Saturday, 27 October 2018

சங்க இலக்கியத்திலும் - பக்தி இலக்கியத்திலுமான காதலைப் பற்றிய தேடல்,,,,,

காதல் என்னும் பதத்திற்கு அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், பற்றார்வம், காதலணங்கு, அன்புச்செய்தி, காதல் நினைவூட்டு, காதல் தொடர்பு, காதலாட்டம், காதல் தெய்வம், மதவேள், அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பெற்றுமகிழ், நுகர்ந்து மகிழ், ஈடுபாடுகொள், நாட்டங்கொள், சார்புகொள், விரும்பிப்பயில் போன்ற கருத்துகள் அகராதியில் நீண்டு அமைவதுபோல் காதலும் இன்ப ஒழுக்கத்தின் இயல்பை உணர்த்தி நின்று மக்களை வழிப்படுத்துகின்றது.
 பெண்ணானவள் 12 ஆவது, 13 ஆவது அகவைகளிலும், ஆணானவன் 14 ஆவது, 15 ஆவது அகவைகளிலும் பருவமடையும் பொழுது உடம்பில் ஏற்படும் ஓர் இயற்கை உந்தலால் தூண்டப்பட்டு, உடல் இச்சை கொண்டு, இன்பமடைய விரும்பி, காதல் வயப்பட்டு, பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் விரும்பிக் காதலிப்பர். பசித் தூண்டலுக்குச் சாப்பிடுவதும், தாகத்துக்கு நீர் அருந்துவதும் உடல் தேவையின் நியதியாகும்.

தொல்காப்பியம் (தி.மு.680—கி.மு.711):-

நமக்குக் கிடைக்கக்கூடிய காலத்தால் மூத்த சங்க இலக்கிய நூலான தொல்காப்பியம் முதல் மற்றைய நூல்களிலும் காதல்  பேசப்படும் விதம். தொல்காப்பியர் காதலை
(1) கைக்கிளை, 
(2) அன்பின் ஐந்திணை, 
(3) பெருந்திணை 
என்று மூன்று பகுதிகளாக வகுத்துள்ளார்.

(1) கைக்கிளை- 

 என்பது  ஒரு  தலைக்  காமம்.  (கை – பக்கம், கிளை – உறவு).  இதை ஒவ்வாக் காமம் என்றும் கூறுவர். கைக்கிளை புணரா நிகழ்ச்சியாகும்.   கைக்கிளைக்கு  நிலம்  ஒன்றும்  ஒதுக்கப்படவில்லை.  ஏனெனில்  இது  மலராக் காதல், எங்கும் காணப்படலாம்.

(2) அன்பின் ஐந்திணை-

இதை அன்புடைக் காமம் என்றும் கூறுவர். அன்பின் ஐந்திணை என்பது ஐந்திணைகளான குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை ஆகிய ஐவகை நிலங்களுக்கேற்ப ஒட்டிய சூழல் சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய்   குறிஞ்சியில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் ஆகியன - இயற்கையோடு ஒட்டி நிகழ்வன.

(3) பெருந்திணை- 

என்பது ஒருவனும் ஒருத்தியும் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் முறையாகும். இதைப் பொருந்தாக் காமம் என்றும் கூறுவர். பெருந்திணை புணர்ந்த பின்னான நிகழ்ச்சியாகும்.

பெருந்திணைக்கும் நிலம் ஒன்றும் ஒதுக்கப்படவில்லை.

(1) ஆண்மகனுக்கே உரிய மடலேறல், (2) இளமை நீங்கிய முதுமைக் காலத்திலும் தம்முள் கூடி இன்பம் துய்த்தல், 
(3) தெளிவற்ற நிலையில் காமத்தின் கண் மிகுதிப்பட்டு நிற்றல்,
(4) ஐந்திணையான ஒத்த காமத்தில் மாறுபட்டு நிற்றல் 
ஆகிய நான்கும் பெருந்திணை எனத் தொல்காப்பியம் கூறும்.

களவொழுக்கம்- 

தலைவனும் தலைவியும் எதிர்ப்படும் நிலையில் காதற்களவு நிகழும். தலைவனோ தலைவியோ தனிவழி சென்று களவொழுக்கத்தில் ஈடுபடமுடியாது. இவர்களுடன் என்றும் பாங்கனும,; தோழியும் இருப்பர். தலைவன் தலைவியரிடையே தோன்றிய களவின் காலவரை இரண்டு மாதம்தான் நிகழலாமென்று வரையறை வகுத்துள்ளனர். களவொழுக்கத்தில் ஈடுபடும் தலைவன் தலைவியருக்கு அறிவுரைகூறி உதவ பாங்கன், பார்ப்பான், தோழி, செவிலி, கிழவன் (தலைவன்), கிழத்தி (தலைவி) ஆகியோர் உளர். தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் இருக்கும் பொழுது குறியிடம் அமைத்துக் கூடுவர். இரவிற் கூடுமிடம் ‘இரவுக்குறி’ என்றும், பகலிற் கூடுமிடம் ‘பகற்குறி’ என்றும் கூறுவர். களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது களவு வெளிப்படுதலும் உண்டு. இது ‘அம்பல்’, ‘அலர்’ என்ற இருவகையால் வெளிப்படும். அம்பல் என்பது சொல் நிகழா முகிழ்நிலைப் பரவாத  களவாகும். அலர் என்பது சொல் நிகழ்தலான பரவிய களவாகும்.

கற்பொழுக்கம்- 

தலைவன் தலைவியர் களவொழுக்கம் வெளிப்படுதலும், தமரின் (பெற்றோர்;, உற்றார், உறவினர்) மூலம் திருமணம் செய்து கொள்வதும் கற்பு என்று கூறுவர். தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான்றோரும் கரணம் (சடங்கொடு கூடிய மணநிகழ்வு) அமைத்து மணவினை நிகழ்த்தினர். தலைவனும் தலைவியும் அன்பினாற்கூடி ஒன்றுபட்டுத் தனிவழி சென்ற பொழுதும், கொடுத்தற்குரிய தலைவியின் தமர் இல்லாதவிடத்தும், சடங்கோடுகூடிய மணநிகழ்வு நடைபெறுதலும் உண்டாம். கரணத்தின் சிறப்புக் கூறப்பட்டமை காண்க. பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் ஆகிய அறுவருடன் சிறப்பினையுடைய பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, கிழவன், கிழத்தி ஆகிய அறுவரையும் சேர்த்துப் பன்னிருவரும் கற்பிற் கூற்று நிகழ்தற்குரியோராவர்;.

பரத்தையிற் பிரிவு:- 

அக்காலத்தில் தலைவியைத் தவிக்க விட்டுப் பரத்தை வாயில் நாடிச் செல்லல் எல்லாக் குலத்தார்க்கும் உரித்து என்பதை ‘பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே.. (பொருள்.220)’ என்ற சூத்திரம் எடுத்துக் காட்டுகின்றது. இங்கு நால்வர் என்பது- (1) அந்தணர், (2) அரசர், (3) வணிகர், (4) வேளாளர் என்னும் நால்வகுப்பினரைக் குறிக்கின்றது.
இப் பரத்தையிற் பிரிவு அவர்களின் குடும்பங்களில் ஏதாவது மணவிலக்கையோ, விவாக நீக்கத்தையோ ஏற்படுத்தியதாக ஒரு செய்திதானும் எந்த இலக்கியத்திலும் பதிவாகியுள்ளதைக் கண்டிலேம். இதற்கு அக்காலத்துத் தலைவியரின் அணுகுமுறையும், குடும்பப் பற்றும், மனத்திடமும், விட்டுக்கொடுப்பும், சகிப்புத் தன்மையும் முழுமுதற் காரணிகளாய் அமைந்திருக்கவேண்டும்.

*இதிகாசங்கள்:-

சிறந்த இரு இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றில் காதல் பற்றிப் பேசப்படும் பாங்கு

(1) மகாபாரதம்:- 

பாண்டு மன்னன் குந்திதேவியையும், பின்னர் மாத்ரியையும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். பாண்டுவுக்கும், குந்திதேவிக்கும் பிறந்த அருச்சுனன் வில்வித்தையிற் சிறந்து விளங்கித் தவம்மேற்கொண்டு அத்திரங்கள் பல பெற்றுப் பேரும் புகழுடன் வீராதி வீரனாய்த் திகழ்ந்தான். இவன் காதலித்துத் (i) திரௌபதி, (ii) உலூபி, (iii) சித்திராங்கதை, (iஎ) சுபத்திரை ஆகிய பெண்களைக் கடிமணம் புரிந்து கொண்டான்.

(2) கம்பராமாயணம்:-

கன்னி மாடத்தில் நின்ற சீதையை இராமன் கண்டான். இதைக் கம்பர் ‘#அண்ணலும்_நோக்கினான்,; #அவளும்_நோக்கினாள்.’ என்று காதல்வலை விரித்துக் கூறியுள்ளார். இராமன் காடு சென்றதால் தசரதன் உயிர் துறந்தான். இதனால் கைகேசி அழுது புலம்பாது சந்தோசப்பட்டாள்.  ஆனால் கோசலையும், சுபத்திரையும் அழுது புலம்பித் துடித்தனர். இவர்களுடன் அறுபதினாயிரம் (60,000) மனைவியரும் வந்து அழுது, தம் கணவருடன் உயிர் துறக்கவும் உறுதி கொண்டனர். மன்னன்தான் மக்களுக்கு உணவும், உடையும், உறையும், உயிரும் அளிப்பவன். அதனால் அன்றைய பெண்கள் மன்னனை வரித்து நின்றனர் போலும்.

எட்டுத்தொகை:- 

பதினெண் மேற்கணக்கு நூல்களுள் ஒன்றான எட்டுத்தொகை நூல்களான குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்று ஆகியவற்றில் பரவலாக ஐந்திணைக் காதல் நிகழ்த்தித் திருமணமும் நிகழ்வதைக் காணலாம். அதில் தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலித்தாய், தாய், தேர்ப்பாகன், பரத்தை போன்ற பாத்திரங்களுடன் பின்னிப் பிணைந்த செய்திகளும், பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து தலைமகள் தோழிக்கு உரைப்பதும், தோழி வருவாரென்று ஆறுதல் கூறுவதும், பரத்தையிற் பிரிந்த தலைமகன் தலைவியை நாடி வீடு வருவதும், தலைவி அவன்மேற் சினங்கொண்டு ஊடிநின்று, பின்கூடிக் குலாவி இன்புற்றிருப்பதும் சகச நிகழ்வுகளாம்.

திருக்குறள்:- 

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறளில் ‘காமத்துப் பால்’ பருக்கும்  திருவள்ளுவரின் பாங்கினையும் காண்போம். 
‘கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ என்றும்,
‘பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி வால் எயிது ஊறிய நீர்’ என்றும், 
‘காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாது செய்வேன்கொல் விருந்து’ என்றும், 
‘காலை அரும்பிப்பகல் எல்லாம் போது ஆகி மாலை மலரும் இந்நோய்’ என்றும், 
‘உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு’ என்றும், 
‘ஊடற்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து கூடற்கண் சென்றது என் நெஞ்சு’ என்றும், 
‘ஊடுதல் காமத்துக்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின்’ என்றும்
 கூறிய கருத்துக்கள் யாவும் மக்கள் மனத்தில் படர்ந்து இன்ப அலை எழுப்பிக் காதல் லீலைகள் புரிந்து இன்புற்ற வாழ்வை அமைத்துக் கொண்டனர்.

காப்பியங்கள்:- 

காப்பியங்கள் இரு வகைப்படும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன ஐம்பெருங்காப்பியங்கள் என்றும், சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயகுமார காவியம் என்பன ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் கூறுவர். இக் காப்பியங்கள் யாவும் காதல் படர்ந்த கதைகள் கூறுகின்றன.

1..சிலப்பதிகாரம். 

கோவலனுக்கும் கண்ணகிக்கும் பேசிமுடித்த ஒரு வணிக குலத் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தின் பின்தான் இவர்களிடையே தீராக் காதல் பிறந்தது. ஆனால் அது நிலைத்து நிற்கவில்லை. கோவலன் மாதவி என்ற மங்கைமேல் மையல் கொண்டு கண்ணகியைத் தவிக்க விட்டுச் சென்று அவளுடன் காதல் பண்ணிக் குடித்தனம் நடத்தி இன்புற்று வாழ்ந்தான். அதையும் அந்தக் கானல் வரி குலைத்துவிட மீண்டும் கோவலன் கண்ணகியை நாடிவந்து சேர, அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.

2. சீவக சிந்தாமணி:- 

சீவகன் வெற்றி வீரன், காதல் மன்னன்.  அவன்  அரசைத்  துறந்து (1) காந்தருவ தத்தை, (2) குணமாலை, (3) பதுமை, (4) கேமசரி, (5)  கனகமாலை, (6) விமலை, (7) சுரமஞ்சரி, (8) இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களைக் கடி மணம் புரிந்து, அவர்களுக்குக் காதல் ஊட்டிக் களிப்பில் திளைத்துப் பின்னாளில் அரசும் பெற்று வாழ்ந்தவன்.

பாரதியார்:- 

தேசியக் கவிஞர் பாரதியார் பாமர மக்களுக்கான உணர்ச்சிக் காதல் கவிதைகளைப் பாடி நாடெங்கும் பறக்க விட்டு மகிழ்ந்தவர். 
‘காற்று வெளியிடைக் கண்ணம்மா- நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்’ என்றும்,
 ‘பாட்டுக் கலந்திடவே- அங்கே ஒரு பத்தினிப் பெண்வேணும்’ என்றும், 
‘காதலை வேண்டிக் கரைகின்றேன்’ என்றும்,
 ‘காதலடி நீ எனக்கு, காந்தமடி நானுனக்கு’ என்றும், 
‘காதலினால் மானுடர்க்குக் கலவி உண்டாம், கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும், காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்இ ஆதலினாற் காதல் செய்வீர்;, உலகத் தீரே!’ என்றும் 
பாரதியார் சொரிந்த கவிதைத் துணுக்குகள் மக்களை மகிழ வைத்துப் புத்துணர்வூட்டின.
இதுவரை அன்புடைக் காதல் பற்றித் தொல்காப்பியம், மகாபாரதம், கம்பராமாயணம், குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பாரதியார் பாடல்கள் ஆகியன கூறும் பாங்கினைப் பார்த்தோம்.

இனி, பக்திக் காதல் பற்றி…

*பக்திக் காதல்:- 

மனிதன் காதல் வயப்பட்டுத் தன் இனியாள் ஒருத்தியுடன் இரண்டறக்; கலந்து இன்புற்று வாழ்க்கை நடத்தி, அவர்தம் எச்சங்களான வாரிசுகளைப் பெற்றுப் பரவசமடைந்து, அவர்களை வளர்த்துக் கல்வியறிவூட்டி அவர்களையும் குடும்ப வாழ்க்கையில் இறக்கியபின், தாங்களும் பக்திக் காதலிலும் புகுந்திடுவர். இதற்காக மனிதன் இந்து,  பௌத்தம், சமணம், கிறிஸ்து, இஸ்லாம்,  போன்ற  மதங்களை உண்டாக்கினான். மதங்கள் மக்களை நாடிச் செல்லாததை அறிந்தவன்; புராணக் கதைகளைப் புகுத்தி, தெய்விக சிந்தையில் வெற்றியும் கண்டான்.
தமக்குப் பரிச்சயமான சிவன், முருகன், வேலன், கந்தன், கணபதி, நாகன், அம்பாள், துர்க்கை, சரசுவதி, இலக்குமி போன்ற தெய்வங்களை போற்றிப்புகழலானான்.

தொல்காப்பியத்தில் ஒரு நிகழ்வு
போர்க்களத்தில் போர்வீரர்கள் போராடி மாண்டனர். அவர்கள் நினைவாக நடுகல் நிறுத்தற் பொருட்டுச் சிறந்த கல்லைத் தேடி, அதை நீரினாற் கழுவி, சுத்தம் செய்து, அதனை ஓரிடத்தில் நாட்டி, அதைக் கோயிலாக எழுப்பி, அதில் அவர் பீடுகளைத் தீட்டி, அக்கல்லிற்குப் பெரும் சீரும் சிறப்புமாற்றி, பின்னர் நடப்பட்ட கல்லினைத் தெய்வமாகப் போற்றி, வணங்கி, வாழ்த்தி வந்தனர்.

        “… வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க

            நாடவற்கு அருளிய பிள்ளை யாட்டும் 

            காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

            சீர்த்த மரபில் பெரும்படை வாழ்த்தலென்று..” 
        -(தொல். பொருள். 63)

இவ்வண்ணம் நடுகல், கோவிலாகவும், தெய்வமாகவும் தொல்காப்பியர் காலத்திலிருந்து (தி.மு.680) இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

பக்தி நெறி:- 

தமிழ் மண்ணில் பிறந்து, தமிழ் மண்ணில் வாழ்ந்து, தமிழ் மண்ணிலே பக்தி நெறி தழைக்கச் செய்தோர் பலர். இவர்களுள் திருமூலர், நாயன்மார், பதினெண்சித்தர், சேக்கிழார், காரைக்காலம்மையார், மணிவாசகர், ஆண்டாள், ஆறுமுக நாவலர்; ஆகியோர் முன்னின்று உதவிய ஒரு சிலராவர்.

1. திருமூலர்:- 

தவஞானி திருமூலர் அறுபத்திமூன்று (63) நாயன்மார்களில் ஒருவர். புதினெண் சித்தர்களிலும் ஒருவர். பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகத் திகழ்வதும் திருமந்திரமாகும். திருமந்திரத்தில் மூவாயிரம் (3,000) மந்திரங்களும், ஒன்பது பகுதிகளும் உள்ளன. ஒவ்வொரு பகுதியும் ‘தந்திரம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம் மந்திரங்கள் அனைத்தும் மிக இலகு தமிழில் அமைந்திருப்பது ஒரு சிறப்பாகும்.
  திருமூலர் ‘தேவர்கள் வணங்கும் திருவடியை வணங்கித் துதித்து, என் தலைவன் நந்தியெம் பெருமான் திருவடியே துணையென்று அதனைப் பற்றியபடி இருந்தேன்’ என்று கூறுகின்றார். ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்’ என்றும், ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்றும் கூறி உடம்பின் மாண்பை மேல்நிலைப்படுத்தியவர் திருமூலர். ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம், தௌ்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்’ என்றும், ‘பூசைக்குப் பூவுண்டு, நீருண்டு, இலையுண்டு’ என்றும் கூறி மக்களை ஆற்றுப்படுத்துகின்றார்.

2. நாயன்மார்:- 

பக்தி நெறி தழைக்கச் செய்தவர்கள் 63 தனியடியார்களும், ஒன்பது (09) தொகையடியார்களுமாவர். இவர்களில் திருஞான சம்பந்த நாயனார்;, திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் சிறப்புற்று விளங்கிக் கோயில் தொண்டு புரிந்தும், தேவாரம் பாடித் துதித்தும், மக்களுடன் வேறு கோயில் தலங்களுக்குச் சென்றும், மக்களுக்கு ஆத்ம சிந்தனை புகட்டியும், பக்தி நெறி பரப்பியும் இருந்தமை ஒரு பொற்காலமாகும்.

3. மணிவாசகர்:- 

‘மணிவாசகரின்  திருவாசகத்துக்கு உருகாதார் வேறொரு வாசகத்துக்கும் உருகார்' என்பர். மார்கழி மாதத்தில் மக்கள் அதிகாலை எழுந்திருப்பதற்குத் ‘திருவெம்பாவை’ திருவண்ணாமலையில் பாடப்பெற்றது. ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியே!’ என்றும், ‘வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?’ என்றும், ‘உன் அடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம், அன்னவரே எம் கணவர் ஆவார்’ என்றும், ‘எம்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க’ என்றும் கன்னியர் அதிகாலை எழுந்து பூம்புனல் பாய்ந்து மார்கழி நீராடித் தமக்கு நற்கணவர்களைத் தந்தருளும்படி தம் பெருமானை வேண்டி நிற்கின்றனர்.
தத்துவ நோக்கு: 
அன்புடைக் காதலும், பக்திக் காதலும் பற்றிய ஒரு தத்துவ நோக்கினையும், அதனால் ஏற்படக்கூடிய நன்மை, தீமை ஆகியன.

1. அன்புடைக் காதல்:- 

இக் காதல் உடலாலும், மனதாலும் வேண்டப்பட்டு நிகழ்வதாகும். நாம் ஒரு பொருளுக்கு விசையாற்றலைக் கொடுத்தால் அப்பொருள் விசையாற்றலுக்கேற்ற வண்ணம் ஒரு நகர்வைக் கொடுக்கும். அந்த நகர்வைத் தடுத்தால் தீங்கேற்படும். அவ்வாறே நமக்கேற்பட்ட ஆற்றலுக்குப் பங்கம் ஏற்படின் பாரதூரமான விளைவுகளால் மனத்தாங்கல் ஏற்பட்டு மனநோயும், மூர்க்கப் பாய்ச்சலும் ஏற்பட இடமுண்டு. இதையுணர்ந்த அறிஞர்கள் விஞ்ஞான ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஆய்வு மேற்கொண்டு, கருத்தொருமித்த காதலர்கள் தாம் விரும்பிய எந்நேரத்திலும், எவ்விடத்திலும் சந்திக்கவும், பேசவும், மேனி தொட்டுப் பழகவும், அருகில் நின்று அணைக்கவும், முத்தம் கொடுக்கும் வரைக்கும் அனுமதித்தனர். இதை நாம்  பிரித்தானியாவில் பார்க்கின்றோம். தெருவிலும், பேருந்திலும், தொடருந்திலும், வியாபார நிலையங்களிலும் இக் காட்சிகளைக் காணலாம். ஆனால் நாம் பிறந்த நாட்டில் இது ஒரு குற்றச் செயலாகும். இதற்கு வேறு சில நாடுகளில் கசையடி, அவயவ வெட்டு, மறியல், கல்லெறிந்து கொல்லல் போன்ற கொடுந் தண்டனைகளும் கொடுப்பார்கள்.  

2 பக்திக் காதல்:-

பக்திக் காதல் மனத்தில் உதிக்கும் ஓர் ஆசை. அது        

  ஒருவருக்கு  ஏற்பட்டதும்  அவர்  குளக்கரை நாடி, நீராடி, கோவிலுக்குச்  

  சென்று, வீதிவலம் வந்து, அவனை வேண்டி உருண்டு, புரண்டு, பிரதட்சிணம் 

  பண்ணி, தேவாரம் பாடி, அருச்சனை செய்து, கோயிற்பணி புரிந்து, கண்ணீர் 

  மல்கி, வீடுவரை வந்து சேர மனத்திலுதித்த அவராசை நிரம்பிப் பக்தி நெறி 

  பெருகிப் பரவசமடைவார்.
அன்புடைக் காதலில் சில சிக்குகளும், கட்டுகளும், முடிச்சுகளும் பின்னிப் பிணைந்திருப்பதை மேற் கண்டோம். அவற்றைக் கவனமாகப் பார்த்துச் சீராக்கி நேராக்கினால் அதில் காணும் இன்பத்தின் எல்லையைக் கணக்கிட முடியாது. அது அவரவர் கைத்திறன்,; மெய்த்திறனைப் பொறுத்தது. இக் காதல் இரு பாலாருக்கும் ஒரே நேரத் தொடர்புடையது.  
பக்திக் காதல் சிக்கற்ற ஒரு நேர்ப் பாதை. அதில் பிரயாணம் செய்வது சுலபம். அதனால் ஏற்படும் நன்மைகள் நிலைத்திருந்து ஆத்மீக உறவை மேம்படுத்திப் பக்தி நெறி பரப்பிப் பரவசமடைய உதவும். இக் காதலைத் தனி நபரும் நிறைவேற்றி முடிக்கலாம். 
எல்லா மனிதரும் இப் பூவுலகில் தம் வாழ்வியல் சிறப்புற்றிருக்க வேண்டுமென்றே விரும்புகின்றனர். இதை எய்துவதற்குத் தம்மாலான எதையும் நாடித் தேடி, ஓடிப் பற்றிக்கொள்ள விழைகின்றனர். இது மனித இயல்பு. இந்த வகையில் அவருக்கு இயற்கை கொடுத்த பரிசுதான் அன்புடைக் காதலும், பக்திக் காதலுமாகும். இவற்றைச் சிக்கெனப் பற்றிக்; கொண்டு, ‘இனி எங்கெழுந்தருளுவதோ?’ என்பதைக் கேட்காமல்  சும்மா இருந்துவிட்டான் மனிதன். ஆதலால், இவ்விரு காதல்களும் அவனில் தோன்றிய காலத்திலிருந்து அவனை அவை ஐந்திணை நிலங்களுக்கும் அழைத்துச் சென்று, ஐம்பொறிகளுக்கும் இன்ப உணர்வூட்டி, திருத்தலங்களுக்கும் கூட்டிச் சென்று, திருவுருவங்களைக் காட்டி, அவனை வேறுருவாக்கி, ஈசனின்  பேரும் புகழும் மெத்தப்பாடி, அவன் இறக்குமட்டும் ஈசனுடன் கூடிக் குலாவித் தரித்து நின்ற பாங்கினைப் பயமின்றிப் பாரறியப் போற்றுவாம்.     

#நமச்சிவாயவாழ்கநாதன்தாள்வாழ்க
#ராசாதுரியன்

காவியத் தலைவன்

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...