#தழுதாழை_கல்வெட்டுகள்
(அருள்மிகு வடகயிலாயமுடைய
நாயனார் திருக்கோவில்/தழுதாழை கிராமம் /பெரம்பலூர் மாவட்டம்)
#முதற்கல்வெட்டு
*கோவில் வளாகத்திலுள்ள பலகைக்கல்
*இரண்டாம் குலோத்துங்கரின் பதினோராம் ஆட்சியாண்டு ( கி.பி.1144)
செய்தி : மகதை நாடாழ்வானான செம்பை நாயகனுக்கு நன்றாக அவரிடம் அலுவலராகப் பணியாற்றிய ஆறகழூர் வேளான் ஆதித்தன் நீலன் கொவிலுக்கு நந்தவனம் அமைக்கவும் இறைவனுக்குப் படையலிடவும் நிலக்கொடையளித்ததோடு திருமஞ்சனக்கிணறும் வெட்டித்தந்தார். இவர் இரண்டாம் கல்வெட்டு குறிப்பிடும் நீலன் நாயகப் பெருமாளின் தந்தையாகலாம்.
#இரண்டாம்_கல்வெட்டு
* கோவில் வளாகத்தில் உள்ள பலகைக்கல்
*இரண்டாம் இராசாதிராசரின் ஆறாம் ஆட்சியாண்டு (கி.பி.1169)
செய்தி:மிலாடாகிய ஜநநாத வளநாட்டு வெம்பாற் கூற்றத்தின் கீழ் தழுதாழை இருந்தது. செம்பை நாயகரான மகதை நாடாழ்வார் கல்யாணத் திருமேனியாக வேண்டுமென விழைந்து ஆத்தூர் அருகே உள்ள ஆறகழூரைச் சேர்ந்த வேளான் நீலன் நாயகப்பெருமாள் இக்கோவிலில் சந்திர சேகரர், நாச்சியார் ,கூத்தாடுந்தேவர், நாச்சியார் திருமேனிகளை எழுந்தருளுவித்ததுடன் அவற்றிற்குத் திருவமுது, கறியமுது படைக்கவும் ,சந்தி விளக்கெரிக்கவும் நிலக்கொடையளித்தார்.
#மூன்றாம்_கல்வெட்டு
*கோவில் முகமண்டபத் தெற்குச் சுவர்
*மூன்றாம் இராசராசரின் இருபத்து மூன்றாம் ஆட்சியாண்டு க் கல்வெட்டு (கி.பி.1239)
செய்தி:செம்பையாழ்வார் இராஜராஜதேவரான
வாணகோவரையர் தம் அரசும் மரபு வழியும் செழிக்கத் தேவையூரில் உள்ள தேவதான திருவிடையாட்டம் ஒழிந்த பிற நிலப்பகுதிகளையும் அவற்றிற்கான வரியினங்களையும் கோவிலுக்கு அளித்தார்.
#அறிய_வரும்_செய்திகள்
இக்கல்வெட்டுகள் வழியாக இக்கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடைகள், தேவையூரில் இருந்த இறையிலியாகத் தரப்பட்டிருந்த நிலம் ,பிடாரி கோவில் ,பிள்ளையாருக்குத் தந்த நிலம் ,கல்லாறு, தழுதாழை ஏரி,ஏரி உள்வாய் முதலிய பல செய்திகளை அறிய வருகிறோம்.
இந்நிலங்களைக் கைப்பற்றுவோர் ஏழு பிறப்புகளிலும் மக்கட் செல்வமின்றிப் போவர் என முதல் மற்றும் மூன்றாம் கல்வெட்டுகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவற்றைப் பாதுகாக்க வேண்டியது சிவனருட்செல்வர்களின் கடமை எனவும் அறமே துணை எனவும் இரண்டாவது கல்வெட்டில்வலியுறுத்தப்பட்டுள்ளது.
(சான்று:அறிஞர் இரா. கலைக்கோவன்_தழுதாழை சிவன் கோவில்)
No comments:
Post a Comment