Saturday 15 December 2018

மாங்கல்ய தோஷம் நீக்கும் திருமங்கலங்குடி பிராணநாதேஸ்வரர் ஸ்ரீ மங்களாம்பிகை ஆலயம்

திருமங்கலங்குடி பிராணநாதேஸ்வரர் ஸ்ரீ மங்களாம்பிகை ஆலயம்-வீடியோ
சென்னை: நவக்கிரக நாயகர்கள் சாப விமோசனம் பெற அருளிய, திருமங்கலக்குடி பிராணநாதேசுவரரையும், மங்களாம்பிகையையும் வெள்ளிக்கிழமையான இன்று தரிசனம் செய்யலாம். இது மாங்கல்ய தோஷம் நீக்கும் பரிகார தலமாகும். குஷ்ட ரோக நிவர்த்தி தலமும் ஆகும்.
கும்பகோணத்தை சுற்றிலும் நவகிரக தலங்கள் உள்ளன. சூரியனார் கோவிலில் இருந்து நவகிரக தலங்களை தரிசிக்கும் முன்பு திருமங்கலங்குடி சென்று அங்குள்ள பிராணநாதேஸ்வரரை தரிசிக்கலாம்.
தீர்க்க சுமங்கலி பவ என்று திருமணம் செய்த பெண்ணை பெரியோர்கள் வாழ்த்துவார்கள். ஒரு பெண்ணின் மாங்கல்ய பலம் அந்த பெண்ணின் கணவனை காக்கும். மாங்கல்ய தோஷம் இருந்தால் அந்த பெண்ணிற்கு திருமண தடை ஏற்படும்.
பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 8ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானம். இது சுத்தமாக இருக்க வேண்டும். பாவ கிரகங்களின் சேர்க்கை, பார்வை இருக்கக் கூடாது. 8ஆமிடத்தில் சூரியன், செவ்வாய், சனி , ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. 8ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்கள் இருந்து, அந்த இடம், அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும்.

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?
பெண் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானமான எட்டாமிடத்தில் சனியும் சூரியனும் நிற்பது தோஷம். ஆயுள் ஸ்தானத்தில் நிச சுக்கிரன், சூரியனுடன் நிற்பது மாங்கல்ய தோஷம். எட்டாமிடத்தில் சூரியன் செவ்வாயுடன் சேர்ந்து இருந்தாலும் மாங்கல்ய தோஷமே. எட்டாமிடத்தில் சனி நிற்க அதை செவ்வாய் சூரியன், ராகு, கேது பார்ப்பதும் தோஷமே. எட்டாம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தாலும் அந்த வீட்டை குரு, சுக்கிரன் பார்த்தால் தோஷம் விலகும்.

தேவார பாடல் பெற்ற தலம்
திருமங்கலக்குடி என்ற இந்த தலம் திருவிடைமருதூர் அருகில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 38ஆவது ஆகும். இத்தலத்திற்குப் பஞ்ச மங்கள க்ஷேத்ரம் என்று பெயர். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்களாம்பிகை, மங்களதீர்த்தம், மங்கலக்குடி என்ற ஊர்ப்பெயர். இந்தக் கோவில் முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த பழமையான கோவிலை சம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரத்தில் பாடியுள்ளனர்.

வரிப்பணத்தில் கோவில்
இக்கோவிலை மன்னனுக்குத் தெரிவிக்காமல் கட்டிய அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அமைச்சரின் மனைவி இத்தல இறைவனையும் அம்பாள் மங்களாம்பிகையையும் தொழுது நின்றாள். அப்போது, இறைவி, இறைவனிடம் நிலைமையை இறைவனுக்கு உணர்த்தி அமைச்சரின் உயிரை காத்ததாக தல வரலாறு. அது என்ன கதை யார் அந்த அமைச்சர் தண்டனை கொடுத்த மன்னன் யார் என்பதை பார்க்கலாம்.

மன்னரின் கோபம்
முதலாம் குலோத்துங்கசோழனிடம், அலைவாணர் என்ற அமைச்சர் இருந்தார். சிவபெருமானுக்கு தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் கோவில் கட்ட வேண்டும் என்ற ஆசையால் வரி வசூல் செய்த பணத்தை செலவு செய்து கோவில் கட்டினார். அரசின் வரிப்பணத்தை வைத்து அமைச்சர் கோவில் கட்டியிருக்கிறார் என்று கேள்விப்பட்ட மன்னன் கோபம் கொண்டான்.

மங்காளம்பிகையிடம் வேண்டுதல்
மன்னன் அமைச்சருக்கு மரண தண்டனை விதித்தார். அமைச்சருக்கு இப்படி நடக்குமென்று முன்பே தெரிந்திருந்ததால், தனது உடலை தாம் கோயில் கட்டும் ஊரிலேயே தகனம் செய்யுமாறு கோரியிருந்தான். அதன்படி அவனது உடலைத் திருமங்கலக்குடிக்கு எடுத்து வந்தனர். கணவனின் மரணத்தை அறிந்த அவரது மனைவி, அவர் கட்டிய கோவிலில் உள்ள இறைவனிடமும், இறைவியிடமும் கண்ணீர் பெருக கதறி அழுதாள். தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டினாள்.

மாங்கல்யம் காத்த நாயகி
இறைவன் அருளால் இறந்து போன அலைவாணர் உயிர்பிழைத்தார். கோவிலுக்கு உயிரோடு நடந்து வந்தார். தன் பக்தனுக்கு மீண்டும் பிராணனை அருளி உயிர்ப்பித்ததால், இங்குள்ள இறைவன் ‘பிராண நாதேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். அமைச்சரின் மனைவியின் மாங்கல்யத்தைக் காத்து அருள் புரிந்ததால் இத்தல இறைவி மங்களாம்பிகை என அழைக்கப்படுகிறார்.

தயிர்சாதம் பிரசாதம்
அம்பாள் மங்களாம்பிகை கருணைக் கடலாகவே காட்சியளிக்கிறாள். இறைவன் பிராணநாதேஸ்வரர்.
இது குஷ்டரோக நிவர்த்தித்தலம். இங்கு ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மாங்கல்ய தோஷம் நீங்கும்
அன்னையின் கையில் இருக்கும் மாங்கல்ய சரடு, பெண்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது.
பிராண நாதேஸ்வரருக்கு 11 ஞாயிற்றுக்கிழமைகள் அர்ச்சனை செய்து வந்தால், நவக்கிரக தோஷம், பூர்வஜென்ம தோஷம் அனைத்தும் விலகும். தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி தலம்.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...