Saturday 27 October 2018

திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் புகழ் 2

உலக இலக்கியங்களில் தலைசிறந்த இடத்தைப் பெற்றிருப்பவைகளில் ராமாயணமும் ஒன்று.

மனிதன் தனது நல்ல ஒழுக்கத்தால் தெய்வாம்சம் பெறுவது எப்படி என்பதை விளக்கிக் கூறிய இதிகாசமிது. வால்மீகி இயற்றிய ராமன் கதையை அடிப்படையாகக் கொண்டு பல ராமாயணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. என்றாலும் அத்தனையிலும் வேறுபட்டு நிற்பது கம்பனின் ராமாயணம். அதனால்தான்,

‘பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளி வைத்த
சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும்
வித்தாக வில்லை எனப்பாடு’

என்றார் கவியரசர் கண்ணதாசன்.

அவன் உதிக்கும் சூரியன் மறைவதற்குள் எழுநூறு பாடல் களைப் பாடியவன். அதனால்தான் கல்விசிறந்த தமிழ்நாடு, புகழ்கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று புகழ்ந்து புகழ்ந்து பாடினார் பாரதியார்.

கம்பனது ராமாயணம் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற காவியம். இந்தக் காவியத்தலைவன் சக்கரவர்த்தி திருமகனாம் ராமனைப் பாடுவது எப்படி இருக்கிறதாம் கம்பனுக்கு. செய்வதறியா அலைகளையுடைய பாற்கடல் முழுவதையும் ஒரு பூனை நக்கியே குடித்து வற்ற வைத்துவிடலாம் என பேராசைப்பட்டதாம். அத்தகைய ஆசையில்தான் நானும் ராமனைப் பாட நினைப்பது என்பார்.

இதைப் போலத்தான் நானும் கம்பனின் காவியத்தில் எதை எழுதுவது என்று தவித்திருக்கிறேன். முடிவில் கம்பனின் அம்பறாத்தூணியின் ஒரு துளியை இங்கே சுவைக்கத் தருகிறேன்.

கம்பனுக்குக் கிடைத்த சடையப்ப வள்ளல்

‘தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு’ என ஒளவையாரால் புகழப்பெற்ற தொண்டை நாட்டை அடுத்துள்ள நடுநாட்டில் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சங்கர வள்ளலுடைய மகனே சடையப்ப வள்ளல்.

இவர் மூவேந்தருக்கும் ஒரே சமயத்தில் விருந்தளிக்கும் தகுதிபெற்றிருந்ததனால் ‘திரிகர்த்தராயன்’ என்றும், அனைவருக்கும் உணவளித்துப்போற்றியதால் ‘அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும் உடையான் சடையப்பன்’ என்றும் புகழப்பெற்றார்.

இவ்வள்ளலே கம்பர் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். அதனால் கவிபாடும் ஆற்றலை கம்பர் பெற்றார்.

கம்பரின் கவித்திறம் சடையப்ப வள்ளலை மிகவும் கவர்ந்தது. அதனால் இருவரும் இணை பிரியாது இருந்தனர்.

சோழ மன்னர் கம்பரின் கவித்திறனைக் கேள்விப்பட்டு அவரை அழைத்து வந்து கவிச்சக்கரவர்த்தி எனப்பட்டமளித்துச் சிறப்பித்தான். தன் அரசவைப் புலவராகவும் நியமித்தான்.

சடையப்பவள்ளல் கம்பரைக்கொண்டு ராமாயணத்தைப் பாட வைக்க பெரிதும் விரும்பினார். கம்பரிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். கம்பர் அரசவைப் புலவரானதால் பாடல் எழுதுவது தடைப்பட்டது.

அப்போது சோழனின் அவைக்களத்தில் ஒட்டக்கூத்தரும் புலவராக இருந்தார். சோழ மன்னன் இருவரையும் அழைத்து எழுதச் சொல்லி அவ்வப்போது கேட்டும், ரசித்தும் வந்தான்.

ஒட்டக்கூத்தரைவிட தாமே முதலில் பாடல் எழுதி முடிக்க வேண்டும் என முயற்சித்து கம்பர் எழுதி முடித்தார். தாம் இயற்றிய ராமாயணத்திற்கு ‘ராமகாதை’ எனப்பெயரிட்டார்.

இதில் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடியுள்ளார். நூறு பாடல்கள் முடிந்ததும் அடுத்து வரும் பாடலில் சடையப்பரைப் பாடியுள்ளார்.

ராமாயண அரங்கேற்றம் திருவரங்கத்தில் நிகழ்ந்த போது பாடலைக் கேட்டவர்கள் ‘ஆயிரம் பாடலுக்கு ஒரு பாடல் வீதம் சடையப்பரைப் பாடுக’ என்றனர்.

அதைக் கேட்ட கம்பர் நம் வள்ளல் நூற்றில் ஒரு வரல்லர். ஆயிரத்தில் ஒருவர் என்று மகிழ்ந்து பாடல் களைப் பாடினார். அது மட்டுமல்ல ராமபிரான் காடுசென்று இலங்கை மன்னனை வென்று நாடு திரும்பி முடி சூட்டிக்கொண்டான். அப்போது–

‘அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் பற்ற
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய் மன் சடைநன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி’

என்று புகழ்ந்து பாடினார்.

திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்பரின் மரபில் வந்தவர்கள் முடியை எடுத்துக் கொடுக்க வசிட்ட முனிவர் சூட்டினார் என்பது இந்தப்பாடல் தரும் செய்தி.

இப்படி இறுதிவரை சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடி தன் நன்றி மறவாமையை கம்பர் வெளிப்படுத்தியுள்ளார்.

கம்பன் படைத்த ராமாயணம்

வடமொழியில் எழுதப்பட்ட வால்மீகி கதையை தமிழர்கள் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்ப்பண்பாட்டிற்கேற்ப கம்பன் எழுதினான். அதனால்தான் கம்பராமாயணம் பாமர மக்களிடத்திலும் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது.

உலக மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சகோதர பாசம், மனம் உடைந்தவர்களுக்கு உதவும் உன்னதப் பண்பு ஆகிய இரு தூண்களின் மேல் கம்பர் தம் காவிய மாளிகையைக் கட்டியுள்ளார். சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்தாள் என்பார் வால்மீகி. இலங்கையில் மட்டுமல்ல இலங்கை வேந்தனின் இதயமாம் மனச்சிறையில் வைத்தான் என்பார் கம்பர்.

தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கேற்ப பாத்திரப் படைப்புகளை மாற்றியிருக்கின்றார். சீதையை ராவணன் தொட்டுத் தூக்கிச் சென்றதாக வால்மீகி கூற நமது கம்பனோ இது தமிழ் மண்ணுக்கு ஏற்றதல்ல என நினைத்து குடிசையோடு பெயர்த் தெடுத்துச் சென்றான் என்பார். மாற்றான் தொடுவது கூட கற்பின் பெருமைக்கு களங்கம் என்பதாக நினைத்தான் கம்பன்.

வாலி கொல்லப்பட்ட பிறகு அவனது மனைவியான தாரையை சுக்ரீவன் மனைவியாக்கிக் கொண்டதாகச் சொல்வார்கள். ஒரு பக்கம் மனைவி உருமி. இன்னொருபக்கம் தாரை என சுக்ரீவன் வாழ்ந்ததாக வால்மீகி சொல்வார். ஆனால் கம்பனோ தாரையை உயர்வாகச் சொல்வான். வாலி வதையுண்டதும் தாரை கைம்மை நோன்பு மேற்கொள்கிறாள். குரங்கு என்றாலும் கூட கற்புக்கு உயர்வு செய்தவன் தமிழ்க்கம்பன். இப்படி தமிழனுக்கும், தமிழுக்கும் பெருமை சேர்த்தவன் கம்பன்.

அதனால்தான் கம்பனைப் பற்றி அயல் மொழிக் காரர்கள், ‘தமிழன் பாக்கியம் செய்தவன். அவனது தாய்மொழியில் அல்லவா கம்பன் பாடியுள்ளான்’ என்று பொறாமைப்படுகின்றனர். இதையெல்லாம் கேட்கும் போதும், படிக்கும் போதும் நமக்கே மகிழ்ச்சியும், கர்வமும் ஏற்படுகின்றன. இது கம்பனால் தமிழுக்குக் கிடைத்த பெருமை

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...