Friday, 29 December 2017

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே வானசாஸ்திரம் அறிந்த ஒரே மனிதன் தமிழன்

இந்துக்களுக்கு வான சாஸ்திரம் எனப்படும் வானவியல் தெரியுமா?

ஏன் இந்தக் கேள்வி எழுகிறது?

கிரேக்கர்களிடமிருந்துதான் சில விஷயங்களை நாம் கற்றோம் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் எழுதியதைப் படித்ததுண்டு. அவர்கள் எழுதியன எல்லாம் தவறு என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.

முதலாவதாக, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒவ்வொரு கிரகத்துக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. புகழ்பெற்ற அமரகோஷம் என்ற வடமொழி நிகண்டிலும், தமிழ் நிகண்டுகளிலும் இவ்வாறு பல பெயர்களைக் காணும்போது உலகில் நாம் தான் இத்துறையில் முன்னேற்றம் கண்டோம் என்பது தெளிவாகிறது. உலகின் ஏனைய செம்மொழிகளில் இவ்வளவு பெயர்களை காண முடிவது இல்லை.

இரண்டாவது விஷயம், சம்ஸ்கிருத, தமிழ் நூல்களில் கிரகங்கள் பற்றி ஒரே கருத்து இருப்பதாகும். இமயம் முதல் குமரி வரை இப்படி சங்க காலத்திலேயே இருப்பது வியாழன், வெள்ளி கிரகங்கள் பற்றிய அடை மொழிகளில் (அந்தணர் இருவர்) என்ற குறிப்புகளில் இருந்து தெரிகிறது.
தனித் தமிழ் வெறி இல்லை. சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழ் நிகண்டுகளில் நிறைய பயன்படுத்தப்படுகின்றன.

மூன்றாவது, கிரகங்களுக்கு இட்ட பெயர்களே அதைப் பயிலுவோருக்குப் பல விஷயங்களைக் கற்பிக்கின்றன. ஒரு சில உதாரணங்களால் இதை விளக்குகிறேன். சனிக் கிரகத்துக்கு மந்தன், முடவன் என்ற வடமொழி, தமிழ் மொழிச் சொற்கள் இருக்கின்றன. சோதிடத்தில் பயன்படுத்தப்படும்— கண்ணுக்குத் தெரியக் கூடிய கிரகங்களில்—- சனிக் கிரகம்தான் சூரியனைச் சுற்ற அதிக காலம் எடுக்கிறது. ஒரு சுற்றுக்கு 30 ஆண்டுகள் ஆகும். இது விஞ்ஞான உண்மை. இதை விளக்கும் வகையில் நாம் பெயரிட்டோம். முடவன்/மந்தி என்ற பெயரால் சிறுவர்களும் இதை நினைவிற்கொள்ள முடியும். உலகின் ஏனைய செம்மொழிகளில் இப்படிப்பட்ட பெயர்களை காண முடிவது இல்லை.

மற்றொரு எடுத்துக் காட்டு, வெள்ளி கிரகத்துக்கு மழைக் கோள் என்று பெயர். புற நானூற்றில் நாலைந்து பாடல்களில் இந்தக் குறிப்பு வருகிறது. இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காத இந்த விஷயம் தமிழ் மொழி வடமொழி நூல்களில் மட்டுமே கானப்படும் உண்மை. எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் இதை உறுதிப்படுத்தும்போது நாம் மார்தட்டிக் கொள்ளலாம், —நாங்கள் அன்றே சொன்னோம்— என்று. வியாழன் கிரகத்தை “ஆண்டு அளப்பான்” என்று நிகண்டுகள் கூறும். அதாவது ஒரு ராசிக்கு ஒரு ஆண்டு வீதம் 12 ராசிகலையும் சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகும். மஹா மகம், கும்பமேளா முதலிய பண்டிகைகள் குரு சஞ்சாரத்தின் அடிப்படையில் அமைந்தவை. கிரகங்களின் பெயர்களில் இருந்தே விஞ்ஞானம்/ வான சாஸ்திரம் கற்கும் முறை நம்மிடம் மட்டுமே உள்ளது.

நாலாவதாக, கிரகங்களுக்கு நாம் இட்ட வர்ணப் பெயர்களும் நம்முடைய வான சாஸ்திர அறிவுக்குச் சான்று பகரும். சங்கத் தமிழில் சனிக் கிரகத்துக்கு மைம்மீன் என்று பெயர். இதையே வட மொழிகளில் “நீலாய” என்ற பதம் குறிக்கும். நீலம் என்பதை கருப்புக்கும் கரு நீலத்துக்கும் பயன்படுத்துவது உண்டு.
பொன் = வியாழன்
வெள்ளி = வெண்மை நிறம் உடைய வீனஸ்
செவ்வாய் = செந்நிறக் கோள்
பச்சை = புதன்

ஆங்கிலத்திலோ கிரேக்கத்திலோ இப்படி கலர் மூலம் எல்லா கிரகங்களையும் அழைப்பதில்லை.
ஐந்தாவதாக, நாம் சில புதிய விஷயங்களைக் கூறுகிறோம். இவை இரு மொழி நூல்களிலும் உள்ள உண்மைகள். இதுவரை விஞ்ஞானம் நிரூபிக்காத உண்மைகள். எதிர்காலத்தில் நாம் சொன்னது சரியே என்று நிரூபணமானால் நமக்கு (இந்துக்களுக்கு) நோபல் பரிசு கிடைக்கும். அவை என்ன? ஆறு மிகப் பெரிய உண்மைகள் என்று கீழே கொடுத்துள்ளேன்.

ஆறாவதாக, பிராமணர்கள் தினமும் முப்பொழுதும் செய்யும் த்ரிகால சந்தியாவந்தனத்தில் நவக்ரஹ வழிபாடு— ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக—- உள்ளது. இதை கிரேக்கர்கள் சொல்லி நாம் செய்தோம் என்றால் யார் நம்புவார்கள்?

ஏழாவதாக, ஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தின் முதல் பாடலிலேயே ஞாயிறு முதல் கிரகங்கள் ஒன்பதும் வருகின்றன. ஆக நம்மிடம் இருந்துதான், உலகமே இதைக் கற்றுக் கொண்டன என்பதற்கு அகச் சான்றுகளும், புறச் சான்றுகளும், நூற்றுக் கணக்கான இடங்களில் உள்ளன.

ஆறு மிகப் பெரிய உண்மைகள்
இந்துக்கள் உலக மக்களுக்கு ஆறு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்
2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்
3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்
4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு
5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)
6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)
இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இவைகளின் பொருள் என்ன?
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:
பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

என்னுடைய கருத்து:
இது சரியா? தப்பா? என்பதைவிட இப்படி யோசித்த மூளையை எண்ணி எண்ணி வியக்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு கிரகத்துக்கும் இன்னொரு கிரகத்துக்கும் முடிச்சுப் போட்டோமே. இதைச் செய்யக்கூட அதைப் பற்றிய அறிவும், தொடர் சிந்தனையும் தேவை. நாம் இதை எல்லாம் எழுதிய காலத்தில் உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்தனர் மேலை நாட்டினர்!!!

நாமோ பூமியை எப்பொழுதுமே “பூகோளம்” (புவி உருண்டை) என்றுதான் பாடமே நடத்தினோம். கோப்பர் நிகசும், கலீலியோவும் கண்டுபிடித்ததாக மேலை நாட்டுக்காரர்கள் பெருமை பேசிய விஷயங்கள் ஆரியபட்டர், வராஹமிகிரர் எழுதிய நூல்களில் மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும், இதிஹாச புராணங்களிலும் உள்ளது.

கட்டுரைக்கான மேற்கோள்கள்
1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)
இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,
நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.
வாழ்க நவக்ரகங்கள்!! வளர்க அவற்றின் அருட் பார்வை!

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...