நம் கையிலிருக்கும் ஸ்மார்ட்ஃபோன்களில், மெமரி கார்டுகள் ஒரு முக்கிய பகுதியாய் மாறிவிட்டிருக்கின்றன. 2 ஜிபி மெமரி கார்டை எவ்வளவு முயன்றும் நிரப்ப முடியாமல் திரிந்த நமக்கு இன்று 16,32,64 ஜிபி கொடுத்தாலும் போதவில்லை. கணினிகளில் இதே நிலை அதன் வன்தட்டுகளுக்கு(hard drives) ஏற்பட்டிருக்கிறது. 120 ஜிபியை பெரிய விஷயமாகக் கருதிய நமக்கு இன்று குறைந்தபட்சம் 1 TB மெமரி தேவைப்படுகிறது. இவை இரண்டும் சில நேரங்களில் மக்கர் செய்யக் கூடும். இதனை கரப்ட்(Corrupt) ஆகியிருக்கிறது என்பார்கள்.
நன்றாக ஓடிக் கொண்டிருக்கையில் திடீரென்று கைபேசியின் நினைவகங்களில் அந்த மெமரி கார்டு காண்பிக்கபடாமல் போகலாம். வன்தட்டுகள், கணினியின் “My computer” பகுதியில் தனியாகத் தெரியாமல் போகலாம். இந்தச் சிக்கல் வன்பொருள் அல்லது மென்பொருள் கோளாறால் ஏற்படலாம். நினைவகங்களின் அமைப்பில் உண்டாகும் சேதம் வன்பொருள் சேதமாகவும், தகவல்களைச் சேமித்து வைக்கும்போது மென்பொருட்கள் செய்யும் கோளாறு மென்பொருள் சேதமாகவும் அமையும். மென்பொருள் சேதங்களை கொஞ்சம் மெனக்கெட்டால் சரிசெய்துவிடலாம். ஆனால் வன்பொருள் சேதங்கள் கொஞ்சம் சிக்கலானவை. அதற்கு கொஞ்சம் தொழில்நுட்ப விஷயங்கள் தெரிந்திருப்பது அவசியம்.
சரி... இதை எப்படிச் சரிசெய்யலாம்?
1. முதலில் மெமரி கார்டுகள் எனில் அதை மொபைலில் இருந்து கழற்றி வேறு மொபைலில் போட்டு அதில் சரியாக வேலை செய்கிறதா எனப் பார்க்கவும்.
2. அப்படி இல்லையெனில் மெமரி கார்டை கார்ட் ரீடரில் போட்டு கணினியில் யு.எஸ்.பி. போர்ட் மூலம் இணைக்கவும். இணைத்தபின்னர் My computer பகுதியில் மெமரி கார்டை Removable disk என்று தனியாகக் காண்பிக்கிறதா என்று சோதிக்கவும்.
3. வன்தட்டு என்றால் வேறு கணினியில் இணைத்து, Removable Disk ஆக வன்தட்டைக் காண்பிக்கிறதா என்று சோதிக்கவும்
4. கணினி மூலம், கார்டில் இருக்கும் தகவல்களை எடுக்க முடிகிறதெனில், எல்லாக் கோப்புகளையும் காப்பி செய்து வைத்துக்கொண்டு ஒரு முறை ஃபார்மட் செய்து பயன்படுத்தவும்.
5. அப்படி கணினியில் Removable disk என்று காண்பித்தாலும், திறக்க நினைக்கையில் வேறு error message வந்தால். மெமரி கார்டு/வன்தட்டைக் குறிக்கும் removable disk மீது ரைட் க்ளிக் செய்து, ப்ராபர்டீஸைக் க்ளிக் செய்யவும்.
6. அதில் tools பகுதியில் error checking ஐ க்ளிக் செய்யவும்.
7. அது ”Continue" கேட்கையில் கண்டின்யூ பட்டனை க்ளிக் செய்யவும்
8. இப்பொழுது மெமரி கார்டில் இருக்கும் பிழைகளைக் கணினி சோதித்து பிழைகளைச் சரிசெய்யும்.
9. அதன்பின்னர் மென்பொருள் கோளாறால் உண்டான சிக்கல்கள் தீர்ந்தபின், தகவல்களை காப்பி செய்து வைத்துகொண்டு ஃபார்மட் செய்து பயன்படுத்தவும்.
கணினியில் இணைக்கும்போது தனி Removable Disk ஆக காண்பிக்காவிடில் அது அமைப்புக் கோளாறாக இருக்க வாய்ப்புண்டு. அதனை நாம் வீட்டில் சரிசெய்ய இயலாது. உடனடியாக அதிகார்பூர்வ சேவை மையங்களுக்கு எடுத்துச் செல்லலாம். முக்கியமான கோப்புகள்-தகவல்கள் எனில் data recovery softwareபயன்படுத்தலாம். அவ்வகை மென்பொருட்கள் பெரும்பாலும் இலவச மென்பொருட்கள் அல்ல. அதனால் நிறுவனங்களில் முக்கிய கோப்புகளை இவ்வகை மென்பொருட்கள் மூலம் திரும்பப் பெறுகிறார்கள்
No comments:
Post a Comment