சிந்து சமவெளியில் இந்திரன்!
Indus Valley Indra
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1269; தேதி: 6 செப்டம்பர் 2014
மூன்று ஆண்டுகளுக்கு முன், மே 29, 2011-ல் சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஒரு ஆங்கிலக் கட்டுரை எழுதி (“Indus Valley Civilization- New Approach required” ) இதே பிளாக்-கில் ஏற்றினேன். அதில் யானை மீது நிற்கும் ஒரு சிந்துவெளி சித்திரத்தை இந்திரன் என்று சொல்லி அவன் மீது இருக்கும் ‘சக்கரம்’ அவனுடைய பெயர் என்றும் வியாக்கியானம் எழுதினேன். இந்திரனுக்கு சக்ரன் என்று ஒரு பெயர் உண்டு. இப்போது அதை உறுதிப்படுத்தும் வேறு சில சான்றுகள் கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சிந்துசமவெளி எழுத்துக்களை உலக மஹா அறிஞர்கள் படிக்க முடியாமைக்குக் காரணம் என்ன என்றும் பழைய கட்டுரையில் விளக்கினேன். ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ — என்று ஒரு பொன்மொழி உண்டு. யாரோ ஒருவர் சிந்துவெளி ஆராய்ச்சியில் உள்நோக்கத்தோடு ‘’ஆரிய—திராவிட விஷ விதை’’யை ஊன்றிவிட்டதால், எதைப் பார்த்தாலும், ‘சேனம் கட்டிய குதிரை போல’ ஒரே கோணத்தில் ஆராயத் துவங்கினர். ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ — என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அப்பாவித் தமிழர்களுக்கு எதைப் பார்த்தாலும் ஆரியப் பேய் தெரியவே அதைக் கண்டு பயந்து தத்துப் பித்து என்று உளறத் துவங்கிவிட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இன்றுவரை அந்த உளறல் நிற்கவில்லை!
Taranis from France (Gaul)
நான் பழைய கட்டுரையில் கூறியது இதுதான்: சிந்துவெளியில் காணப்படும் அனைத்தையும் ஒரே கலாசாரம் என்று எண்ணி வியாக்கியானம் செய்யாதீர்கள். இன்றைய இந்துமதத்தில் இருப்பதைப் போலவே அக்காலத்திலும் பலவகை வழிபாடுகள், பல திறப்பட்ட மக்கள் இருந்திருக்கலாம். ஆகையால் புதிய அணுகுமுறை தேவை என்று எழுதினேன்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சுமார் 30 கட்டுரைகள், சிந்துவெளி பற்றி மட்டுமே எழுதிவிட்டேன். அத்தனையையும் இலவச புத்தகமாக வெளியிட்டு, பள்ளிக்கூட, கோவில் வாசல்களில் நின்று விநியோகிக்கவேண்டும் என்பது என் தீராத ஆசை!
தாரனிஸ் – தோர் – ஜூபிடர் – இந்திரன்
கெல்டிக் (Celtic) இனத்தைச் சேர்ந்தவர்கள், 2500 ஆண்டுகளுக்கு முன், தாரனிஸ் (Taranis) என்னும் கடவுளை வணங்கினர். இவருடைய உருவம் பிரான்ஸ் முழுதும் பல இடங்களில் கிடைத்துள்ளன. இவர் கையில் ஒரு சக்கரம் இருக்கிறது. இடி–தான் இவரது ஆயுதம். டாரனிஸ் என்றால் இடி முழக்கம் செய்வோன் என்று பொருள். சிலர், இவர் கையில் இருக்கும் சக்கரம் சூரியனைக் குறிக்கும் என்பர். இன்னும் சிலர் அது ரதத்தின் சக்கரத்தைக் குறிக்கும். ஏனெனில் ஏனைய இடி மின்னல் தேவர்களின் சக்கர சப்தமே இடிக்குக் காரணம் என்று எழுதப்பட்டுள்ளது என்பர்.
இவை அனைத்தும் இந்திரனுக்குப் பொருந்தும். தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியம் இந்திரனையும், வருணனையும் தமிழர்களின் முக்கியக் கடவுள் பட்டியலில் சேர்த்துள்ளது. இதில் இந்திரனைக் குறிக்கையில் ‘வேந்தன்’ என்ற சொல்லையே தொல்காப்பியர் பயன்படுத்துகிறார். இந்திரன் என்றால் அரசன், கடவுள் என்ற இரண்டு பொருள்களே நால்வேதங்களிலும் வருகிறது அவனுக்கு இடி மின்னல், மழை, வானவில் (இந்திர தனுஸ்) எல்லாம் சொந்தம். அவன் கையில் ‘இடி’ வஜ்ராயுதமாகக் காட்சி தருகிறது.
சிந்துவெளி முத்திரையில் சக்கரம் இந்திரனுக்கு மேலே இருக்கிறது. அவனுக்குக் கீழே அவனுடைய வாகனமான ஐராவதம் என்னும் யானை இருக்கிறது. இந்திரனுக்கு சக்ரன் என்ற ஒரு பெயர் உண்டு. புத்த மத நூல்கள் முழுதும் ‘சக்கன்’ என்ற சொல்லையே காணலாம்.
Gundestrup Caudron: Taranis
சூரியனை நாமும் அரசனுடன் ஒப்பிடுவோம். சூரிய வம்சம் என்பதோடு ஆதித்ய (சூரியன்) என்பது ஆதித்த கரிகாலன், விக்ரமாதித்தன் என்னும் நூற்றுக் கணகான இந்திய மன்னர்களின் பெயரில் வருகிறது. சுடர் நேமி என்னும் சொல் அரசனின் ஆட்சிச் சக்கரத்தையும் குறிக்கும். சக்கரம் என்பது இந்திரனின் பெயர் மட்டும் அல்ல. இந்திய அரசர்களின் சின்னமும் கூட. இந்தியாவின் அரசாங்கச் சின்னத்தில் அசோகரின் தர்மச் சக்கரத்தைக் காணலாம்.
தாரனிஸ் என்னும் கடவுளை இதாலிய கடவுள் (Jupiter) ஜூபிட்டருடனும் க்ரேக்க கடவுள் ஷூஸ் (Zeus) உடனும் ஒப்பிடுவர். எல்லோரும் வானத்துடனும் இடி மின்னலுடனும் தொடர்புடையவர்கள்.
Gajalakshmi in Gundestrup Cauldron
இரண்டு விஷயங்களை நினவிற்கொண்டு இந்த ஒப்புமைகளை ஆராய்தல் நலம்:1. ஒவ்வொரு கடவுளும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இனத்தாரால் வெவ்வேறு நாட்டில் வணங்கப்பட்டதால் போகப் போக கதை மாறும் 2. காலத்தின் வேறுபாட்டாலும், கலாசாரத்தின் வேறுபாட்டாலும் நூற்றுக்கு நூறு ஒற்றுமை எதிர்பார்ப்பது மடமை.
Indus Pasupati
Pasupati in Gundestrup
தோர் (Thor)
தோர் (Thor) என்பவர் நார்வீஜிய வைகிங் இனக் கடவுள். பழைய ஜெர்மானிய டொனார் (இடி) (Donar) என்னும் கடவுள் பெயர்ச்சொல்லில் இருந்து வந்தது இச் சொல் என்பர் ஆய்வாளர். இவர் கி.பி.700 முதல் 1200 வரையே வணங்கப்பட்டார். ‘தர்ஸ்டே’ (Thursday) என்னும் வியாழக்கிழமையின் பெயர் இவர் மூலமே நமக்குக் கிடைத்தது. இந்தியர்களும் இதே கொள்கை உடையவர்களே. இவரை ஒப்பிடும் ஜூபிட்டர் என்பது வியாழன் (Jupiter) கிரகத்தையும் வியாழக் கிழமையையும் குறிக்கும். நாமும் வியாழன் (குரு) பெயரையே தர்ஸ்டே-க்கு வைத்துள்ளோம்.
தோர் கையில் ஒரு சுத்தியல் உண்டு. அது அவருடைய வஜ்ராயுதம். இடி முழக்கம் எழுப்பும். அதைக் கொண்டு அவர் மலைகளையும் பிளப்பார். இதே வருணனை இந்திரனைக் குறித்து ரிக் வேதத்திலும் வருகிறது. இந்திரன் மலைகளைப் பிளந்து ஆற்று நீரை விடுவித்தான் என்று வேதங்கள் போற்றும். தோரின் சின்னம் இந்துக்களின் ஸ்வஸ்திகா (Swastika) சின்னம். இதுவும் சூரியனுடன் தொடர்புடையதே.
முடிவுரை
தோர், தாரனிஸ், ஜூப்பிடர், இந்திரன் ஆகியோர் இடையே நாம் காணும் இடி-மின்னல்-மழை-வஜ்ராயுதம்-சக்கரம்—சூரியன் ஒற்றுமையில் இருந்து அறிவது யாது?
1.இவர்கள் அனைவரும் ஒரே கடவுளே. இதற்கு மூலம் இந்துக்களின் வேதங்களே. ஏனெனில் காலத்தினால் பழமையான நூல் ரிக் வேதமே. துருக்கி நாட்டு பொகாஸ்கோய் (Bogazkoi Inscription) கல்வெட்டில் கி.மு.1400 ஆம் ஆண்டிலேயே இந்திரன், மித்ரன், வருணன், அக்னி பெயர் வருவதால் மறுக்க முடியாத தொல்பொருட் சான்று நம்மிடமுள்ளது.
2.இவை அனைத்தும் இந்து மதத்துடன் தொடர்புடையதே என்பதற்கு மற்றொரு சான்று டென்மார்க் நாட்டில் சதுப்பு நிலப் புதைகுழியில் கிடைத்த குண்டஸ்ட்ரப் அண்டா (Gundestrup cauldron) ஆகும். இதில் சக்க்ரத்துடன் தாரனிஸ், இந்துமத கஜலெட்சுமி, சிந்துவெளி பசுபதி முத்திரை ஆகிய அனைத்தையும் ஒருங்கே வடிவத்துள்ளான் ஒரு மர்மப் பொற்கொல்லன். இது டென்மார்க் (Denmark) நாட்டிற்கு வந்த மர்மம் துலங்கா விடினும் இது கி.மு. இரண்டு/மூன்றாம் நூற்றாண்டு சின்னம் என்பதில் அறிஞர் பெருமக்களிடையே கருத்தொற்றுமை உண்டாம்.
3.தாரனிஸ், தோர், ஜூப்பிடர் ஆகியோருக்கான மூல முதல்வன் இந்திரனையே சிந்துவெளி சிற்பத்திலும் காண்கிறோம் என்பது எனது துணிபு.
வாழ்க இந்திரன் ! வளர்க சிந்துவெளி ஆராய்ச்சி!!
No comments:
Post a Comment