அவன் தமிழைக் கிண்டல் செய்தான். அவனுக்கு காளிதாசன் எழுதிய கவிதை போலவே இயற்கை அழகு மிக்க குறிஞ்சிப் பாட்டை எழுதிக் காண்பித்து, அவனைத் தமிழால் மயக்கி அடிமைப் படுத்தினார். தமிழுக்கு அடிமையான ஆரிய அரசன் பிரஹத் தத்தன் தமிழில் கவிதை புனையும் ஆற்றலை எய்தி அழகியதோர் கவியும் புனைந்தான். அவனுக்கு தக்க பரிசில் கொடுக்க எண்ணிய தமிழர்கள் அவன் கவிதையையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தனர். என்னே தமிழனின் மாண்பு, பண்பு!!


That actress is as beautiful as this city!

காளிதாசனின் மேகதூதம், ருது சம்ஹாரம் காவியங்களிலும், சாகுந்தலம் என்னும் நாடகத்திலும் இயற்கை அழகு மிகுதியாகக் காணப்படும்.

குறிஞ்சிப் பாட்டைப் படித்த தமிழ் ஆர்வலர் டாக்டர் ரெவரெண்ட் ஜி.யூ.போப், உடனே இது காளிதாசனின் செல்வாக்கில் வந்தது என்று எழுதினார். நான் காளிதாசன் பற்றி இதுவரை எழுத்திய பத்துக்கும் மேலான கட்டுரைகளில் காளிதாசன் கி.மு.முதல் நூற்றாண்டில் ‘’சகரர்’’களை ஓட ஓட விரட்டிய பேரரசன் விக்ரமாத்தித்தன் காலத்தில் வாழ்ந்தவன் என்று காட்டியுள்ளேன். இதற்குக் காரணம் 200-க்கும் மேலான காளிதாசனின் உவமைகளை சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணமுடிகிறது.

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்………

இந்துக்கள் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு உவமை “எப்படி வானில் இருந்து விழும் தண்ணீர் ( நதிகள் ) கடலை அடைகிறதோ………………….. அப்படி நான் செய்யும் எல்லா வழிபாடுகளும் உன்னையே அடையட்டும்” – என்று வழிபடுவர். பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கூட இம்மந்திர உவமை உண்டு.

இதைக் காளிதாசனிலும் சங்கப் புலவர் உவமைகளிலும் காண்கிறோம். இதிலிருந்து அறிவது என்ன?

1.உலகில் வேறு எங்கும் காணாத இவ்வுவமைகளை இந்திய இலக்கியங்களில் மட்டும் ஒரு சேரக் காணமுடிகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே பண்பாடு, ஒரே அணுகு முறை உடையது இந்நாடு — ஆரிய—திராவிட வாதங்கள் என்பன எட்டுக்கட்டிய கட்டுக்கதைகள் ஆகும்.
2.காளிதாசன் போன்றோரின் இலக்கியங்களும் இப்படிப்பட்ட உவமைகளை தமிழிலும் எழுத உதவி இருக்கலாம்.
3.புவி இயல் உவமைகளைப் பயன்படுத்துவது இந்துக்களின் கடல், நதிகள் பற்றிய புவியியல் அறிவுக்குச் சான்று பகரும்.
4.கவுண்டின்யன், அகஸ்தியர், பிருகு ஆகியோர், ஆளுக்கு ஒரு திசையில் கடல் கடந்து சென்று, இந்தியப் பண்பாட்டைப் பரப்பியதை வரலாற்றுச் சான்றுகளின் வாயிலாக அறிகிறோம்.

இதோ சில உவமைகள்:

புறநானூறு 42; மலைபடுகடாம் 51-53; பெரும் பாணாற்றுப்படை 427, புறப்பொருள் வெண்பாமாலை 11, கம்பராமாயணம்-கையடைப் படலம் முதலியவற்றில் இந்த ஆகாசாத் பதிதம் தோயம் – உவமை வருகிறது:-

மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவரெல்லாம் நின் நோக்கினரே

சோழன் கிள்ளிவளவனை இடைக்காடன் என்ற புலவர் புகழ்கிறார்:–மலையிலிருந்து இறங்கி கடலை நோக்கிச் செல்லும் பல ஆறுகள் போலப் புலவர் எல்லோரும் உன்னை நாடியே வருகின்றனர்.

உருத்திரங்கண்ணனார் (ருத்ராக்ஷன்) என்னும் புலவர் தொண்டைமான் இளந்திரையனைப் பாடுகிறார்:

கல்வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு
பல்வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செல்வரை
வெண் திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
பொன் கொழித்திழிரும் போக்கரும் கங்கைப்
பெருநீர் போகும்………………… (427—432)

மலை அருவிகளில் விழும் நீர் (ஆறுகளாகப் பெருகி) எப்படி கடலை அடைகின்றனவோ அப்படி பல்வேறு மன்னர்களும் கட்டும் கப்பம் உன்னை அடைகிறது. இதற்கு அடுத்த வரியிலேயே நீண்ட இமய மலை, கங்கை ஆறு பற்றிப் பாடுகிறார். இதிலிருந்து வடக்கத்திய செல்வாக்கைக் காணலாம்.

இன்னொரு உதாரணம், இதை இன்னும் தெளிவாகக் காட்டும். தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிராமப் பெண் பற்றிப் பாடுகையிலும் கங்கை வெள்ளம் பற்றியே உவமை வருகிறது. ஆகவே காளிதாசனின் நூல்களைப் படித்தே இவர்கள் இப்படி உவமைகளைப் பயன்படுத்தினர் என்று கொள்ளலாம். இதோ அந்த உவமை:–

நற்றிணைப் புலவர் நல்வெள்ளையார் (369) கூறுகிறார்:
ஞெமை ஓங்கு உயர்வரை இமையத்து உச்சி
வா அன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்

ஞெமை மரங்கள் வளர்ந்து ஓங்கிய இமய மலையின் உச்சியில் இருந்து அருவிகளாக விழுந்து கங்கை ஆறாகப் பெருகி கரைய உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல என் காம எண்ணம் என்னை அடித்துச் செல்கிறதே. இந்த காம வெள்ளத்தை நானெப்படிக் கடப்பேன்? – என்று தோழியிடம் சொல்லி வருத்தப்படுகிறாள் தலைவி.. இது காளிதாசன் பாடலின் எதிரொலி:

“உமை அம்மை — சிவன் என்னும் காதலனை எவ்வளவு விரும்பினாளோ அவவளவுக்கு — சிவனும் அவளைக் காதலித்தான். கங்கை நதி, எப்போதாவது கடலை விட்டு வேறு எங்காவது போகுமா? எப்போது பார்த்தாலும் தன் காதலனின் ரசத்தைச் ( சமுத்திரத்தை ) சுவைத்துக் கொண்டிருக்கிறதன்றோ!!” ( காளிதாசனின் குமார சம்பவம் 8-16)


This city is as beautiful as that woman!

இதைப் படிக்கும்போது யார் யாரைக் ‘’காப்பி’’ அடித்தனர் என்னும் குட்டு வெளிப்பட்டு விடுகிறது. காளிதாசன் பாடலைப் படிக்காமல் மதுரை ஓலைக்கடையத்து நல்வெள்ளையார் கங்கை பற்றிப் பாடி இருக்கமுடியாது. கங்கை – காம வெள்ளம் என்றெல்லாம்—ஒரு தமிழ்ப் பெண்ணின் மீது ஏற்றிப்பாடுவது தன்னிச்சையாக நடந்ததல்ல. காளிதாச னின் செல்வாக்கே!! இது போல ஒன்றல்ல, இரண்டல்ல. காளிதாசனின் 200 வகை உவமைகள் ஏறத்தாழ ஆயிரம் இடங்களுக்கு மேல் சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன!! காளிதாசனோவெனில் உலகில் உவமைகளைப் பயன்படுத்துவதில் முதல்நிலை வகிப்பவன். ‘’கழுதை விஷ்டை (விட்டை) கை நிறைய’’ — என்பதல்லாமல் தரமான 1000 உவமைகளை இடத்திற்குத் தக பொருத்திய மாமேதை அவன்.

இந்தியாவில் யாராவது காளிதாசனைப் படிக்காமல் எழுதத் துவங்கினால் அவர்கள் ஆங்கிலத்தைப் படித்து பட்டம் வாங்கி விட்டு ஷேக்ஸ்பியர் யார்? என்று கேட்பதை ஒக்கும். தமிழில் பட்டம் வாங்கிவிட்டு கம்பன் யார்? என்று கேட்பதற்குக் சமம்.

இனி ஆகாசாத் பதிதம் தோயம் – உவமையை காளிதாசன் பயன்படுத்தும் ஓரிரு இடங்களை மட்டும் காண்போம்:

மலைகளின் புதல்விகளான ஆறுகள் எப்படி கடல் எனும் காதலனை நோக்கி ( இயற்கையாகவே ) ஓடுகின்றனவோ அதே போல மகதம், கோசலம், கேகயம் ஆகிய மூன்று நாட்டுப் பெண்களும் தசரதன் எனும் வீரனை மணந்தனர். ஆறுகள், மாபெரும் கடலை நோக்கித்தானே ஓடும்? (ரகு வம்சம் 9—17)
இந்திய இலக்கியங்கள் முழுதிலும் ஆறுகள் பெண்கள் என்றும் கடல் காதலன் என்றும் சித்தரிக்கப்படும்.


Akaasaath pathitham thoyam Ythaa gachchathi saagaram…………………..

கள்ளம் கபடமற்ற — பறவைகளால் வளர்க்கப்பட்ட — இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த — சகுந்தலை என்னும் பெண்ணின் கதையான சாகுந்தலத்தில் மானுட உணர்ச்சிகள் அத்தனையையும் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுவான் காளிதாசன். இதனால் இந்த நாடகம் உலகின் தலை சிறந்த நாடகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதில் ஒரு வசனம்:

நீ உனக்குத் தகுதியான ஆளிடம்தான் உன் இதயத்தைக் கொடுத்து இருக்கிறாய்! அதிர்ஷ்டசாலிதான்!! உண்மைதான் ! பெருக்கடுத்து ஓடும் ஆறு கடலைத் தவிர வேறு எங்கு போக முடியும்? (சாகுந்தலம் 3-13)

இப்படி நூற்றுக் கணக்கான உவமைகளை ஒப்பிட்டுக் கட்டலாம். விரித்துரைப்பின் — கங்கை போலப் பெருகும் என்பதால் இத்தோடு நிறுத்துவன் யான்!

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே வானசாஸ்திரம் அறிந்த ஒரே மனிதன் தமிழன்

இந்துக்களுக்கு வான சாஸ்திரம் எனப்படும் வானவியல் தெரியுமா?

ஏன் இந்தக் கேள்வி எழுகிறது?

கிரேக்கர்களிடமிருந்துதான் சில விஷயங்களை நாம் கற்றோம் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் எழுதியதைப் படித்ததுண்டு. அவர்கள் எழுதியன எல்லாம் தவறு என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.

முதலாவதாக, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒவ்வொரு கிரகத்துக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. புகழ்பெற்ற அமரகோஷம் என்ற வடமொழி நிகண்டிலும், தமிழ் நிகண்டுகளிலும் இவ்வாறு பல பெயர்களைக் காணும்போது உலகில் நாம் தான் இத்துறையில் முன்னேற்றம் கண்டோம் என்பது தெளிவாகிறது. உலகின் ஏனைய செம்மொழிகளில் இவ்வளவு பெயர்களை காண முடிவது இல்லை.

இரண்டாவது விஷயம், சம்ஸ்கிருத, தமிழ் நூல்களில் கிரகங்கள் பற்றி ஒரே கருத்து இருப்பதாகும். இமயம் முதல் குமரி வரை இப்படி சங்க காலத்திலேயே இருப்பது வியாழன், வெள்ளி கிரகங்கள் பற்றிய அடை மொழிகளில் (அந்தணர் இருவர்) என்ற குறிப்புகளில் இருந்து தெரிகிறது.
தனித் தமிழ் வெறி இல்லை. சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழ் நிகண்டுகளில் நிறைய பயன்படுத்தப்படுகின்றன.

மூன்றாவது, கிரகங்களுக்கு இட்ட பெயர்களே அதைப் பயிலுவோருக்குப் பல விஷயங்களைக் கற்பிக்கின்றன. ஒரு சில உதாரணங்களால் இதை விளக்குகிறேன். சனிக் கிரகத்துக்கு மந்தன், முடவன் என்ற வடமொழி, தமிழ் மொழிச் சொற்கள் இருக்கின்றன. சோதிடத்தில் பயன்படுத்தப்படும்— கண்ணுக்குத் தெரியக் கூடிய கிரகங்களில்—- சனிக் கிரகம்தான் சூரியனைச் சுற்ற அதிக காலம் எடுக்கிறது. ஒரு சுற்றுக்கு 30 ஆண்டுகள் ஆகும். இது விஞ்ஞான உண்மை. இதை விளக்கும் வகையில் நாம் பெயரிட்டோம். முடவன்/மந்தி என்ற பெயரால் சிறுவர்களும் இதை நினைவிற்கொள்ள முடியும். உலகின் ஏனைய செம்மொழிகளில் இப்படிப்பட்ட பெயர்களை காண முடிவது இல்லை.

மற்றொரு எடுத்துக் காட்டு, வெள்ளி கிரகத்துக்கு மழைக் கோள் என்று பெயர். புற நானூற்றில் நாலைந்து பாடல்களில் இந்தக் குறிப்பு வருகிறது. இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காத இந்த விஷயம் தமிழ் மொழி வடமொழி நூல்களில் மட்டுமே கானப்படும் உண்மை. எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் இதை உறுதிப்படுத்தும்போது நாம் மார்தட்டிக் கொள்ளலாம், —நாங்கள் அன்றே சொன்னோம்— என்று. வியாழன் கிரகத்தை “ஆண்டு அளப்பான்” என்று நிகண்டுகள் கூறும். அதாவது ஒரு ராசிக்கு ஒரு ஆண்டு வீதம் 12 ராசிகலையும் சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகும். மஹா மகம், கும்பமேளா முதலிய பண்டிகைகள் குரு சஞ்சாரத்தின் அடிப்படையில் அமைந்தவை. கிரகங்களின் பெயர்களில் இருந்தே விஞ்ஞானம்/ வான சாஸ்திரம் கற்கும் முறை நம்மிடம் மட்டுமே உள்ளது.

நாலாவதாக, கிரகங்களுக்கு நாம் இட்ட வர்ணப் பெயர்களும் நம்முடைய வான சாஸ்திர அறிவுக்குச் சான்று பகரும். சங்கத் தமிழில் சனிக் கிரகத்துக்கு மைம்மீன் என்று பெயர். இதையே வட மொழிகளில் “நீலாய” என்ற பதம் குறிக்கும். நீலம் என்பதை கருப்புக்கும் கரு நீலத்துக்கும் பயன்படுத்துவது உண்டு.
பொன் = வியாழன்
வெள்ளி = வெண்மை நிறம் உடைய வீனஸ்
செவ்வாய் = செந்நிறக் கோள்
பச்சை = புதன்

ஆங்கிலத்திலோ கிரேக்கத்திலோ இப்படி கலர் மூலம் எல்லா கிரகங்களையும் அழைப்பதில்லை.
ஐந்தாவதாக, நாம் சில புதிய விஷயங்களைக் கூறுகிறோம். இவை இரு மொழி நூல்களிலும் உள்ள உண்மைகள். இதுவரை விஞ்ஞானம் நிரூபிக்காத உண்மைகள். எதிர்காலத்தில் நாம் சொன்னது சரியே என்று நிரூபணமானால் நமக்கு (இந்துக்களுக்கு) நோபல் பரிசு கிடைக்கும். அவை என்ன? ஆறு மிகப் பெரிய உண்மைகள் என்று கீழே கொடுத்துள்ளேன்.

ஆறாவதாக, பிராமணர்கள் தினமும் முப்பொழுதும் செய்யும் த்ரிகால சந்தியாவந்தனத்தில் நவக்ரஹ வழிபாடு— ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக—- உள்ளது. இதை கிரேக்கர்கள் சொல்லி நாம் செய்தோம் என்றால் யார் நம்புவார்கள்?

ஏழாவதாக, ஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தின் முதல் பாடலிலேயே ஞாயிறு முதல் கிரகங்கள் ஒன்பதும் வருகின்றன. ஆக நம்மிடம் இருந்துதான், உலகமே இதைக் கற்றுக் கொண்டன என்பதற்கு அகச் சான்றுகளும், புறச் சான்றுகளும், நூற்றுக் கணக்கான இடங்களில் உள்ளன.

ஆறு மிகப் பெரிய உண்மைகள்
இந்துக்கள் உலக மக்களுக்கு ஆறு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்
2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்
3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்
4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு
5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)
6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)
இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இவைகளின் பொருள் என்ன?
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:
பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

என்னுடைய கருத்து:
இது சரியா? தப்பா? என்பதைவிட இப்படி யோசித்த மூளையை எண்ணி எண்ணி வியக்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு கிரகத்துக்கும் இன்னொரு கிரகத்துக்கும் முடிச்சுப் போட்டோமே. இதைச் செய்யக்கூட அதைப் பற்றிய அறிவும், தொடர் சிந்தனையும் தேவை. நாம் இதை எல்லாம் எழுதிய காலத்தில் உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்தனர் மேலை நாட்டினர்!!!

நாமோ பூமியை எப்பொழுதுமே “பூகோளம்” (புவி உருண்டை) என்றுதான் பாடமே நடத்தினோம். கோப்பர் நிகசும், கலீலியோவும் கண்டுபிடித்ததாக மேலை நாட்டுக்காரர்கள் பெருமை பேசிய விஷயங்கள் ஆரியபட்டர், வராஹமிகிரர் எழுதிய நூல்களில் மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும், இதிஹாச புராணங்களிலும் உள்ளது.

கட்டுரைக்கான மேற்கோள்கள்
1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)
இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,
நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.
வாழ்க நவக்ரகங்கள்!! வளர்க அவற்றின் அருட் பார்வை!

தமிழனின் ஆறு பருவங்களு!

வேதத்திலும் தொல்காப்பியத்திலும் இளவேனில், முது வேனில், கார், கூதிர், முன் பனி, பின்பனிக் காலம் என்று ஆறு பருவங்கள் உள்ளன. பழங்கால நாகரீகம் எதிலும் இப்பிரிவுகள் இல்லை. இதனால் என்ன தெரிகிறது?

1.காஷ்மீர் முதல் இலங்கையின் தென்கோடி கண்டி வரை ஒரே கலாசாரமே வேத காலம் முதல் நிலவியது.

2.இது உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாததால் ஆரியக் குடியேற்றவாதம் பொய். இந்துப் பண்பாடு — அதாவது இந்தியப் பண்பாடு — இந்திய மண்ணிலேயே இயற்கையாக உருவானது.

ஆரிய- திராவிட இனவாதக் கொள்கைக்கு சங்கத் தமிழ் இலக்கியம் அடிமேல் அடி கொடுக்கிறது. இந்து மதம் தவிர உலகில் உள்ள எல்லா மதங்களும் தோன்றுவதற்கு முன்னரே சம்ஸ்கிருதமும் தமிழும் இருந்தன!!

ஆரியர்கள் என்போர் மத்திய ஆசியாவில் இருந்தோ ஐரோப்பாவில் இருந்தோ குடியேறினால் இப்படிப் பருவங்களைப் பிரித்திருக்க முடியாது. அப்படிப் பிரித்திருந்தால் அதன் எச்சங்கள் பழங்கால கிரேக்க நாகரீகத்தில் இருந்திருக்க வேண்டும்!!

ரோமாபுரி கலாசாரத்தில் இன்று ஆங்கிலேயர்கள் பின்பற்றும் வசந்தம், கோடை, இலையுதிர்காலம், குளிர் காலம் என்ற நால்வகைப் பிரிவே உள்ளது. கிரேக்க கலாசாரத்தில் நிறைய பிரிவுகள் உண்டு.

இன்னும் ஒரு அதிசய விஷயம்! உலகிலேயே ஆறு பருவங்களுக்கு என்று நூல் எழுதியவன் உலகப் புகழ் பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞன் காளிதாசன் ஒருவனே. காளிதாசனின் ருது சம்ஹாரம் என்னும் நூலைப் படிப்போருக்கு இயற்கை இன்பம் கிட்டும். உலகில் இந்தியர்கள் போல இயற்கையில் ஊறித் திளைத்தவர்கள் வேறு எவரும் இல்லை. அந்தணப் புலவன் கபிலன் சங்கத் தமிழ் நூலான குறிஞ்சிப் பாட்டில் ஒரே மூச்சில் 99 தாவரங்களை அடுக்கிப் பாடியதும் உலகில் வேறு எந்தப் பண்பாட்டிலும் இல்லை!

சங்கத் தமிழ் புலவர்கள், காளிதாசனின் ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில், சுமார் 200 உவமைகளைக் கையாளுவதால் காளிதாசன் கி.மு.முதல் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட விக்ரமாதித்தன் காலத்தவனே என்று இதுவரை ஆறு, ஏழு கட்டுரைகளை எழுதினேன். காளிதாசனின் ஆறு பருவங்கள் தமிழில் அப்படியே இருப்பது இன்னும் ஒரு சான்று என்று கொள்ளலாம்.

காளிதாசனுக்கு முன்னர், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதத்திலும், பருவம் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயினும் அதர்வண வேதமே (6-55-2) ஆறு பருவங்களை முதலில் குறிப்பிடுகிறது. பல சம்ஹிதைகளிலும் ஆறு பருவங்கள் வருகின்றன.

தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் அகத்திணை இயலில் வரும் சூத்திரம்:
“காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
பனிஎதிர் பருவமும் மொழிப.
வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்
நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானும் உரித்தென மொழிப”

என்று நிலங்களுக்கு உரிய ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறு பொழுதுகளையும் கூறுவார்.
பெரும் பொழுதுகள் ஆறு:—-

இளவேனில்: சித்திரை, வைகாசி= வசந்த ருது
முது வேனில்: ஆனி, ஆடி = க்ரீஷ்ம ருது
கார் காலம்: ஆவணி, புரட்டாசி = வர்ஷ ருது
கூதிர்: ஐப்பசி, கார்த்திகை = ஷரத் ருது
முன் பனி: மார்கழி, தை = ஹேமந்த ருது
பின்பனிக் காலம்: மாசி, பங்குனி = சிசிர ருது.

ஆறு சிறு பொழுதுகள்:——
வைகறை, காலை, நண்பகல், மாலை, யாமம், ஏற்பாடு.

குறிஞ்சிப் பாட்டில் ஐந்து சிறு பொழுதுகளை ஒரே பாட்டில் காணலாம்:
காலையும், பகலுங் கையறு மாலையும்
ஊர்துஞ்சி யாமமும் விடியலுமென்றிப்
பொழுது………………. (குறுந்தொகை 32)

சங்கத் தமிழ் நூல்களில் ஆறு பருவங்கள் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடங்களில் வருகின்றன. தேவாரத்தில் ‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ போன்ற பாடல்களில் ஒவ்வொரு பொழுதும் வருணிக்கப் படுவதைக் காணலாம்.

ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் ஹேமந்த ருது வருணனையும், கிஷ்கிந்தா காண்டத்தில் வசந்த காலம், கார் காலம் பற்றிய வருணனைகளும் வருகின்றன.
மனுதர்ம சாஸ்திரமும் பல இடங்களில் ருதுக்களைக் குறிப்பிடுகின்றன.

தைத்திரீய சம்ஹிதை வசந்த ருதுவை முதலாவதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் காளிதாசன் தனது ருதுசம்ஹார காவியத்தை கோடையில் துவங்கி எல்லோரும் விரும்பும் வசந்தத்தில் முடிக்கிறான். கண்ண பிரானும் பகவத் கீதையில் (10-35) காலங்களில் நான் வசந்தம், மாதங்களில் நான் மார்கழி என்பான்.

காளிதாசனின் ருதுசம்ஹார காவியத்தில் 144 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் சங்க இலக்கியத்தில் ஒரு பாடலை ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம். காளிதாசன் பற்றி அரவிந்தர் எழுதிய நூலில் பாதிக்கும் மேலான பகுதியை ருதுசம்ஹாரத்துக்கு ஒதுக்கி இருக்கிறார். ருது சம்ஹாரம் காளிதாசன் எழுதியது என்பதற்கு இதிலுள்ள உவமைகளே சான்று; இதில் காளிதாசனின் முத்திரையைக் காணலாம் என்று கூறி இருக்கிறார்.

வாழ்க காளிதாசன் புகழ்! ஓங்குக சங்க இலக்கியப் புகழ்!!

Thursday 28 December 2017

தழுதாழை கல்வெட்டுகள்

#தழுதாழை_கல்வெட்டுகள்

(அருள்மிகு வடகயிலாயமுடைய
நாயனார் திருக்கோவில்/தழுதாழை கிராமம் /பெரம்பலூர் மாவட்டம்)

#முதற்கல்வெட்டு

*கோவில் வளாகத்திலுள்ள பலகைக்கல்
*இரண்டாம் குலோத்துங்கரின் பதினோராம் ஆட்சியாண்டு ( கி.பி.1144)

செய்தி : மகதை நாடாழ்வானான செம்பை நாயகனுக்கு நன்றாக அவரிடம் அலுவலராகப் பணியாற்றிய ஆறகழூர் வேளான் ஆதித்தன் நீலன் கொவிலுக்கு நந்தவனம் அமைக்கவும் இறைவனுக்குப் படையலிடவும் நிலக்கொடையளித்ததோடு திருமஞ்சனக்கிணறும் வெட்டித்தந்தார். இவர் இரண்டாம் கல்வெட்டு குறிப்பிடும் நீலன் நாயகப் பெருமாளின் தந்தையாகலாம்.

#இரண்டாம்_கல்வெட்டு

* கோவில் வளாகத்தில் உள்ள பலகைக்கல்
*இரண்டாம் இராசாதிராசரின் ஆறாம் ஆட்சியாண்டு (கி.பி.1169)

செய்தி:மிலாடாகிய ஜநநாத வளநாட்டு வெம்பாற் கூற்றத்தின் கீழ் தழுதாழை இருந்தது. செம்பை நாயகரான மகதை நாடாழ்வார் கல்யாணத் திருமேனியாக வேண்டுமென விழைந்து ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரைச் சேர்ந்த வேளான் நீலன் நாயகப்பெருமாள் இக்கோவிலில் சந்திர சேகரர், நாச்சியார் ,கூத்தாடுந்தேவர், நாச்சியார்  திருமேனிகளை எழுந்தருளுவித்ததுடன் அவற்றிற்குத் திருவமுது, கறியமுது படைக்கவும் ,சந்தி விளக்கெரிக்கவும் நிலக்கொடையளித்தார்.

#மூன்றாம்_கல்வெட்டு

*கோவில் முகமண்டபத் தெற்குச் சுவர்

*மூன்றாம் இராசராசரின் இருபத்து மூன்றாம் ஆட்சியாண்டு க் கல்வெட்டு (கி.பி.1239)

செய்தி:செம்பையாழ்வார் இராஜராஜதேவரான
வாணகோவரையர் தம் அரசும் மரபு வழியும் செழிக்கத் தேவையூரில் உள்ள தேவதான திருவிடையாட்டம் ஒழிந்த பிற நிலப்பகுதிகளையும் அவற்றிற்கான வரியினங்களையும் கோவிலுக்கு அளித்தார்.

#அறிய_வரும்_செய்திகள்

இக்கல்வெட்டுகள் வழியாக இக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடைகள், தேவையூரில் இருந்த இறையிலியாகத் தரப்பட்டிருந்த நிலம் ,பிடாரி கோவில் ,பிள்ளையாருக்குத் தந்த நிலம் ,கல்லாறு, தழுதாழை ஏரி,ஏரி உள்வாய்  முதலிய பல செய்திகளை அறிய வருகிறோம்.

இந்நிலங்களைக் கைப்பற்றுவோர் ஏழு பிறப்புகளிலும் மக்கட் செல்வமின்றிப் போவர் என முதல் மற்றும் மூன்றாம் கல்வெட்டுகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவற்றைப் பாதுகாக்க வேண்டியது சிவனருட்செல்வர்களின் கடமை எனவும் அறமே துணை எனவும் இரண்டாவது கல்வெட்டில்வலியுறுத்தப்பட்டுள்ளது.

(சான்று:அறிஞர் இரா. கலைக்கோவன்_தழுதாழை சிவன் கோவில்)

Tuesday 26 December 2017

1,000-Year-Old Hindu Temple Excavated In Bangladesh

A group of archaeologists has recently unearthed a rare Vishnu temple with a unique ‘nava-ratha’ architecture at Madhabgaon village in Kaharol upazila of the northern district of Dinajpur.

The rare Vishnu temple excavated at Madhabgaon village in Kaharol upazila of the northern Bangladesh district
of Dinajpur [Credit: Independent]
Archaeologists from Jahangirnagar University’s department of archaeology in Savar, Dhaka, including its director Prof. Swadhin Sen, Prof. Syed Mohammed Kamrul Ahsan, Prof. Seema Hoque and Sabekunnaher Sithi started an excavation at the site in April this year. They received financial assistance from the cultural affairs ministry and the Higher Education Quality Enhancement Project (HEQEP) of the University Grants Commission (UGC). They also received the support of the department of archaeology.

The 52-member excavation team included four teachers, 13 students and 13 experienced workers from Mahasthan.

They found a seven-metre-high brick-built structure and a 144-sq-metre solidly built platform, with a 4.48-metre square cell at the centre. The cell represents the ‘garbhagriha’ (sanctum) where the idol was worshipped. The external surface of the platform has ‘ratha’ or vertical offset projections at the west, north and south. There are nine ‘rathas’. That is why the temple is known as a ‘nava-ratha’ temple, according to ‘Early Temple Architecture’.

“The temple is about 1,000 years old. It was constructed in the 10th to 11th centuries. No temple of the ‘nava-ratha’ type has been discovered in Bangladesh till now,” said Prof. Swadhin Sen.
He also said radiocarbon dating of the collected samples would shed light on the precise date of the temple.

“The superstructure of the sanctum is characterised by a ‘shikhara’ or ‘rekha deul’ (curvilinear tower). Among the very few existing brick-built standing temples with ‘shikhara’ in undivided Bengal, the Siddheshwar Temple at Bahulara of Bankura in West Bengal has the closest resemblance,” said Prof. Dipak Ranjan Das, a former professor of the University of Calcutta and an expert on early eastern Indian temple architecture.

The same team had discovered a Hindu temple with ‘pancha-ratha’ variety in Nawabganj upazila of Dinajpur in 2007. The four-pillared ‘mandapa’ was possibly capped with a ‘shikhara’ and is known as a ‘pida deul’ (tiered roof) variety.

The team found more artefacts, including a decorated stone image, a good number of broken fragments of stone sculptures, along with pottery, decorated bricks and stone pieces during the ongoing archaeological excavations at the site. The sculptural fragments represent various iconographic attributes of Vishnu, the Hindu deity.

Prof. Syed Mohammad Kamrul Ahsan said this temple was a very good addition to their research in the northern part of Bangladesh over the past 15 years. He added that their team has already excavated nine sites in this region and documented more than 1,000 archaeological sites in the Dinajpur-Joypurhat region. More than 800 among them could be dated to the early medieval period.

The history of river systems and landscapes was crucial for the development of settlements, which had religious edifices at the core. The excavation accompanied by archaeological studies will continue for the next couple of months.

Friday 22 December 2017

டிசம்பர் 22 கணிதமேதை ராமாணுஜர் பிறந்ததினம்

#கணிதமேதை_இராமனுஜர்_பிறந்ததினம்.

இராமானுஜன் கணிதத்தில் மட்டும் மேதையல்ல. நற்பண்புகளிலும், மனிதாபிமானத்திலும் மாமேதை. கேம்பிரிட்ஜில் அவர் வாழ்ந்த காலம், முதலாம் உலகப் போர்முடிவுற்ற தருவாய். தான் உண்டு பழகிய சைவ உணவு கிடைப்பதில் பெருத்த சிரமம் இருந்த காலம். இருந்தும், அவர் சைவ உணவு பழக்கத்தை கைவிடவில்லை. தனது வழிகாட்டியான பேராசிரியர் ஹார்டி தீவிரமான கடவுள் மறுப்பாளர். இருந்தும் இருவரும் உயிருக்கு உயிராய் நட்புக்
கொண்டிருந்தார்கள். நோய் முற்றி இந்தியா திரும்பிய பிறகு வாழ்ந்தது ஓர் ஆண்டு காலம் மட்டுமே. இறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஹார்டிக்கு
எழுதிய கடைசிக் கடிதத்தில் கூட ‘நான் ஒரு முக்கிய சமன்பாட்டைக் கண்டு பிடித்துள்ளேன். அதற்கு மோக் தீட்டா (ஆழஉம வுhநவய) என்று பெயரிட்டுள்ளேன். அதில் சில எடுத்துக்காட்டுகளை தங்களுக்கு அனுப்புகிறேன்” என்று எழுதினார். தான் படும் அவஸ்தை, ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருப்பது, சிகிச்சைக்காக கோவை, கொடுமுடி, கும்பகோணம், சென்னை என அலைந்து திரிவது பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதவர். இந்தியா திரும்பியபின் தன் ஆய்வுகளைத் தொடர சென்னைப் பல்கலைக் கழகம் அளித்த ஸ்காலர்ஷிப்பின் ஒரு பகுதியை ஏழை மாணவர்களின் கல்விக்கும் நோட்டு புத்தகங்களுக்கும், உடைகள் மற்றும் பள்ளிக் கட்டணத்திற்கு செலவிடும்படி தெரிவித்தவர். வறுமை, ஏழ்மை, காச நோய் ஆகியவை தன்னை பங்கிட்டுக் கொண்ட போதும் இத்தகைய கருணை உள்ளத்தோடு இருந்தது கர்ணணை விஞ்சிய செயல் என்றே குறிப்பிட வேண்டும்.

நாம் சர்வதேசமெங்கும் பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்தி விட்டு இன்றைக்கு ஒன்றுமற்ற, வரலாறற்ற பூஜ்ஜியமாய் ஞான சூன்யங்களாய் நடைபயின்று கொண்டிருக்கிறோம் என்பது வேதனையிலும் வேதனை!

கணிதம் படித்த அனைவரும் கணித மேதை இராமானுஜனை அறிவர். இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு பல மொழிகளில் எழுதப்பட்டு உள்ளது. இராபர்ட் கனிகள் என்ற இங்கிலாந்து நாட்டுக்காரர் எழுதிய நூலின் தலைப்பு ‘;முடிவற்றதைக் கண்டறிந்த மனிதன்” என்பது. இந்தப் புத்தகம் பல பதிப்புகளைக் கண்டுள்ளது.

இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் தலைசிறந்ததாக கருதப்படுவதும் இந்த நூலே. இத்தகைய நூல்கள் ஒரு பக்கம். இராமானுஜன் இறந்த பிறகு, அவரது சமன்பாடுகள், கோட்பாடுகளை ஆய்ந்தறிந்த கணித மேதைகளுடன் இணைத்து பெயரிடப்பட்ட சமன்பாடுகள் அவரது பெயரிடப்பட்ட ஆய்விதழ்கள், அவரது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பரிசுகள் ஆய்வு மையங்கள் என 25 க்கும் மேல் பட்டியல் நீளும்.

ராயல் சொசைட்டி ஆ‡ப் இங்கிலாந்தின் மதிப்புமிக்க அங்கத்தினராக மிக இளவயதில் தேர்வு செய்யப்பட்டவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இவர் செய்த ஆய்வுகளுக்காகவே டீ.யு. பட்டம் வழங்கியது. அந்த டீ.யு. பட்டமே பின்னர் டாக்டர் பட்டமாக பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. இத்தகைய கௌரவம் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வேறு எவருக்கும் வழங்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை.

#HBDகணிதமேதை #இராமானுஜர்
ராசாதுரியன்

Wednesday 20 December 2017

சிவ புராணம்

சிவ புராணம்

முன்னுரை:

தமிழ் பேசும் சிவனடியார்கள்
வாயெல்லாம் மணக்கின்ற பதிகம்
சிவபுராணம். கல்லையும் கனிய
வைக்கும் எனப் புகழ் பெற்ற
திருவாசகத்தின் முதற் பதிகமாக
அமைந்த சிறப்புப் பெற்றது.
திருஐந்தெழுத்தை முதலாகக்
கொண்டே துவங்கும் இப்பதிகம்
அடியார் தொழுகையில் சிறப்பிடம்
பெற்றது இதன் பெருமையைப் பறை
சாற்றும்.

சிவபுராணம் என்று பெயர் கொண்ட
இப்பதிகம் சீவ புராணமல்லவா
பேசுகின்றது ? ஏன் சிவபுராணம்
எனப் பெயர் பெற்றது ? மாணிக்க
வாசகப் பெருமான்
பரம்பொருளாகிய
சிவபெருமானைப் பலவாறெல்லாம்
விளித்து அவர் பூவார்
திருவடிகளுக்குத் தம்முடைய
உளமார்ந்த வணக்கங்களைக் கூறித்
துவங்குகிறார். சீவனான உயிர்
மும்மலச் சேற்றில் அகப்பட்டுத்
திகைத்து நிற்கும் காலமும்,
அச்சீவனுக்கு சிவபெருமான்
திருவருளால் ஏற்படும்
மேம்பாடுகளையும் கூறி
இறுதியாக அச்சிவபெருமானின்
திருவடிக்குச் செல்லும்
பெருநிலையை நமக்குக்
காட்டுகின்றார். சீவன் மலச்சுழியில்
சிக்குண்டு இருக்கும்
தாழ்நிலையிலிருந்து, சிவனார்
பெருங்கருணையால் சிவகதி
அடையும் தன்னிகரற்ற பெருநிலை
பற்றிக் கூறுவதால் இது
சிவபுராணமே.

திருவாசகம் பெரிதும் எளிய
நடையைக் கொண்டதாக இருப்பது
காரணமாக உரையின்
துணையின்றியே அன்பர்கள்
படித்துப் பயன்பெறுவது. எனினும்
சந்தி பிரித்து தினமும் பேசும்
மொழியில் வழக்கத்தில் இப்போது
இல்லாத சில சொற்களுக்குப்
பொருளும், அங்கங்கே
தொடர்புடைய சில கருத்துக்கள்
குறிப்பதுவும் அன்பர்களுக்கு
பயன்படக்கூடும் என்ற கருத்துடன்
இவ்வுரை வரையப்பட்டுள்ளது.
நேயத்தே நின்ற நிமலனார்
பிழைகளை மன்னித்தும் தவிர்த்தும்
அருள அவர்தம் செம்மலரடிகளுக்குப்
போற்றுதல்கள்.

பதிகமும் உரையும்.

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

பொருள்:

நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.
தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

குறிப்பு:

1. மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற
திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல்
வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது
அவருடைய பணிவன்பின் வெளிப்படை.

2. திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப்
போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன.
வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது, ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகை
அடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. வேதங்கள் அறிவானால் ஆகமங்கள்
அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும்
வழி காட்டுவதாலும், ஆகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாலும் இறைவனை,
"ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்" எனப் போற்றுகின்றார்.

3. இறைவன் ஒருவனே. (ஏகம் சத் - வேதம், ஒன்றே குலமும்
ஒருவனே தேவனும் - திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும்
பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.
(See mAhEshvara mUrtham )
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

பொருள்:
என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.
பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.
தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள)
பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.
கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.
தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும்
பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.

குறிப்பு:
1. வேகம் கெடுத்தல் - துயரம் நீக்குதலைக் குறிக்கும். மனத்தின் வேகத்தையும்
(நிலையில்லாமல் அலைபாய்தல்) அதனால் வரும் கேட்டின் வேகத்தையும் குறைத்து
தன் பால் மனத்தை நிலைபெறச்செய்யும் ஈசனின் கருணையையும் குறிக்கும்.

2. பிஞ்ஞகன் - பீலி அணிந்தவன் எனவும் பொருள் கொள்ளலாம்.
(இறைவன் குரண்டாசுரனின் பீலியை அணிந்த விபரம் கந்த புராணம் ததீசி முனிவர் வாக்கில் காண்க.)

3. சேயோன் - சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன்.
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

பொருள்:

எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி.
எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.
ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.
சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.
அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.
மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.
அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.

குறிப்பு:

1. தேசு - ஒளி (சிபிவிஷ்டாய நம: - சிவ அஷ்டோத்தரம் )
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20

பொருள்:

அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.
சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்
அவனுடைய திருவருளே துணையாகக் கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து
உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை
முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.

குறிப்பு:

1. "சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"
என்ற இவ்வரிகள் அன்பினால் நிறை நிற்கின்ற அடியவர்க்கு மட்டுமல்லாது தத்துவம்
விரும்புவோருக்கும் பெரும்பொருள் வாய்ந்தது. திருவாசகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கருத்து,
"இறைவன் தானே வந்து ஆட்கொள்கிறான்." கட்டுண்டு தவிக்கும் பசுக்களாகிய நம் எல்லா
உயிர்களின் பொருட்டு அரியவனாகிய இறைவன் எளிமையாக நிற்பது சித்தாந்தத்தில் காண்க.
அவ்வாறு எளிமையாக வந்திருக்கும் இறைவனைத் தொழுவதற்கும் அப்பெருமானுடைய அருளையே
துணையாகக் கொண்டாலேயே அது முடியும்.
(அருளே துணையாக ... அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே - சம்பந்தர்)
கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் 25

பொருள்:

நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன்.
சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று,
வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும்,
அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! - உன் பெரிய பெரிய தன்மைகளை
மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.

குறிப்பு

1. பாசத்தால் கட்டுண்ட பசுக்களின் உய்வின் பொருட்டு இறைவனால் நுண்ணுடலும்
(சூக்ஷ்ம சரீரம்) அவற்றின் வினைக்கேற்ற (பரு) உடல்கள் பின்னும் அருளப்பட்டன
என்பது சித்தாந்தம் கூறும் உலகின் துவக்கம்.

2. நுதல் - நெற்றி; இறைஞ்சி - வணங்கி; இறந்து - கடந்து; புகழும் ஆறு - புகழும் வகை.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

பொருள்:

புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,
பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,
கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும்,
வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே !

குறிப்பு:

1. விருகம் - மிருகம்; தாவர சங்கமம் - (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

பொருள்:

உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன்.

நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த
உண்மைப் பொருளே ! காளையை ஓட்டி வருபவனே ! வேதங்கள்
"ஐயா !" எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பலபல தன்மைகளைப் பெருகி
ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே !

குறிப்பு:

1. இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமகளில் மூழ்கியிருப்போருக்கு
இங்கேயே வீடுபேறு - வேதம்.

2. வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்தும், பலபல கோணங்களில் கூறியும்
அவர் தம் பெருமையைக் கூறச் சொற்கள் இல்லாமையை உணர்த்துகின்றன. அத்தகு பெரிய
அவரோ மிகச்சிறியவற்றிலும் நிறைந்துள்ளார். என்ன விந்தை இது ?!
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

பொருள்:

வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே.
என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே !
பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து,
உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே !
எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே !
அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே !

குறிப்பு:

1. சுடர் மிகுவதால் இருளுக்குக் கேடு - பசவண்ணர்.
உள்ளத்தில் மெய்ச்சுடரான இறைவன் வர பொய்யிருளுக்குக் கேடு.

2. வெய்ய - காய்கின்ற/ சூடான; தணிய - குளுமையான.
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

பொருள்:

தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம்
தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய்,
(இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய்,
உயிர்களை மாயைக்குள் போக்குவாய் ! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய்.
மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூக்ஷ்மமான) பொருளே !
வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே !
சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே !

குறிப்பு:

1. இறைவனுக்கு பிறவற்றைப் போலத் தோற்றம், வாழ்வு, முடிவு இல்லாமையைக் குறிப்பிட்டு,
அப்பெருமானே மற்ற எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
என்ற ஐந்தொழில்கள் மூலம் இயங்கச்செய்கிறார் என்னும் திறத்தை வெளிப்படுத்துகிறார்.

2. ஒப். உன்றன் அடியார் நடுவுற்றிருக்கும் அருளைப் புரிவாய்.
3. மணமானது காண இயலாத நுண்பொருள்களாகப் பரவுகின்றது.
இறைவன் அந்த நுண்மையினும் நுண்மையாக இருக்கிறார்.

4. சேய்மை - தொலைவு; நணியது - அருகில் இருப்பது; மாற்றம் - சொல்.
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் ......

பொருள்:

அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ
அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று,
இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !
ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக
மறைந்திருந்தாய், எம்பெருமானே !

குறிப்பு:

1. வினை நிறைந்த பிறப்பினால் அவதிப்படும் ஆன்மாக்களில் அன்பினால் இறைவன்
திருவடி பற்றுபவர்களுக்குக் கடினமான முறைகளினால் அல்ல, மிகவும் எளிதாகவும் தேனினும்
இனிய ஊற்றாக அவர்கள் உள்ளத்தில் தோன்றி அவர்களுடைய பாச மலம் அறுக்கிறார் சிவபெருமான்.
....... வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

பொருள்:

கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை
மறைத்து மூடிய மாயையாகிய இருளினை
செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி,
மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும்,
அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து,
மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை வைத்துக்கொண்டு
மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற,

குறிப்பு:

1. உடலின் கட்டுமானம் விவரிக்கப் படுகிறது.
விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
பொருள்:

ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம்
கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற
நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய என்க்கும் அருள்செய்து,
இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து,
உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி,
நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப்
பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே !

குறிப்பு:

1. கேவலமான நிலையில் நாம் இருப்பினும் இறைவன் திருவருள் நம்முடைய
இழிவு கண்டு புறம் தள்ளாது, அளத்தலுக்கு இயலாத கருணையினால் நம்மை
ஆண்டு கொண்டருளும் வண்ணம் இங்கு தொழப் படுகின்றது.
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

பொருள்:
குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே !
ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே !
பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே !
இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய,
என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே !

குறிப்பு:
1. இறைவன் உயிர்கள் பால் அவரவர் தன்மைக்கு ஏற்ப அறக்கருணை, மறக்கருணை
காட்டி நல் வழிப்படுத்துகிறார். மணிவாசகப் பெருமான், சிவபெருமான் தமக்கு அறக்கருணை
புரிவதன் மூலமே நெஞ்சின் வஞ்சமெல்லாம் அகல வழிவகை செய்துவிட்ட வகையைப் போற்றுகின்றார்.
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

பொருள்:
தெவிட்டாத அமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே !
ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே !
(என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே !
இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே !

குறிப்பு:
1. இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் உள்ளார். எங்கும் நிறைந்தும் அதே நேரத்தில்
எல்லாம் கடந்தும் இருப்பதால் அவரைக் கடவுள் என்கிறோம். ஆயினும் ஆர்வமும் முயற்சியும்
உடையவர்கள் சிவபெருமான் திருவருளினால் அவரை உணர்கின்றார்கள். மற்றவர்கள் அலைவரிசை
ஒன்றியையாத ஒலிப்பெட்டி போல அவர் மிக அருகில் இருந்தும், பேரொளியாக இருந்தும்
காண இயலாதவர்களாக உள்ளனர்.
(ஒ. பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாகக் கொள்வானே - திருமூலர்)

2. இறைவனுடைய எண்குணங்களில் ஒன்று வரம்பில் இன்பமுடைமை. அவ்வாறு இருக்க
"இன்பமும் துன்பமும் இல்லானே" எனக் கூறுவது பொருந்துமா எனக் கேட்டால்,
இறைவனுக்குப் பிறவற்றால் எவ்வித இன்பமோ துன்பமோ இல்லை.
செம்பொருளாக உள்ள அது தன்னுடைய வற்றாத இன்பத்தில் தானே என்றும் மகிழ்ந்து இருக்கும்.
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே

பொருள்:
அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே !
எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே !
சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே !
பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே !
முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும்
ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே !
(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக -
அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே !
உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின்
பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே !

குறிப்பு:
1. சிவபெருமான் எல்லாப் பொருள்களுடனும் கலந்து தோன்றினும் இவை எதுவும் அவரல்ல.
அவர் கலந்து இருப்பது போலவே எல்லாம் கடந்தும் உள்ளார்.
2. சிவபெருமானுக்கு அவதாரம் இல்லை. அவர் பிறப்பது இல்லை.
3. இறைவன் அன்பர்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்த போதிலும்,
அவருடைய பேரியல்பு யாராலும் முழுதும் ஆய்வது பற்றி எண்ணியும் பார்க்க இயலாதது.
எனவே தான் அவருடைய இயல்பினை சற்றேனும் காண முயல்கின்ற ஞானிகளின் திறனை
வியந்து கூறுகின்றார் மாணிக்க வாசகர்.
(ஒ. பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின்றேனே - திருமந்திரம்)
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

பொருள்:
நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே !
என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே ! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே !
தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே ! தந்தையே ! மிகுதியாக நின்ற
ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து

குறிப்பு:
1. இறைவன் எங்கும் நிறைந்து இருக்கும் பொழுது அவர் எதனை நீங்குவார்,
புதிதாக வருவதற்கு அவர் இல்லாத்தது என்ன உள்ளது, அவர் கலந்து இல்லாத
பொருள் தான் ஏது - புதிதாகக் கலப்பதற்கு ? இவ்வாறு எல்லாப் பொருளிலும் இருந்த போதிலும்,
பொருளின் தன்மையால் குறைபடாமல் தான் என்றும் தூயவனான புண்ணிய மூர்த்தியாகவே உள்ளார்.
2. இறைவன் சொற்களால் சொல்லி முடியாதவர். நுண் உணர்வால் அறியப் படுபவர்.
(ஒ. அவனருளே கண் கொண்டு காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே - தேவாரம் )
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

பொருள்:
இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும்
(ஆய்வின் இறுதியில் சாறாகத் தேறும்) தேற்றமே !
அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே ! என்னுடைய சிந்தனையினுள்
உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே !
என்னை உடைமையாக ஆள்பவனே !
பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க
இயலவில்லை, எம் தலைவா ! அரனே ! ஓ ! என்று பலவாறு

குறிப்பு:
1. ஒ. ஏகம் சத் விப்ரா பஹ¤தா வதந்தி - வேதம்.
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

பொருள்:
போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள்
மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது
மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே !
வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே !
தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே ! தென்பாண்டி நாட்டை உடையவனே !

குறிப்பு:

1. இருள் என்பது (ஒளீ) இன்மையைக் குறிக்கும். உலகங்கள் எல்லாம் ஒடுங்கிய
பின்னர் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்நிலை ஏதுமற்ற இருள் போன்றது.
அவ்விருளில் ஒளியாக இறைவன் ஆடுகின்றார்.
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

பொருள்:

அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே ! ஓ ! என்று
சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து
சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள்
சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள்,
பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்.

குறிப்பு:

1. பொருளினை உணர்ந்து சொல்லுவதன் மூலம் உணர்வினோடு ஒருமைப்பட்டுத்
தொழுதலால் அவ்வகை வணக்கத்தின் பெருமை வலியுறுத்தப்படுகின்றது.
திருச்சிற்றம்பலம

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...