தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். இந்த கோவில் உள்ள மூலவரின் சிலையை கிட்டதட்ட 350 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுப் படையினர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடல் கடந்து சென்ற அந்த சிலை, சில காலத்திற்கு பிறகு மீண்டு கோவிலை வந்தடைந்துள்ளது. இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா? சிலையை கொள்ளையடித்த டச்சுப் படையினருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
1648 ஆம் ஆண்டு கடல் மார்கமாக வந்த டச்சுப் படையினர் திருச்செந்தூர் முருகன் கோவிலை கைப்பற்றினர். அந்த சமயத்தில் அப்பகுதியை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் ஒரு சிறந்த முருக பக்தர். டச்சுப் படையினர் கோவிலை கைப்பற்றிய செய்தி கேட்டு வெகுண்டெழுந்த திருமலை நாயக்கர், பெரும் படையை திரட்டிக்கொண்டு சென்று டச்சுப் படைகளை எதிர்த்தார். அனால் அம்முயற்சியில் அவர் வெற்றி பெறவில்லை.
திருக்கோவிலில் இருந்த நகைகளை கைப் பற்றியதோடு நில்லாமல், சண்முகர் – நடராஜர் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளையும் தங்க விக்கிரகங்கள் எனக் கருதி எடுத்துக் கொண்ட டச்சுப் படையினர், மீண்டும் கடல் வழியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மேலும், செல்லும் வழியிலேயே உற்சவ மூர்த்திகளை உருக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அச்சமயம் கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. காற்றும் பெரும் வேகம் கொண்டு சூறாவளி என மாற, கப்பல் கடுமையாக ஆட்டம் காணத் துவங்கியது. டச்சுப் படையினர் மிகவும் கலங்கி ஏக மனதாக முடிவெடுத்து, தாங்கள் கைப்பற்றிய உற்சவ மூர்த்திகளை கடலில் சேர்த்துவிட்டனர்.
அந்த கணமே கடல் நீரின் கொந்தளிப்பு தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைந்தது கண்டு டச்சுப் படையினர் பெரு வியப்புற்றனர். இந்த வரலாற்று நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவ குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின், உற்சவ மூர்த்திகளை மீண்டும் செய்விக்கும் பணி தொடங்கப் பெற்றது.
அதே சமயம், வடமலையப்பர் எனும் பக்தரின் கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றி, உற்சவ மூர்த்திகள் கடலில் இருக்கும் இடத்தை காண்பித்து, அடையாளமாக ஒரு எலுமிச்சை கனியும் கருடப்பறவையும் தோன்றும் என்று அறிவித்து அருளினார். திருவருள் திறத்தை வியந்து போற்றிய வடமலையப்பர் கடலில் மூர்த்திகளை தேடும் பணியைத் துவங்கினார்.
குறிப்பிட்ட இடத்தில் எலுமிச்சைக்கனி மிதந்து வருவதையும் அதை கருடப் பறவையும் வானில் வட்டமிடுவதையும் கண்டு கடலுக்கு அடியில் நீந்திச் சென்று உற்சவ மூர்த்திகளை வெளிக் கொணர்ந்தனர்.
No comments:
Post a Comment