Mythical Vedic Bird Homa in Iran
சங்கத் தமிழ் இலக்கியத்தில் ஒரு அதிசய விஷயம் இருக்கிறது. அசுணமா என்னும் ஒரு மிருகம் பற்றிய தகவல் இது. இப்போது இந்த விலங்கு உலகில் இல்லை. எவ்வளவோ விலங்குகள் இப்படி அழிந்து போய்விட்டன. படங்களில் மட்டுமே காணலாம். தொல்விலங்கியல் (Paleontolgy or Paleo zoology) என்னும் துறை இது போன்ற விலங்குகளின் எலும்புக்கூடுகள் ,படிம அச்சுக்கள் (Fossils) ஆகியவற்றை சேகரித்து வைத்துள்ளன. ஆனால் தமிழ் இலக்கியத்தில் உள்ள அசுணமா பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. தடயங்களும் கிடைக்கவில்லை.
வேதத்திலும் ராமகிருஷ்ண பரமஹம்சர் கதையிலும் வரும் ஹோமா பறவை (Homa Bird) பற்றி முன்னர் எழுதினேன். அதைப் போன்றே இதுவும் காலப்போக்கில் அழிந்து போய் இருக்கவேண்டும். இதோ அந்த அதிசய அசுணமா பற்றிய விவரம்:--
நற்றிணைப் பாடல் 244, பாடியவர் கூற்றங்குமரனார்
“விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றே”
பொருள்:---மழை கொட்டும் குளிர்ந்த மலைப்பகுதி. அங்கே கூதிர்க் காலத்தில் கூதாளி பூ மலர்ந்து மணம் வீசும். அழகிய வண்டு மிக இனிமையாக ரீங்காரம் செய்யும். அதை நறுமணம் வீசும் குகையில் இருந்து அசுணம் என்னும் விலங்கு கூர்ந்து கேட்கும்.
Chart of Mythical animals around the world
நற்றிணைப் பாடல் 304, பாடியவர்:- மாறோக்கத்து நப்பசலையார்
“மணிமிடை பொன்னின் மாமை சாய, என்
அணிநலம் சிதைக்குமார் பசலை; அதனால்
அசுணம் கொல்பவர் கைபோல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே.
பொருள்:-- (என் காதலன் என்னோடு இருந்தால் என் அழகு குன்றாது). அவர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டால், தங்கத்தையும் நீலமணியையும் சேர்த்துக் கட்டிய மாlலையில், தங்கத்தின் அழகு குன்றுவது போல என் மேனி அழகு குன்றும். பசலை தோன்றி அழகைக் கெடுத்துவிடும். அதனால் குளிர்ந்த மணம் கமழும் மாலை அணிந்த என் காதலன் மார்பு அசுணம் என்னும் விலங்கைக் கொல்பவர் கை போன்றது. அதாவது இன்பம் தந்து பின்னர் துன்பத்தைக் கொடுக்கும்.
இதன் விளக்கம் என்ன கூறுகிறது என்றால், அசுணம் என்னும் சங்கீத ஞானம் ( இசையறி விலங்கு ) உடைய விலங்கைக் கொல்வோர் முதலில் யாழ் என்னும் கருவியை வாசிப்பர். அதைக் கேட்டு அது மகிழ்ந்து அருகில் வரும். பின்னர் பெரிய டாமாரம், முரசு முதலியவைகளை வாசிப்பர். அந்த சப்தம் தாங்காமல் அது அப்படியே இறாந்துவிடும். இது போல என் காதலர் பிரிந்தால் என்னை வாட்டி வதைத்து கொல்வது போலாகும் என்று தலைவி உவமை காட்டுகிறாள்.
அகநானூற்றிலும் ஒரு பாடல் உண்டு.
Vedic Bird Homa is the logo for Muslim Iran Airways
பாடல் 88; பாடியவர்:-- ஈழத்துப் பூதந்தேவன்
இரும்புலி தொலைத்த பெருங் கை யானைக்
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து
இருங்கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி.
கொடுவிரல் உளியம் கெண்டும்
வடி ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?
பொருள்:---“புலியைக் கொல்லும் பெரிய கை உடையது யானை. அதன் கன்னத்தில் இருந்து மத நீர் வடியும். அதில் வண்டின் கூட்டம் மொய்க்கும். அதன் ரீங்காரத்தை யாழின் ஒலி என்று கருதி பெரிய குகைகளில் உள்ள அசுணப் பறவைகள் உற்றுக் கேட்கும். அத்தகைய காட்டில் பாம்புகள் இறந்து போகும் படி கரடிகள் புற்றுகளைத் தோண்டும். என் காதலன் இப்படிப்பட்ட கஷ்டமான வழியில் சென்றானோ?”
நான்மணிக் கடிகை என்ற பிற்கால பதினென் கீழ்க்கணக்கு நூலிலும் ‘அசுணமா’ வருகிறது. இதில் முதல் தடவையாக அசுணம்+மா (மிருகம், விலங்கு) என்ற சொல் வருவதால் அசுணம் என்பது பறவை இல்லை என்பதும் தெரிகிறது:
Hindu Mythical animal MAKARA in China
பறைபட வாழா அசுணமா உள்ளம்
குறைபட வாழார் உரவோர் – நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாம் சால்பு (நான்மணிக்கடிகை, பாடல் 3)
பொருள்:--- பறையின் ஒலி செவியில் விழுந்தால் ‘அசுணமா’க்கள் உயிர் வாழாது. அறிவுடையோர் ஊக்கம் குறைந்துவிட்டால் உயிர்வாழ மாட்டார் (காண்க-1). மூங்கில்கள் நெல் (தானியம்) தோன்றியவுடன் அழிந்துவிடும். மானமுள்ளவன் அவச்சொல் ஏற்பட்டால் உயிர்வாழ மாட்டான் (காண்க--2).
(1).அதாவது பயனுடைய செயல்களைச் செய்யும் வலிமை போய்விட்டால் தர்மன் முதலிய பஞ்ச பாண்டவர்கள் மேரு மலையை நோக்கி நடந்தே உயிர்விட்டது போல.. (2.)அதாவது சிறைவைக்கப்பட்ட சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை தண்ணீர் கேட்டவுடன் அவமானப் படுத்தப்பட்டான். உடனே உயிர் துறந்தான், கோவலனுக்கு மரணதண்டனை விதித்தது தவறு என்று கண்ணகி சுட்டிக் காட்டியவுடன் பாண்டிய மன்னனும் அவனது மனைவியும் உடனே உயிர்விட்டனர்.
Hindu Makara in Thailand
அசுணம் பற்றி எனது ஆராய்ச்சி முடிவுகள்
1.மூன்று சங்க இலக்கியப் பாடல்களில் அகநானூற்று உரையில் மட்டும் பறவை என்று வருகிறது. பாட்டில் விலங்கா பறவையா என்ற சொல் இல்லை. உரைகாரர்தான் அவ்வாறு கூறுகிறர். குகையில் வாழக்கூடியது விலங்காகத்தான் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.
2.இது குறிஞ்சி நிலப் பாடல்களில் மட்டும் மூன்று புலவரால் பாடப் படுவதால் இது மலையும் மலை சார்ந்த பகுதிகளிலும் வாழ்ந்த ஒரு விலங்கு என்றே கருத வேண்டும்.
3.மேலும் யாழ் வாசித்து பின்னர் பெரிய பறை (முரசு) ஒலி எழுப்பி கொன்ற செய்தியும் இருப்பதால் தமிழர்கள் இதை மாமிசத்துக்காக வேட்டையாடியே கொன்றிருக்கலாம்.
4.ஒலி அலைகளுக்கு எவ்வளவு சக்தி உண்டு என்பதை இது காட்டுகிறது. இப்படிப்பட்டதொரு விலங்கு,--- சப்தம் அதிகரிக்கும் உலகில்--- தாமாகவே அழிந்து போயிருக்கவும் வாய்ப்பு உண்டு.
5.இது மலைக் குகைகளில் வாழும் என்பதை எல்லா புலவர்களும் கூறுவதால் அந்தத் தகவல் சரியாகவே இருக்கும்.
6.இதைப்பற்றி சங்க நூல்களில் மூன்றே குறிப்புகள் மட்டும் வருவதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது அபூர்வ விலங்கு ஆகியிருக்க வேண்டும்.
7. நவீன கால ஆராய்ச்சிகள் இது உண்மை என்றே காட்டுகின்றன. 185 டெசிபல் சப்தத்துக்கு மேல் கேட்டால் உடனே மரணம் சம்பவிக்கும். அதை அடிப்படையாக வைத்து சோனிக் பாம்ஸ் (சப்த வெடிகுண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்து வெளியாகௌம் கீழ்மட்ட அலைவரிசை ஒலிகள் டால்பின், திமிங்கிலம் போன்ற பிராணிகளைக் கொன்றதௌ அல்லது குழப்பிவிட்டது தற்கால ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டால்பின் எனப்படும் மிக புத்திசாலியான கடல் விலங்கும் திமிங்கிலங்களும் கூட்டமாகக் கடற்கரைக்கு வந்து “தற்கொலை” செய்துகொள்வதற்கு நீர்மூழ்கிக் கப்பலின் ஒலி அலைகளே காரணம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Mythical animal makara
கம்ப ராமாயணத்தில் அசுணம்
கம்பனும் ராமாயணத்தில் அசுணமா பற்றிப் பாடுகிறான்.
துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பாஅரோ.
பொருள்:--சான்றோர்கள் பல விருத்தப் பாக்களைக் கேட்டிருப்பார்கள். அந்தப் பாக்களுக்கு உறைவிடமாகத் திகழும் சான்றோர்களுக்கு என் பாடலை ஓதினால் இசை என்னும் தேனைச் சாப்பிட்ட சிறந்த விலங்கின் காதுகளில் பறை ஒலி விழுந்தது போல இருக்கும்.
அபிதான சிந்தாமணியில் சிங்காரவேலு முதலியார் கீழ்கண்ட செய்தியை எழுதி வைத்துள்ளார்.:--
அசுணம் : இது பேடையை விட்டு நீங்காத பறவை இதனிறம் உருவம் முதலிய நன்றாக விளங்கவில்லை. இதன் ஓசையை தலவனீக்கத்தில் தலைவி பொறாமைக்குத்த் தமிழ்நூலார் உவமை கூறுவர்.. (இந்தத் தகவல் பறவை என்று சொல்லுவது சரியெனப் படவில்லை).
Mythical animal Griffin
மான் வேட்டை பற்றி ஆதி சங்கரர்
ஆதி சங்கரர் பாடிய விவேக சூடாமணி தோத்திரத்தில் பாடல் 76-ல் மான்களை இசை பாடி பிடிக்கும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறார். ஆக அசுணமா என்பது இது தொடர்புடைய ஒரு விலங்காக இருக்கலாம்.
பாம்புகளுக்கு செவிகளே இல்லை என்று உயிரியல் நிபுணர்கள் கூறியபோதும் மகுடி ஊதி பாம்பு பிடிக்கும் பாம்புப் பிடாரர் பற்றி இந்தக் காலம் வரை செய்திகள் கிடைக்கின்றன.( பாம்புக்கு கட் செவி= கண்களே செவி என்று தமிழில் ஒரு சொல் உண்டு.
No comments:
Post a Comment