கபிஞ்ஜலா என்ற பறவையை சாதகப் பட்சி என்று பிற்கால இலக்கியங்கள் வருணித்தன. தமிழர்கள் இதை ‘துளி நசைப் புள்’ –(மழைத் துளிகளுக்காக ஏங்கும் பறவை)– என்று புறநானூற்றிலும் ஏனைய சங்க இலக்கிய நூல்களிலும் வருணித்து இருப்பதை முதல் பகுதியில் கண்டோம்.
இந்தப் பறவை பற்றி இரண்டு சுவையான கதைகள் பிற்கால இலக்கியத்தில் உள்ளன. அவைகளை அறிந்தால், உலகின் மிகப் பழைய மதப் புத்தகமான ரிக் வேதத்தில் இதை ஏன் இந்திரனுக்கு ஒப்பிட்டனர் என்பது விளங்கும்.
2400 ஆண்டுகளுக்கு முன்னர் பௌத்தர்கள் 547 ஜாதகக் கதைகளைத் தொகுத்தனர். இவை ஒவ்வொன்றிலும் போதிசத்வர் (புத்தர்) முன் ஜன்மத்தில்என்ன மிருகமாக, பறவையாக, அரசனாக, தொழிலாளியாகப் பிறந்தார் என்று கதை ரூபத்தில் இருக்கும். ஆனால் உண்மையில் இவை எல்லாம் இந்து மதக் கதைகள். பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக பஞ்ச தந்திரக் கதைகள், ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகள் முதலியவற்றை ‘’பவுத்தமயமாக்கி’’ வெளியிட்டனர். அதாவது கதையை கொஞ்சம் மாற்றி தந்திரமாக வெளியிட்டனர். அகத்தியர் வரலாற்றைக் கூட இதில் ‘’அகித்தி’’ என்று பெயரை மற்றி எழுதி வைத்துள்ளனர். இந்த ஜாதகக் கதைகளில் மேலும் கொஞ்சம் மாற்றம் செய்து திபெத்தியர்கள் வெளியிட்டனர்.
பூர்வ ஜாதகக் கதைகளில் தித்திரி ஜாதகம் என்று உள்ளதை திபெத்தியர்கள் கபிஞ்ஜலா ஜாதகம் என்பர். தித்திரி என்பதை தமிழில் தத்தை (கிளி) என்பர். கபிஞ்ஜலா என்பது சாதகப் பட்சி என்று நான் எழுதியுள்ளேன். இதற்கு காளிதாசன் படைத்த மேகதூதக் காவியத்தில் இருந்து சகுனம் (புள் நிமித்தம்) பற்றிய நம்பிக்கைகளை ரிக் வேதக் கவிதையுடன் (ரிக் 2-42, 2-43) ஒப்பிட்டும் காட்டினேன்.
இனி சுவையான திபெத்திய ஜாதகக் கதையைக் காண்போம்:
புத்த ஜாதகக் கதை
முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு யானை வந்து அதன் இலைகளைத் தின்றுகொண்டு அதன் நிழலில் வசித்தது. அதற்குப் பின் அங்கே ஒரு குரங்கு வந்து தங்கியது. உடனே யானை எதிர்ப்பு தெரிவித்தது. நான் தான் முதலில் வந்தேன் என்று அதற்குக் காரணமும் சொன்னது. குரங்கு கேட்டது, ’இந்த மரத்தின் பழங்களை நீ பார்த்து இருக்கிறாயா?’. யானை நான் பார்த்ததில்லை என்று சொன்னது. அப்படியானால் நான் உனக்கு முன்னால் வந்தேன். அந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டேன். இப்போது இலை மட்டுமே எஞ்சியிருக்கிறது. உடனே யானை. ‘’குரங்காரே நீரே மூத்தவர். நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம்’’ என்று சொன்னது.
கொஞ்ச நாள் கழித்து ஒரு முயல் வந்து அங்கே உட்கார்ந்தது. யானையும் குரங்கும் ஆட்சேபம் தெரிவித்தன. முயல் கேட்டது, ‘’நீங்கள் இந்த மரத்தின் கன்றைப் பார்த்தது உண்டா?’’ என்று. அவை இரண்டும் இல்லை என்று சொன்னவுடன், ‘’நான் வந்த போது மரக் கன்றுதான் இருந்தது. என் உயரம்தான் மரமே வளர்ந்து இருந்தது. ஆகையால் இந்த மரம் எனக்கே உரியது’’ என்றது. யானையும் குரங்கும் அதனை நண்பனாக ஏற்று நீயே, ‘சீனியர்’. நாங்கள் உன்னுடன் வாழ்கிறோம் என்றன.
இவர்கள் இப்படிப் பேசி முடிப்பதற்குள் மரத்தின் உச்சியில் இருந்து கபிஞ்ஜலா பறவை கூச்சல் போட்டது. ‘’நிறுத்துங்கள், உங்கள் பேச்சை. நான் பழம் தின்று ஒரு கொட்டையைத் துப்பினேன் அதுதான் இந்த மரமாக வளர்ந்தது’’ என்றவுடன் யானை, குரங்கு, முயல் ஆகிய மூன்றும் அந்தப் பறவையின் தலைமையை ஏற்றுக் கொண்டு சுகமாக நண்பர்களாக வாழ்ந்தன. ‘’இந்த நாலு பேரில் கபிஞ்ஜல பறவை என்பது புத்தரின் முந்தைய பிறப்பில் போதிசத்துவர்’’ — என்று கதை முடிகிறது.
ஆக கபிஞ்ஜல என்பது புத்தர். இப்படிப் பறவையை ஆன்மாவுக்கு ஒப்பிடுவது புத்தருக்கும் முந்தைய உபநிஷத்துகளிலேயே இருக்கிறது வள்ளுவனும் ஆத்மாவை பறவைக்கு ஒப்பிடுவான்:
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு (338)
(குடம்பை= கூடு, புள்=பறவை).
தேவிபாகவதக் கதை
தேவிபாகவதத்தில் ஆறாவது பகுதியில் விருத்ராசுரனை இந்திரன் வதை செய்த கதை உள்ளது. மூன்று தலைகளை உடைய விஸ்வரூபனை இந்திரன் கொன்றபோது ஒரு தலையில் இருந்து கபிஞ்ஜலப் பறவையும், மற்றொன்றிலிருந்து குருவிகளும், மூன்றாவது தலையில் இருந்து கிளிகளும் வந்ததாக தேவி பாகவதம் கூறும். இவைகள் சோம பானம், சுராபானம், அன்னம் ஆகியவற்றைச் சாப்பிட்ட மூன்று தலைகள் என்றும் அவை முறையே தேவர், அசுரர், மனிதர் ஆகியோரைக் குறிப்பதாகும் என்றும் அறிஞர்கள் விளக்கம் தருவர். இதற்குப் பின்னர் விருத்திராசுரனை அவனது தந்தை யாகத் தீயில் இருந்து உருவாக்கவே, விருத்திரனையும் இந்திரன் கொல்கிறான்.
ஆக இந்த இரண்டு கதைகளிலும் ஒரு ஒற்றுமையைக் காணலாம். கபிஞ்ஜல பறவை என்பது தேவர் (கடவுள்). அதுதான் உயர்ந்தது. இது க்ருத்சமடர் பாடிய ரிக்வேதப் பாடலில் உள்ள கருத்து. இந்த வேதக் கதையையே பிற்காலத்தில் பர்த்ருஹரி, காளிதாசன், சங்ககால தமிழ்ப் புலவர்கள், பௌத்தர்கள், தேவிபாகவதம், ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் சாதகப் பட்சி என்ற பெயரில் பயன்படுத்தினர்.
ஆன்மீகத்தின் உச்சநிலையை நாடும் ஞானியைக் குறிக்கவோ, கடவுளைக் குறிக்கவோ கபிஞ்ஜல பறவையை உவமையாகப் பயன்படுத்தினர். இந்த நோக்கில் ரிக் வேதப் பாடலைப் பார்த்தோமானால் உண்மை புலப்படும். மேலோட்டமாகப் படித்தால் அது ஒரு அழகான பறவைப் பாட்டு!
பெரிய தத்துவங்களைப் போதிக்க இயற்கையில் உள்ள பறவைகள், மிருகங்கள், ஆறு, மலை முதலியவற்றைப் பயன்படுத்துவதை உபநிஷத காலத்தில் இருந்தே காண முடியும்.
No comments:
Post a Comment