வேதத்திலும் தொல்காப்பியத்திலும் இளவேனில், முது வேனில், கார், கூதிர், முன் பனி, பின்பனிக் காலம் என்று ஆறு பருவங்கள் உள்ளன. பழங்கால நாகரீகம் எதிலும் இப்பிரிவுகள் இல்லை. இதனால் என்ன தெரிகிறது?
1.காஷ்மீர் முதல் இலங்கையின் தென்கோடி கண்டி வரை ஒரே கலாசாரமே வேத காலம் முதல் நிலவியது.
2.இது உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாததால் ஆரியக் குடியேற்றவாதம் பொய். இந்துப் பண்பாடு — அதாவது இந்தியப் பண்பாடு — இந்திய மண்ணிலேயே இயற்கையாக உருவானது.
ஆரிய- திராவிட இனவாதக் கொள்கைக்கு சங்கத் தமிழ் இலக்கியம் அடிமேல் அடி கொடுக்கிறது. இந்து மதம் தவிர உலகில் உள்ள எல்லா மதங்களும் தோன்றுவதற்கு முன்னரே சம்ஸ்கிருதமும் தமிழும் இருந்தன!!
ஆரியர்கள் என்போர் மத்திய ஆசியாவில் இருந்தோ ஐரோப்பாவில் இருந்தோ குடியேறினால் இப்படிப் பருவங்களைப் பிரித்திருக்க முடியாது. அப்படிப் பிரித்திருந்தால் அதன் எச்சங்கள் பழங்கால கிரேக்க நாகரீகத்தில் இருந்திருக்க வேண்டும்!!
ரோமாபுரி கலாசாரத்தில் இன்று ஆங்கிலேயர்கள் பின்பற்றும் வசந்தம், கோடை, இலையுதிர்காலம், குளிர் காலம் என்ற நால்வகைப் பிரிவே உள்ளது. கிரேக்க கலாசாரத்தில் நிறைய பிரிவுகள் உண்டு.
இன்னும் ஒரு அதிசய விஷயம்! உலகிலேயே ஆறு பருவங்களுக்கு என்று நூல் எழுதியவன் உலகப் புகழ் பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞன் காளிதாசன் ஒருவனே. காளிதாசனின் ருது சம்ஹாரம் என்னும் நூலைப் படிப்போருக்கு இயற்கை இன்பம் கிட்டும். உலகில் இந்தியர்கள் போல இயற்கையில் ஊறித் திளைத்தவர்கள் வேறு எவரும் இல்லை. அந்தணப் புலவன் கபிலன் சங்கத் தமிழ் நூலான குறிஞ்சிப் பாட்டில் ஒரே மூச்சில் 99 தாவரங்களை அடுக்கிப் பாடியதும் உலகில் வேறு எந்தப் பண்பாட்டிலும் இல்லை!
சங்கத் தமிழ் புலவர்கள், காளிதாசனின் ஆயிரத்துக்கும் மேலான உவமைகளில், சுமார் 200 உவமைகளைக் கையாளுவதால் காளிதாசன் கி.மு.முதல் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட விக்ரமாதித்தன் காலத்தவனே என்று இதுவரை ஆறு, ஏழு கட்டுரைகளை எழுதினேன். காளிதாசனின் ஆறு பருவங்கள் தமிழில் அப்படியே இருப்பது இன்னும் ஒரு சான்று என்று கொள்ளலாம்.
காளிதாசனுக்கு முன்னர், உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதத்திலும், பருவம் பற்றிய குறிப்புகள் உண்டு. ஆயினும் அதர்வண வேதமே (6-55-2) ஆறு பருவங்களை முதலில் குறிப்பிடுகிறது. பல சம்ஹிதைகளிலும் ஆறு பருவங்கள் வருகின்றன.
தொல்காப்பியப் பொருள் அதிகாரத்தில் அகத்திணை இயலில் வரும் சூத்திரம்:
“காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
பனிஎதிர் பருவமும் மொழிப.
வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்
நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானும் உரித்தென மொழிப”
என்று நிலங்களுக்கு உரிய ஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறு பொழுதுகளையும் கூறுவார்.
பெரும் பொழுதுகள் ஆறு:—-
இளவேனில்: சித்திரை, வைகாசி= வசந்த ருது
முது வேனில்: ஆனி, ஆடி = க்ரீஷ்ம ருது
கார் காலம்: ஆவணி, புரட்டாசி = வர்ஷ ருது
கூதிர்: ஐப்பசி, கார்த்திகை = ஷரத் ருது
முன் பனி: மார்கழி, தை = ஹேமந்த ருது
பின்பனிக் காலம்: மாசி, பங்குனி = சிசிர ருது.
ஆறு சிறு பொழுதுகள்:——
வைகறை, காலை, நண்பகல், மாலை, யாமம், ஏற்பாடு.
குறிஞ்சிப் பாட்டில் ஐந்து சிறு பொழுதுகளை ஒரே பாட்டில் காணலாம்:
காலையும், பகலுங் கையறு மாலையும்
ஊர்துஞ்சி யாமமும் விடியலுமென்றிப்
பொழுது………………. (குறுந்தொகை 32)
சங்கத் தமிழ் நூல்களில் ஆறு பருவங்கள் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடங்களில் வருகின்றன. தேவாரத்தில் ‘மாசில் வீணையும் மாலை மதியமும்’ போன்ற பாடல்களில் ஒவ்வொரு பொழுதும் வருணிக்கப் படுவதைக் காணலாம்.
ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் ஹேமந்த ருது வருணனையும், கிஷ்கிந்தா காண்டத்தில் வசந்த காலம், கார் காலம் பற்றிய வருணனைகளும் வருகின்றன.
மனுதர்ம சாஸ்திரமும் பல இடங்களில் ருதுக்களைக் குறிப்பிடுகின்றன.
தைத்திரீய சம்ஹிதை வசந்த ருதுவை முதலாவதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் காளிதாசன் தனது ருதுசம்ஹார காவியத்தை கோடையில் துவங்கி எல்லோரும் விரும்பும் வசந்தத்தில் முடிக்கிறான். கண்ண பிரானும் பகவத் கீதையில் (10-35) காலங்களில் நான் வசந்தம், மாதங்களில் நான் மார்கழி என்பான்.
காளிதாசனின் ருதுசம்ஹார காவியத்தில் 144 பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் சங்க இலக்கியத்தில் ஒரு பாடலை ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம். காளிதாசன் பற்றி அரவிந்தர் எழுதிய நூலில் பாதிக்கும் மேலான பகுதியை ருதுசம்ஹாரத்துக்கு ஒதுக்கி இருக்கிறார். ருது சம்ஹாரம் காளிதாசன் எழுதியது என்பதற்கு இதிலுள்ள உவமைகளே சான்று; இதில் காளிதாசனின் முத்திரையைக் காணலாம் என்று கூறி இருக்கிறார்.
வாழ்க காளிதாசன் புகழ்! ஓங்குக சங்க இலக்கியப் புகழ்!!
No comments:
Post a Comment