Thursday, 15 November 2018

நட்சத்திர அதிசயங்கள்: #கானோபஸ் எனப்படும் #அகத்தியர் #நட்சத்திரம்.

அகஸ்திய நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போதெல்லாம் கடல் நீர் சற்று வற்றுகிறது என அறிவியல் கூறுகிறது. அது உதிக்கும் போது அகத்திப் பூ மலர்கிறது. எண்ணற்ற அதிசயங்களைக் கொண்ட அகஸ்திய நட்சத்திரத்தைப் பார்ப்போம்!

கானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று. இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது!இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லை!இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.

27 நட்சத்திரங்கள் என்ற வரிசையில் சேராவிட்டாலும் கூட தன் தவத்தின் வலிமையால் தனியொரு இடத்தைப் பிடித்தவர் அகத்தியர்!சூரியன் சிம்ம ராசியிலிருந்து மறையும் போது கும்ப ராசி உதயமாகிறது. கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இவருக்கு கும்ப முனி என்ற பெயர் பொருத்தம் தானே!
***********************************************************

கடல் நீரைக் குடித்த கதை

அகத்தியர் கடல் நீரைக் குடித்த கதையை இன்றைய அறிவியல் மிகவும் பொருத்தமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ள சிறிது அடிப்படை வானவியல் அறிவு வேண்டும். சூரியன் மேற்கே மறைந்தவுடன் ஒரு நட்சத்திரம் கிழக்கே உதிப்பதை Acronycal rising அல்லது தினசரி உதயம் என்கிறோம். சூரியனின் அருகில் ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியனின் ஒளியால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது. சூரியனை விட்டுத் தொலைதூரம் சென்றவுடன் மீண்டும் பிரகாசம் பெற்று நம் கண்களுக்குத் தெரிகிறது. இப்படி ஒரு நட்சத்திரம் சூரியனின் அருகில் வந்ததால் ஒளி மங்கி நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, பிறகு தள்ளிச் சென்றவுடன் ஒளி பெற்று மீண்டும் நம் கண்ணுக்கு முதலில் தெரியும் தினத்தை அல்லது அந்த நட்சத்திரத்தின் உதயத்தை Heliacal rising என்கிறோம்.இந்த முதல் உதயத்தை ஒட்டியே நம் முன்னோர்கள் அந்தந்த நட்சத்திரத்திற்கும் அதற்கான தெய்வங்களுக்கும் விழாவை ஏற்படுத்தினர்.ஒவ்வொரு நட்சத்திர உதயத்தையும் அப்போது ஏற்படுத்தப்பட்டு நடந்து வரும் விழாவையும் உற்று நோக்கினால் நமது முன்னோரின் கூரிய அறிவுத் திறனும் அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் அர்த்தமும் விழாவின் மகிமையும் எளிதில் புரியும்.

அகத்திய நட்சத்திரத்தின் வருடாந்திர உதயம் உஜ்ஜயினியில் புரட்டாசி மாதம் 23ம் தேதியன்று ஏற்படுகிறது (பண்டித ரகுநந்தனர் இதை புரட்டாசி 17ம் தேதி என்று குறிப்பிடுகிறார்) சூரியன் ரோஹிணியில் செல்லும் போது அகத்தியர் மறைகிறார். பின்னர் சூரியன் ஹஸ்தத்திற்கு வரும் போது பிரகாசமாகி மீண்டும் நம் கண்களுக்குத் தெரிகிறார்,அதாவது சுமார் நான்கு மாத காலம் சூரிய ஒளியால் அகத்தியர் நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்.அகத்தியர் தோன்றியவுடன் மழைக்காலமும் சரியாக முடிகிறது.ஆகவே தான் மழைக்காலம் முடிந்தவுடன் தோன்றும் அகத்தியர் மழை நீர் சேரும் கடலைக் குடித்து விட்டார் என்று கூறப்பட்டது. வங்காளத்தில் இன்றும் கூட ஆகஸ்ட் -செப்டம்பரில் அகத்தியருக்கு இந்தப் பருவ மாறுதலை ஒட்டி விழா நடைபெறுகிறது. அகத்தியரின் வருடாந்திர உதயம் பற்றி வானவியல் நிபுணர் ஜே.பெண்ட்லி விரிவாக எழுதியுள்ளார்!

நவீன அறிவியல் ஆராய்ச்சியின் படி அதிசயிக்கத் தக்க உண்மை இப்போது வெளிப்படுகிறது. எப்போதெல்லாம் அகத்தியர் பூமியை நெருங்கி வருகிறாரோ அப்போதெல்லாம் கடல் நீர் ஆவியாகி சிறிது வற்றி விடுகிறதாம்!

அகத்தியர் பூமியை சமன் செய்த புராணக் கதை

இனி அகத்தியர் பூமியைச் சமன் செய்த கதைக்கு வருவோம்.உஜ்ஜயினி வழியாகவே பூமியின் முதல் தீர்க்க ரேகை செல்கிறது!. இந்த ரேகையை வைத்தே அனைத்துக் காலக் கணக்கீடுகளும் செய்யப்படுகின்றன. லாடிட்யூட் எனப்படும் அட்சய ரேகையின் படி அகத்தியர் இருக்கும் இடம் 80 டிகிரி தெற்கு.ஆகவே அட்சய ரேகையின் படி 10 டிகிரி வடக்கிற்கு மேல் இது தெரியாது.வடக்கே உள்ள உஜ்ஜயினி 24 டிகிரி தெற்கு என்ற நிலையில் உள்ள நகரம்.

வானவியல் நிபுணரான வராஹமிஹிரர் காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது. அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும்.அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை.ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது.கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 24 டிகிரி ஆனது.அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.

இந்த விளக்கத்துடன் இன்னொரு விளக்கத்தையும் வானவியலோடு புராணத்தை இணைத்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் நம் முன் வைக்கின்றனர்.ஒரு காலத்தில் வடக்கே துருவ நட்சத்திரமாக விளங்கிய அபிஜித் நட்சத்திரம் அந்த அந்தஸ்தை இழந்து தெற்கே அகஸ்தியர் அந்த அந்தஸ்தைப் பெற்றார். முதலில் வடக்கே இருந்த அபிஜித்தே அகஸ்தியர் என அழைக்கப்பட்டார். பிறகு இடைவிடாத வான சுழற்சி காரணமாக தெற்கே இருந்த நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக அந்தஸ்தைப் பெற்றவுடன் வடக்கே இருந்த அகத்தியர் தெற்கே வந்ததாகக் கூறப்பட்டது. பதவியில் இருப்பவருக்கே அந்தஸ்து என்ற ரீதியில் இந்த வானவியல் சுழற்சியைப் பார்த்தால் எளிதில் விவரம் புரியும்.ஆதியில் அபிஜித்தைச் சேர்த்து 28 நட்சத்திரங்களை நமது வேதம் உள்ளிட்ட நூல்கள் கூறுகின்றன. தன் அந்தஸ்தை அபிஜித் இழந்தவுடன் அது நீக்கப்பட்டு 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கை ஆகி விட்டது. அபிஜித் நமது மானுட வாழ்க்கையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்ற போது இந்த மாறுதல் ஏற்பட்டது!

‘அக’ என்றால் மலை என்று பொருள். ‘ஸ்தி’ என்றால் அமுக்குவது என்று பொருள். பூமி என்னும் மலையை இரு துருவங்களிலும் அமுக்கியவரே அகஸ்தியர் என்பதை புராணம் விரிவாக தன் பாணியில் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு விளக்குகிறது. வானவியல் கணிதத்தை மேலே கூறிய படி டிகிரியை வைத்து தூரத்தைச் சொன்னால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலருக்கும் கூட பல முறை படித்தால் மட்டுமே இது புரியக் கூடும் என்ற நிலையில் அகத்தியரின் வரலாறு எளிமைப் படுத்தப்பட்டு சிறந்த கதையாக ஆனது சரி தானே!

அகத்தியர் நட்சத்திரம் உதிக்கும் போது அகத்திப் பூ மலர்வதால் அந்தச் செடிக்கு அகத்திக் கீரை என நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரான அகத்தியர் நந்தி தேவருடன் ஒவ்வொரு மூலிகையையும் ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களைத் தொகுத்து மனித குலம் நோயின்றி வாழ வழி வகை செய்துள்ளார்.

வானத்தை உற்று நோக்கி புராணங்களைத் தெளிவு படப் படித்து அறிவியலை அலசிப் பின்னர் கம்பனைப் படித்தால் நன்கு ரசிக்க முடியும்! கம்பன் ஆரண்ய காண்டத்தில் அகத்தியன் பற்றிக் கூறும் வாக்கியங்களான “தூய கடல் நீரை உண்டு அது துரந்தான்” என்பதை வானவியல் அறிவுடன் சேர்த்துப் படித்தால் அர்த்தம் புரிந்து மகிழலாம். அகத்தியனை இத்தோடு மட்டும் கம்பன் புகழவில்லை: தமிழ் தந்த முனிவரான அவரை “நிழல்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்” எனவும் புகழ்கிறான்.

குருமுனி, கும்பமுனி என அழைக்கப்படும் ஆசான் அகத்தீசரின் பெருமை மிகவும் உயர்ந்தது! அளவிடமுடியாதது.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...