உன்னதமான ஒரு லட்சியத்தை அடைய விரும்பும் மனிதன், எத்தனையோ சவால்களையும், கஷ்டங்கள், சோதனைகளையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இலக்கை அடைவதற்கான பாதை மலர்ப் படுக்கையைப்போல் மென்மையானதாக அமைந்துவிடுவதில்லை.
சவால்களையும் கஷ்டங்களையும் சந்திக்கும்போது, நாம் சோர்வுற்று, துவண்டு போகாமல் இருக்க ஒரே வழி விடாமுயற்சிதான். அப்படி விடாமுயற்சியுடன் தன் லட்சியத்தை அடைந்த ஒரு மனிதரை ராமாயணம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இதிகாச, புராண, இலக்கியங்கள் எல்லாமே மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே படைக்கப்பட்டன என்பதை நாம் மறுக்க இயலாது. புனிதநதியான கங்கை, இந்த பூமிக்கு வந்ததன் பின்னணியில் பகீரதன் என்பவரின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும்தான் இருந்தன. பகீரதன் மிகுந்த பிரயத்தனத்துடன் கங்கையை பூமிக்கு வரவழைத்ததைத்தான் நாம் 'பகீரதப் பிரயத்தனம்' என்று போற்றிச் சொல்கிறோம்.
பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வரவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
ராமபிரானுக்கு, விசுவாமித்திரர் விளக்கிக் கூறிய அந்த இதிகாச நிகழ்வைப் பார்ப்போம்.
ராம, லட்சுமணர்கள் விசுவாமித்திரருடன் கங்கைநதிப் புறமாக நடந்து சென்றுகொண்டிருந்தனர். கங்கை நதியின் அழகைக் கண்டு ராமர் வியந்து நின்றார்.
கங்கையின் எழிலில் வியந்து நின்ற ராமபிரானைப் பார்த்த விசுவாமித்திரர், ''ராமா, நீ வியந்து பார்க்கும் கங்கையை இந்த பூமிக்கு வரவழைத்தது உன் முன்னோர்தான்'' என்று கூறி அந்த நிகழ்வை விவரித்தார்.
அந்த நிகழ்வு...
முற்காலத்தில் சூரிய குலத்தில் பிறந்த சகரன் என்பவர், அயோத்தியை தலைநகரமாகக் கொண்டு இந்த தேசம் முழுவதும் ஆட்சி செலுத்திவந்தார். குழந்தை இல்லாத சகரன், தன் இரண்டு மனைவியரான கேசனி, சுமதி ஆகியோருடன் தவம் இயற்றினார். பிருகு முனிவரின் ஆசியின் பேரில் கேசனி அஸமஞ்சன் என்ற மகனைப் பெற்றாள். சுமதி ஒரு சுரைப் பிண்டத்தைப் பெற, அது வெடித்து 60,000 குமாரர்கள் தோன்றினார்கள். அஸமஞ்சன் கொடும் செயல்கள் புரிந்ததால், சகரன் அவனைக் காட்டுக்குத் துரத்திவிட்டார்.
சகரனுக்கு 100 அசுவமேத யாகம் நடத்த வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. பூமியில் ஒருவர் 100 அசுவமேத யாகம் நடத்தினால், தேவேந்திரன் தன்னுடைய இந்திர பதவியை யாகம் நடத்தியவருக்கு விட்டுத் தர வேண்டும் என்பது நியதி. எனவே, சகரன் பல முனிவர்களைக் கொண்டு அசுவமேத யாகம் நடத்தினார். அசுவமேத யாகத்தின் முக்கிய அம்சமே குதிரைதான். சகரன் தேசம் முழுவதும் ஆட்சி செலுத்திவந்ததால், அவன் குதிரையை எந்த சிற்றரசனும் சிறைப்பிடிக்கவில்லை. அசுவமேத யாகம் பூர்த்தியாகிவிட்டால், எங்கே தன் இந்திர பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சிய இந்திரன், குதிரையைக் கவர்ந்து சென்று பாதாள லோகத்தில் கடும் தவம் புரிந்துகொண்டிருந்த கபிலரின் ஆசிரமத்தில் விட்டுவிட்டான்.
குதிரை காணாமல் போனதை அறிந்த சகரன், 60,000 பிள்ளைகளிடம் குதிரையை மீட்டு வரும்படிக் கூறினார். குதிரையைத் தேடி பல இடங்களிலும் அலைந்த சகர குமாரர்கள், இறுதியாக பாதாள லோகத்தில் தவமியற்றிக்கொண்டிருந்த கபிலரின் ஆசிரமத்தில் குதிரை கட்டப்பட்டிருப்பதைக் கண்டு, உண்மை தெரியாமல் கபிலரை ஏளனம் செய்தனர். கோபம் கொண்ட முனிவர், அவர்கள் அனைவரையும் எரித்துச் சாம்பலாக்கினார். விவரம் அறிந்த சகரன், தன் பேரன் அம்சுமானை அழைத்து, கபில முனிவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு குதிரையை மீட்டு வரும்படி அனுப்பினார். அதன்படி அம்சுமான் குதிரையை மீட்டு வந்ததும், அசுவமேத யாகம் வெற்றிகரமாக முடிந்தது.
தன்னுடைய 60,000 பிள்ளைகளும் நரகத்தில் துன்பப்படுவதை அறிந்த சகரன், அவர்களை நரகத் துன்பத்தில் இருந்து விடுவிக்கும்படி அம்சுமானிடம் கேட்டுக்கொண்டார். அம்சுமான், அவன் மகன் திலீபன் ஆகியோர் எவ்வளவோ முயற்சி செய்தும் சகர குமாரர்களை நரகத்தில் இருந்து மீட்க முடியவில்லை. ஆனால், திலீபனின் மகனான பகீரதன் எப்படியும் தன் முன்னோர்களை நரகத்தில் இருந்து மீட்க வேண்டும் என்ற லட்சியத்துடன், குலகுரு வசிஷ்டரிடம் சென்று ஆலோசனை கேட்டார்.
வசிஷ்ட முனிவரின் யோசனைப்படி பகீரதன், பிரம்மதேவரைக் குறித்து தவமியற்றினார். பகீரதனின் தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர், பகீரதனுக்குக் காட்சி கொடுத்ததுடன், பூமியில் உள்ள திலீபனின் முன்னோர்களின் எலும்புகளின் மீது ஆகாய கங்கை நீர் பட்டால், அவர்களுடைய ஆத்மா நற்கதி அடையும் என்று தெரிவித்தவர் தொடர்ந்து, ''ஆனால், ஆகாய கங்கை பூமியில் நேரடியாக விழுந்தால், பூமியால் தாங்க முடியாது. அந்த வேகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சிவபெருமானுக்கே உண்டு. எனவே, நீ சிவபெருமானைக் குறித்து தவமியற்ற வேண்டும்'' என்று கூறினார்.
பகீரதனும் சிவபெருமானைக் குறித்து பல நூறு ஆண்டுகள் தவமியற்றினார். தவத்தின் பயனாக சிவதரிசனமும், கேட்ட வரமும் கிடைக்கப்பெற்ற பகீரதன், தொடர்ந்து கங்கையை பூமியில் வரவழைப்பதற்காக கங்காதேவியை வேண்டி இன்னும் பல நூறு ஆண்டுகள் தவமியற்றினார். அவனுக்குக் காட்சி தந்த கங்காதேவி, ''எனக்கு பூமிக்கு வர விருப்பமில்லை. உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற சிவபெருமான் விளையாட்டாகக் கூறிய வார்த்தைகள் அவை. எனவே, நீ மறுபடியும் சிவபெருமானைக் குறித்து தவமியற்றி, நான் பூமிக்கு வருவதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற வரத்தினைப் பெற்று வா'' என்று கூறிவிட்டாள்.
எப்படியும் கங்கையை பூமிக்கு வரவழைக்க வேண்டும் என்ற தன் லட்சியத்தில் இருந்து விலக விரும்பாத பகீரதன் மறுபடியும் சிவபெருமானைக் குறித்து இன்னும் பல நூறு வருடங்கள் தவமியற்றினார். பகீரதனுக்குக் காட்சி தந்த சிவபெருமான், ஆகாய கங்கையின் வேகத்தைத் தான் தாங்கிக்கொள்வதாக உறுதி கூறி, மறுபடியும் கங்கா தேவியை பிரார்த்தித்து தவமியற்றும்படிக் கூறி மறைந்தார்.
இப்படி பலமுறை அலைக்கழிக்கப்பட்டும், பகீரதன் தன் முயற்சியில் இருந்து சற்றும் பின்வாங்கவில்லை.
மறுபடியும் கங்கா தேவியை பிரார்த்தித்து பல நூறு ஆண்டுகள் தவமியற்றினார்.
கங்கா தேவியும் பகீரதனின் விடாமுயற்சியைப் போற்றும் வகையிலும், அவருடைய தவத்தின் பயனை அவருக்கு அளிக்கும் வகையிலும் பெரும் பிரவாகமாக பூமியை நோக்கி ஆறாகப் பாய்ந்து வந்தாள். சிவபெருமானும் தாம் வாக்குக் கொடுத்தபடியே கங்கையின் வேகத்தைத் தம் திருமுடியில் தாங்கிக்கொண்டு, பூமி தாங்கும் அளவுக்கு கங்கையின் சிறு பகுதியை மட்டும் பூமியில் விழும்படிச் செய்தார்.
ஆனாலும், பகீரதனுக்கு மேலும் ஒரு சோதனை ஏற்பட்டது.
பிரவாகமாகப் பெருகி வந்த கங்கை, வழியில் ஜஹ்நு முனிவர் இயற்றிக்கொண்டிருந்த யாகத்தை அழித்துவிட்டது. கோபம் கொண்ட ஜஹ்நு முனிவர், கங்கையை அப்படியே பருகிவிட்டார். நடந்தது அறிந்த பகீரதன் முனிவரிடம் சென்று, தன்னுடைய நிலையைக் கூறி பிரார்த்தித்தார். பகீரதனின் விடாமுயற்சி மற்றும் பல நூறு ஆண்டுகள் இயற்றிய தவம் பற்றி தம் ஞானதிருஷ்டியால் ஏற்கெனவே அறிந்திருந்த ஜஹ்நு முனிவர், பகீரதனுடைய வேண்டுகோளை ஏற்று, தாம் பருகிய கங்கையை தம் காதின் வழியாக வெளிவரச் செய்தார். மறுபடியும் கங்கையின் பிரவாகம் வெளிப்பட்டது. பகீரதன் மூலம் பூமிக்கு வந்ததால் 'பகீரதி' என்ற பெயரும், ஜஹ்நு முனிவரின் காதின் வழியாக வெளிப்பட்டதால், 'ஜஹ்நவீ' என்றும் கங்கை பெயர் பெற்றாள்.
பகீரதனின் விடாமுயற்சி மற்றும் மன உறுதி பற்றிய இந்த நிகழ்ச்சியை விசுவாமித்திரர் ராமபிரானுக்கு எடுத்துக் கூறியதன் மூலம், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்துவிட்டால், ஒருவன் எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல் விடாமுயற்சியுடன் தன் லட்சியத்தை அடைவது உறுதி என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
No comments:
Post a Comment