Saturday, 6 October 2018

ரோகிணி நட்சத்திர மர்மம்! தமிழர் திருமணம்...!

படம்: ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம்

தமிழர்கள் ரோகிணி நட்சத்திர நாளில் திருமணம் செய்ததாக அகநானூற்றில் இரண்டு பாடல்களும் கண்ணகி- கோவலன் திருமணம் ரோகிணி நட்சத்திரத்தில் நடந்ததாக சிலப்பதிகாரமும் கூறும். ரோகிணி நட்சத்திரத்தில் திருமணம் ஏன்?

தமிழர்களுக்கு சோதிடத்திலும் பல்லி சொல்லும் பலனிலும், புள் (பட்சி) நிமித்தத்திலும், தும்மல்,கண் துடிப்பு விஷயத்திலும், அபார நம்பிக்கை இருந்ததை சங்க இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் காண முடிகிறது. இந்த ரோகிணி நட்சத்திர நம்பிக்கை வட இந்தியாவிலும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் இது இடம்பெறும் 500, 600 ஆண்டுகளுக்கு முன்னரே இது சம்ஸ்கிருத இலக்கியத்தில் இருக்கிறது.

இந்துக்கள் வட இமயம் முதல் தென் குமரி வரை (‘ஆ சேது ஹிமாசலம்’) — ஒரே நம்பிக்கை வைத்திருந்ததை இது காட்டுகிறது. அது மட்டுமல்ல, ஆரிய – திராவிட இனவாதம் பேசி நாட்டைப் பிரிக்க, இந்து மதத்தை ஒழிக்க முற்பட்டோரின் பொய்மை வாதத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

போதாயன கிருஹ்ய சூத்திரம், மனுதர்ம சாஸ்திரம், வால்மீகி ராமாயணம், காளிதாசனின் படைப்புகள் முதலியன நிலவு- ரோகிணி நெருக்கத்தைப் புகழ்ந்து உரைக்கின்றன. கணவன் – மனைவி, காதலன் – காதலி அன்புக்கு உவமையாகப் பயன்படுவது ‘’நிலவு – ரோகிணி’’ நெருக்கம்தான். சங்க இலக்கியத்திலும் இந்த நெருக்கம் பல இடங்களில் உவமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
அகநானூற்றில் இரண்டு கல்யாணப் பாடல்கள் இருக்கின்றன. இரண்டும் தமிழர் திருமண முறையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதை விட்டால் அடுத்தபடியாக சிலப்பதிகாரத்தில்தான் கல்யாணக் காட்சி. அதையும் விட்டால் ஆண்டாளின் வாரணம் ஆயிரத்தில்தான் அடுத்த கல்யாணக் காட்சி வருகிறது.

ஆல்டிபாரன் என்பது ரோகிணியின் அராபிய பெயர்

அகநானூறு 86 (நல்லாவூர்க் கிழார்) பாடிய பாடலில்

“கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடுஇல் விழுப்புகழ் நாள் தலைவந்தென……….”
பொருள்:- வெண்மையான சந்திரனை குற்றமில்லாத சிறந்த புகழினை உடைய உரோகிணி என்ற நாள் (நட்சத்திரம்) அடைந்தது…………………………

அகநானூறு 136 (விற்றூற்று மூதெயினனார் பாடிய பாடல்)
“மைப்பு அறப்புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப்பேணி
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்து………………”
(திங்கள்=சந்திரன், சகடம்=ரோகிணி நட்சத்திரம்)

இந்த இரண்டு பாடல்களும் தரும் பொருளின் சுருக்கம்: கல்யாணம் என்பது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தை அடைந்த நாளில் நடைபெறும். அந்த வீட்டில் ‘’வெஜிட்டேரியன்’’ சாப்பாடு (வெண்சோறு+ நெய் அல்லது உளுந்து கலந்த பொங்கல்) கிடைக்கும். சுமங்கலிகள் கூடி நின்று மங்கள முழக்கம் செய்வர். வீடு பந்தல் போட்டு, மணல் தூவி அலங்கரிக்கப்பட்டிருக்கும். சுவற்றில் தெய்வ ஓவியங்கள் இருக்கும்.புத்தாடைகள் உடுத்தி இருப்பர் முதலிய பல விஷயங்களை நீண்ட பாடலில் காணலாம்.

வால்மீகி ராமயணத்தில் பல இடங்களில் சந்திரனைச் சேர்ந்த ரோகிணி போல என்ற உவமை வருகிறது. காளிதாசனும் விக்ரம ஊர்வசீயம், சாகுந்தலம் நாடகங்களிலும், ரகுவம்ச காவியத்திலும் இந்த உவமைகலைப் பயன்படுத்துகிறான். ஆனால் இவைகளுக்கெல்லாம் முன்னர் படைக்கப்பட்ட போதாயன க்ருஹ்ய சூத்திரத்திலும், மனு தர்ம சாஸ்திரத்திலும் ரோகிணி நட்சத்திர நாள் திருமணத்துக்கு உரிய நாள் என்று தெளிவாகவே எழுதப்பட்டுள்ளது. அதை இளங்கோவும் நல்லாவூர்க் கிழாரும் விற்றூற்று மூதெயினனாரும் பின்னொட்டிச் செல்வது பாரதீய கலாசாரத்தின் செல்வாக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

தமிழ் இலக்கியத்தில் மணநாள் குறிப்பு தவிர, பொதுவாக ரோகிணி-நிலவு உறவு பற்றிக் கூறும் செய்யுள்கள்: திருமுருகாற்றுப்படை வரி 87/ 88, நெடுநல்வாடை-163, புறம் 60, 160 பாடல்கள்.

சம்ஸ்கிருத இலக்கியத்தில்:- ஐதரேய பிராமணம், சதபத பிராமணம் மற்றும் போதாயன, மானவ க்ருஹ்ய சூத்திரங்கள்; வால்மீகி ராமாயணம்(5-33-7;5-24-10;5-37-24;5-15-22 etc). காளிதாசனின் விக்ரம ஊர்வசீயம்3-4, 3-12
சாகுந்தலம் 7-22; ரகு வம்சம்-14-40.

புராணக் கதை

தக்ஷன் என்ற ரிஷியுனுடைய 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் அன்பு செலுத்தவே பற்ற மனைவியர் தந்தையிடம் முறையிட்டனர். அவர் சந்திரன் தேய்ந்து அழியட்டும் என்று சாபமிட்டார். எல்லா மனைவியரும் அவ்வளவு கடுமையான சாபம் வேண்டாம் என்று மன்றாடினர்.

இந்துமதத்தில் கடவுளேயானாலும் ஒரு வரமோ சாபமோ கொடுத்துவிட்டால் அதைத் திரும்பி எடுக்கவே முடியாது ஏனெனில் இது சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த மதம். ஆனால் குறைக்கவோ, கூட்டவோ முடியும். உடனே நிலவு என்பது 15 நாள் தேய்ந்து (கிருஷ்ண பட்சம்) அடுத்த 15 நாள் வளரட்டும் என்றார் தக்ஷன்.

உண்மையில் இது வான சாஸ்திர உண்மை. அந்தக் காலத்தில் விஞ்ஞானப் பாடங்களை இப்படிக் கதையாகச் சொல்வது மரபு. ஆக நிலவின் சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் பற்றி விளக்க இப்படிக் கற்பனைக் கதை உற்பத்தி செய்தனர்.

ஆயினும் ரோகிணிக்கு அதிக அன்பு காட்டியது என்ன விஞ்ஞான நிகழ்ச்சி என்று இப்போது சொல்ல முடியவில்லை. ஒருவேளை முன்னொரு காலத்தில் நிலவு ரோகிணிக்கு மிக அருகில் வந்திருக்கலாம். அல்லது அந்த இடத்தைக் கடக்க கூடுதல் நாட்கள் எடுத்திருக்கலாம். இப்போது நிலவு 29 நாட்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றுகிறது.

இதே போல பூமியே நடுங்கும்படியான ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னர் புதன் பிறந்ததாகவும் இன்னொரு புராணக் கதை கூறுகிறது. இதில் பிருஹஸ்பதியும் சம்பந்தப்படுவதால் இதுவும் ஒரு விண்வெளி விஞ்ஞானக் கதையே. பூமி, நிலவு மோதலால் அல்லது குரு (வியாழன் கிரக ஈர்ப்பால்) ஈர்ப்பால் புதன் உருவாகி இருக்கலாம். எதிர்காலத்தில் புதன் கிரகம் பற்றி புதிய தகவல் வரும்போது நம் புராணக் கதைகள் விஞ்ஞானக் கதைகளாகக் கருதப்படும்.

கிரகணம் பற்றி நாம் நன்கு அறிந்து, அதைக் கணக்கிட்டு பஞ்சாங்கத்தில் குறித்தபோதும் பாமர மக்களுக்கு இதெல்லாம் விளங்காது என்பதால் சந்திரனை பாம்பு விழுங்குகிறது என்று கதை சொல்லுவது போலத்தான் நிலவு- ரோகிணி கதையும்.

நிலவு பூமியை ஒரு முறை வலம் வர 27 நாட்கள் ஆகும். பூமியும் சூரியனைச் சுற்றுவதால் 27 நாட்களுக்குள் பூமி இரண்டரை நாள் தூரம் முன்னேறி இருக்கும். இதனால் நிலவு ஒரு முறை பூமியை வலம் வர ஆகும் நாட்கள் 29-5 (இருபத்தொன்பதரை) நாட்கள். இதை ஒரு சாந்திர மாதம் என்பர். நிலவு போகும் பாதையில் தெரியும் 27 நட்சத்திரங்களை அவனது மனைவியர் என்று பாமர மக்களுக்காக கதை சொன்னார்கள்.

நிலவுக்கு ‘’அருகில்’’ ரோகிணி நட்சத்திரம் வருகிறது என்பதெலாம் மாயத்தோற்றமே. ஏனெனில் நட்சத்திரங்கள் கோடி கோடி மைல்கள் அப்பால் இருக்கின்றன. நிலவு அவைகளைக் கடந்து போவது போலத் தோன்றினாலும் நிலவுக்கும் அவைகளுக்கும் இடையில் கோடானு கோடி மைல்கள் இருக்கின்றன.

பாலகங்காதர திலகர் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் ரிக் வேதத்தில் உள்ள வான சாத்திரக் குறிப்புகளை வைத்து அதன் காலம் கி.மு.6000 என்று கணித்தார். இவர் ஆராய்வது தெரியாமல், தனியாக ஆராய்ந்த ஜெர்மானிய அறிஞர் ஜாகோபியும் வான சாஸ்திரத்தை வைத்து ரிக் வேதம் கி.மு.4500 என்று கூறினார்.

பகவத் கீதையில் கண்ணன்– ‘’மாதங்களில் நான் மார்கழி’’– என்று கூறுவது போல கி.மு.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணினியும் மார்கழியே வருடத்தின் முதல் மாதம் என்கிறார். அப்போதைய கோள் நிலை கொண்டு கணிக்கப்பட்ட கணக்கில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது தெரிகிறது. எதிர்காலத்தில் தமிழர்களும் வடவர்களும் ஏன் ரோகிணியில் கல்யாணம் செய்தார்கள் என்பது தெரியவரலாம்.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...