Saturday 27 October 2018

திருவெண்ணெய்நல்லூர் புகழில் இருந்து 4

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 5

பாடல்:

வாழ்வு ஆர்தரு வெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப் பெற
தாழ்வார் உயர புலவோர் அகஇருள் தான் அகல
போழ்வார் கதிரின் உதித்த தெய்வப் புலமைக் கம்பநாட்டு
ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே

நோக்கம்:
பாடலாசிரியர் துதி

பொருள்:

வாழ்வு ஆர்தரு வெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப் பெற  (திருவெண்ணெய்நல்லூர் என்ற ஊர் வாழும் படி வாரி வழங்கிய சடையப்ப வள்ளல் பாடல் பெற்று உலக புகழ் பெற வேண்டும் என்பதால் கம்பராமாயணத்தில் அவரது பெயரை ஆங்காங்கே வைத்தவரும்)
தாழ்வார் உயர (தாழ்ந்த நிலையில் உள்ள மக்கள் உயர உழைத்தவரும்)
புலவோர் அகஇருள் தான் அகல போழ்வார் (புலவர்கள் தங்கள் தமிழ் பாடல்களில் சொல், பொருள், மற்றும் கவி வளம் செழிப்பெடுத்து ஓடாமல் இருள் படர்ந்து தடங்கல் ஏற்படுமாயின் எவரின் கவிதைகளை படித்து எவரின் பெருக்கெடுத்து ஓடும் தமிழை பருகி மீண்டும் புத்துணர்வு பெற்று எழுச்சி அடைந்து இருள் நீங்கி ஒளி பெருவரோ)
கதிரின் உதித்த தெய்வப் புலமைக் கம்பநாட்டு ஆழ்வார் (இருளை அழிக்கின்ற நீண்ட கதிர்களை உடைய சூரியனை போல உதித்த தெய்வீக புலமை பெற்ற, கம்ப நாட்டில் தோன்றிய கம்பநாடாரின்)
பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே (திருவடிகளை சிந்திப்பவர்க்கு எதுவும் அரியது, கடினமானது இல்லை!)

விளக்கம்:
கம்பர் இருளை அழிக்கும் ஒளி வல்லமையை பெற்ற சூரியனை போல அறியாமையை அழிக்கும் ஞான வல்லமையை பெற்ற தெய்வீக புலவராம். அவர் கம்ப நாட்டில் தோன்றியவர் (இந்த பதம் இந்நூலில் இனி அடிக்கடி வரும் போல, அதனால் இனி கம்பரது இந்த புகழாரத்தை நாம் தேவை ஏற்பட்டால் ஒழிய மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டாம். பொருள் புரியாத இடத்தில் மட்டும் இதை மீண்டும் சுட்டிக் காட்டுவோம்!). அவர் எப்படி பட்டவர் தெரியுமா? திருவெண்ணெய்நல்லூர் என்ற ஊரில் அந்த ஊர் மக்கள் குறைகள் இன்றி வாழ தனது செல்வங்களை தான தர்மம் அளித்தவரும், அந்த ஊரை காத்தவருமான சடையப்ப வள்ளல் என்ற பெருமகனார் புகழ் உலகு எங்கும் பரவ வேண்டும் என்பதினால் தனது கம்பராமாயணத்தில் ஒவ்வொரு பத்து பாடல்களுக்கு நடுவே அவரின் புகழ் சேர்த்து ஒரு பாடல் பாடி சிறப்பித்தவர் கம்பர். சிறந்த வள்ளல் என்பதினால் மட்டும் சடையப்ப வள்ளல் இந்த பெருமையை பெறவில்லை அவர் கம்பருக்கும் கொடை அளித்து ஆதரித்து வளர்த்து வந்தவர். அந்த நன்றியின் வெளிப்பாடே இந்த பாடல் சமர்ப்பணம். கம்பர் தாழ்ந்த குலத்தினர் உயர்வு பெற வேண்டும், சமமாக நடத்த பட வேண்டும் என்று பாடு பட்டவர். அதை தனது கம்பராமாயண தொகுப்பில் ஆங்காங்கே காட்டியவர், தனது காப்பிய தலைவன் எப்படி இடையர் குலத்தில் தோன்றிய குகனை தனது நான்காவது தம்பியாக ஏற்றாரோ அவ்வழியே தாழ்ந்த குலத்தினரை போற்றி ஆதரித்து வாழ்ந்தவர். தனது காப்பியத்தில் தாழ்ந்த குலத்தினர் பேச்சு வழக்கில் பயன் படுத்திய சொற்களை புகுத்தி அதற்கு நீங்கா வாழ்வளித்து அதற்கும் பெருமை சேர்த்தவர். அப்படிப்பட்ட கம்பர் உயர்ந்த பேரறிவுமிக்கோருக்கும் வழிக்காட்டியாக வாழ்ந்தவர். பேரறிவு பெற்ற புலவப் பெருமக்களே தங்கள் மனதில் இருள் படர்ந்து கவித் தடங்கல் ஏற்படும் சமயத்தில் கம்பரின் எழுத்துகளை படித்து ஊன்றுகோலாக அதை ஊன்றியே தங்களது தடைகளை தாண்டி மேலும் தமிழ் பாடல்களை இயற்றுவராம்! கம்பரின் எழுத்துக்களை படித்தே அந்த ஞான ஒளியைக் கொண்டே தங்களது மன இருளை அகற்றியவர்களாம்! இத்தகு பெருமை வாய்ந்த பலரும் பணிந்து பயன் பெரும் திருவடிகளை உடைய கம்பரின் திருவடிகளை  நாமும் பணிந்து அருள் பெறுவோம். அவர் அருள் இருந்தால் நமக்கு விளங்காத தமிழ் கவியே இருக்காது. ஏனென்றால் அவரது கவி போலே கடினமான கவியும் இல்லை, அவரது கவி போலே எளிதான பொருள் மிகுந்த கவியும் இல்லை. அது எப்படி கடினமும், எளிமையும் ஒரு சேர வாய்த்திருக்கும்? விடமும், அதன் மருந்தும் ஒரு சேர வாய்த்திருப்பதில்லையா? அது போலே தான். அதனால் தான் அவர் கவிச் சக்கரவத்தி என்றலானார்!

வீட்டுப்பாடம்:
சடையப்ப வள்ளலையும் சடகோபரையும் குழப்பிக் கொள்ளக் கூடாது! இருவரும் ஒருவரே அல்ல.சடகோபர் ஒரு ஆழ்வார் ஆவார். அவர் மிகுந்த முந்தைய காலத்தில் வாழ்ந்தவர். சடையப்ப வள்ளலார் திருவெண்ணெய்நல்லூர்காரர். அவரும் கம்பரும் சடகோபருக்கு பிற்காலத்தில் பல வருடங்கள் கழித்து வாழ்ந்தவர்கள். இருவரும் கம்பரால் பாடப்பெற்றவர்கள்.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...