Saturday, 6 October 2018

இந்திய படுக்கை அதிசயங்கள்

இந்திய நாகரீகம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உச்சகட்டத்தை எய்தி இருந்ததை சங்க இலக்கியம் மூலமாகவும், சம்ஸ்கிருத காவியங்கள் மூலமாகவும் அறிய முடிகிறது. அப்போது இந்தியா முழுதும் வாழ்ந்த இந்துக்கள் தொடாத கலையே இல்லை, தொடாத துறையே இல்லை. பௌத்தர்களும் சமணர்களும் துறவறம் ஒன்றே வழி என்று வலியுறுத்திய காலத்தில் இந்துக்கள் இல்லறமே (கிருஹாசஸ்தாஸ்ரம்) மற்ற மூன்று அறங்களையும் விடச் சிறந்தது என்று பறை சாற்றினர்.

மனுதர்ம சாஸ்திரத்தில் மனு எழுதியதை (மனு 3-78) அப்படியே வள்ளுவனும் மொழிபெயர்த்தான்:

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41)

சந்யாசி, பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தன் ஆகிய மூவரையும் ஆதரிப்பவன் கிருஹஸ்தன் என்பது இக்குறளின் பொருள்.

இல்லறம் தழைத்தால் நல்லறம் ஓங்கும். இல்லறம் தொடர்பான 64 கலைகள் பெருகும். இப்படி உண்மையிலேயே கலைகள் பெருகியதால் நாடகம், நாட்டியம் தொடர்பாக பரதம் என்னும் நாட்டிய சாஸ்திரத்தை பரத முனிவர் வடமொழியில் எழுதினார். வாத்ஸ்யாயன மகரிஷி ‘செக்ஸ்’ பற்றி எழுதினார். பாணிணி இலக்கணம் பற்றி எழுதினார். வராகமிகிரர், வான சாஸ்திரம், ஜோதிடம், மற்ற அறிவியல் துறைகள் பற்றி எழுதினார்.

படுக்கை செய்வது, படுக்கையை பூக்கள் கொண்டு அலங்கரிப்பது, கட்டில்கள் செய்வது முதலிய கலைகள் வளர்ந்தன. இதை நிரூபிக்க பல கதைகள் இருக்கின்றன. இதோ விக்ரமாதித்தனும் வேதாளமும் என்ற கதைத் தொகுப்பில் உள்ள ஒரு கதை:–

ஒரு ஊரில் இரண்டு புகழ்பெற்ற ஆட்கள் வாழ்ந்தனர். அவர்களுடைய பெயர்கள் போஜனவிலாசின் (சாப்பாட்டு மன்னன்), சய்யவிலாசின் (படுக்கை மன்னன்). இருவரும் அவரவர் துறையில் அதிசயக்கத் தக்க அளவில் சிறந்து விளங்கியதால்தான் புகழ் ஓங்கியது இவர்களுடைய புகழ் ராஜாவின் காதுகளையும் எட்டவே, அவன் அவர்களைச் சோதித்து பரிசு கொடுக்க விரும்பினான்.

ராஜா அழைத்தவுடன் இருவரும் வந்தனர். இருவரில் யார் அதிகம் சிறந்தவரோ அவருக்குப் பரிசு என்று அறிவித்தான். இருவரும் எல்லா நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டனர். ஒருநாள் மிகப் பெரிய விருந்துக்கு ஏற்பாடாகியது. அரண்மனை இதுவரை காணாத அளவுக்கு அதிகமான அறுசுவை பதார்த்தங்கள் தயாராயின. நாட்டிலேயே தலை சிறந்த சமையல்காரர்கள், மிகச் சிறந்த சாமான்களைக் கொண்டு சமைத்தனர். சாப்பாடு தயாரானவுடன் மன்னரும் அவனும் (சாப்பாட்டு மன்னன்) ஒரே வரிசையில் உட்கார்ந்தனர். அங்கிருந்த நூற்றுக்கணக்கான பண்டங்களைப் பார்த்தவுடன் அவன் மயக்கம் போட்டுவிடுவான் என்று அரசன் எண்ணியிருந்தான். ஆனால் அவனோ இலையில் போட்ட எதையும் தொடக்கூட இல்லை!

மன்னனுக்கு ஒரு பக்கம் எரிச்சல், மறுபக்கம் வியப்பு. உபவாசம் இருப்பவனையும் தின்னத் தூண்டும் சுவைமிகு, மணம் மிகு உணவு. அப்படியும் தொடவில்ல. ஆனால் அவனைக் காரணம் கேட்டபோது இந்த அரிசிச் சோற்றில் சுடுகாட்டு அரிசி வாடை அடிக்கிறது என்றான். அரசனுக்கு அதிபயங்கர கோபம். இருந்தபோதிலும் ஒருவனைத் தண்டிக்கும் முன்னர், தீர விசாரிப்பதே முறை என்று எண்ணி அத்தனை சமையல்காரர்கள், கணக்குப்பிள்ளைகள் எல்லோரையும் அழைத்து விசாரித்தான்.

சமையல்காரன் எந்தக் கடையில் அரிசி வாங்கினானோ அந்த வியாபாரியை விசாரித்ததில் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் சாகுபடி செய்வோனிடம் வாங்கிய நெல்லைத் தான் விற்றதாகச் சொன்னான். அரசனுக்கு ஒரே வியப்பு. எவ்வளவு மணப் பொருட்களை சேர்த்தபோதும் சாப்பாட்டு மன்னன் ஒரு குறையைக் கண்டு பிடித்துவிட்டான் என்று பாராட்டி அவனுக்குப் பரிசுகள் தந்தார் ராஜா.

அடுத்ததாக படுக்கை மன்னன் தனது திறமையைக் காட்ட முன்வந்தான். தலை சிறந்த படுக்கை கட்டில் நிபுணர்கள் வந்து உலகிலேயே தலை சிறந்த படுக்கையை தயார் செய்து அலங்ரித்தனர். அதில் அவனைப் படுக்கும்படி ராஜா கூறினார். அவனோ படுத்த மாத்திரத்தில் படுக்கையில் இருந்து குதித்து எழுந்து விட்டான். ஏதோ உறுத்துகிறது என்று முறையிட்டான் ராஜாவுடனே சிரித்துவிட்டுச் சோதித்துப் பார்ப்போமே என்றார். படுக்கையில் ஏழு போர்வைகள் ஏழு மெத்தைகளுக்கு கீழே ஒரு ‘முடி’ இருந்தது.. ராஜா அதைப் பார்த்தவுடன் மேலும் அதிசயித்து முன்னைவிட ஏராளமான பரிசுகளைக் கொடுத்தனுப்பினான்.

ஆக சாப்பாடானாலும் படுக்கையானாலும் எல்லாவற்றிலும் முடிசூடா மன்னர்கள் இருந்த நாடு பாரத நாடு. சங்க இலக்கிய நூலான ‘’நெடுநல் வாடை’’யில் அன்னப் பறவையின் இறக்கை மென்மை போல (அன்னத்தூவி மயிர் போல) வெண்மையான, மென்மையான படுக்கைகள் இருந்ததாக எழுதி இருக்கின்றனர். தந்தக் கட்டிகள் பற்றியும் தமிழ் இலக்கியம் பேசுகிறது. இதை வடமொழி நாடகங்களும் மெய்ப்பிக்கின்றன.

சாகுந்தலம் என்ற நாடகம் எழுதி உலகப் புகழ் அடைந்த காளிதாசன், சகுந்தலை என்பவள் காதல் வயப்பட்டவுடன் மலர்ப் படுக்கை அமைத்து தூங்கினாள் என்று எழுதினான்.

அவனுக்கு முன் 13 சம்ஸ்கிருத நாடகங்களை எழுதிப் புகழ் பெற்ற பாஷா என்பவன் எழுதிய ‘’ஸ்வப்னவாசவதத்த’’மில் உதயணனின் இரண்டாவது மனைவி பத்மாவதிக்கு தலைவலி வரவே, குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்ட சமுத்ரக் க்ருஹத்தில் மலர்ப் படுக்கையில் படுத்ததாகக் கூறுகிறான்.

Padmapani (Lotus Holder) in Ajanta paintings

பாணபட்டன் எழுதிய காதம்பரியில், இளவரசி காதம்பரி சந்திரபீடன் என்பவனை நினைத்து வாடவே தோழியர் தாமரை இலை கொண்டு வீசுகின்றனர். காதம்பரியின் காதுகளில் தாமரைப் பூ, கைகளில் தாமரைப் பூ, மணிக்கட்டில் தாமரைத் தண்டு வளையல், மார்பில் தாமரை இலைகள், நெற்றியில் சந்தனக் குழம்பு!! எலாம் தாமரைமயம்!!! அந்தக் காலத்தில் மலர் மருத்துவம் இருந்தது போலும்!

விவேகானந்தர் கதை

ராமகிருஷ்ண பரமஹம்சர், தனது வாழ்நாளில் பணத்தைத் தொட்டதே இல்லை. ஆன்மீக முன்னேற்றத்துக்கு பெரும் தடை பணத்தாசை என்பது அவருடைய உபதேசம். ஒரு முறை அவருடைய சீடர் சுவாமி விவேகானதர் தன்னுடைய குருவையே சோதிக்க விரும்பினார். பரமஹம்சருக்குத் தெரியாமல் படுக்கைக்கு மிக ஆழத்தில் ஒரு காசை வைத்து போர்வையால் மூடி மறைத்துவிட்டார்.

வழக்கம் போல இரவில் தூங்கச் சென்ற ராமகிருஷ்ணருக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தார். ஏன் தூக்கம் வரவில்லை என்று கேட்டபோது படுக்கையில் இருக்கும் ஏதோ ஒன்று இப்படி அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்றார். அப்புறம் அந்தக் காசு வெளியே தூக்கி எறியப்பட்டது. ஆக விக்ரமாதித்தன் கதையில் சய்யவிலாசி தனது படுக்கை அறிவினால் முடியைக் கண்டு பிடித்தான். பரமஹம்சர் போன்ற ஞானிகள் மெய்யறிவினால் காசைக் கண்டுபிடிக்கின்றனர். இப்படிப் படுக்கை அதிசயங்கள் பற்றிப் பல கதைகள் உண்டு.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...