ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை!
சப்த மாதாவுக்கு உயிர்ப் பலி தரும் சிந்து முத்திரை!
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1428; தேதி 22 நவம்பர், 2014.
எண்களில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது ஏழு என்ற எண்ணாகும். நான் ஏற்கனவே எழுதிய எண் தொடர்பான கட்டுரைகளின் விவரங்கள் இறுதியில் உள்ளது. அந்தக் கட்டுரைகளையும் படிக்க வேண்டுகிறேன்.
சிந்து சமவெளி நாகரீகத்தில் எண் (7) ஏழும் எண் (3) மூன்றும் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு எழுத்துக்களும் இந்து மதத்தில் ஆன்மீக விஷயங்களில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து சமவெளியில் ஏழு பெண்கள் நிற்கும் ஒரு முத்திரை ‘’சப்தமாதா’’ முத்திரை என்று அழைக்கப்படும். தமிழ்நாட்டில் பல கோவில்களிலும் சப்தமாதா சிலைகளை வரிசையாக வைத்திருப்பர். அது போலவே இந்த முத்திரையில் ஏழு மாதர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றனர்.
ஏழு கோடு உடைய சீப்பு எழுத்து
இதே போல பாபிலோனியாவில் ஏழு அரக்கர்கள் வரிசையாக நிற்கின்றனர். ஆனால் ரிக் வேதத்தைப் பொறுத்த மட்டில் ஏழு என்பது நல்ல பொருளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ரிக் வேதம் உலகின் மிகப் பழைய வேதம். யார் சிந்து சமவெளி பற்றி புத்தகம் எழுதினாலும் இந்த வேதத்தைக் குறிப்பிடாமல் புத்தகம் எழுத முடியாது. ஏனெனில் அதே பஞ்சாப் சமவெளியில்தான் வேதத்தின் முக்கியப் பகுதிகள் உருவாயின. சிந்து சமவெளி எழுத்துக்களைப் படிக்கையில் அது சரியா தப்பா என்று கண்டறிய ரிக்வேதம்தான் உதவ முடியும். ஆகையால் இதை அப்படியே காப்பது நம் கடமை.
வேதத்தில் ஏழு என்று வரும் இடங்களைக் கிழே உள்ள பட்டியலில் காணுங்கள்:
சப்த ரிஷிக்கள்
தீயின் ஏழு நாக்குகள்
சப்த சிந்து (ஏழு நதிகள்)
பிருஹஸ்பதியின் ஏழு வாய்
சூரியனின் ஏழு குதிரைகள்
ஏழு புனித இடங்கள்
ஏழு குருக்கள்
வானில் வசிக்கும் அசுரர்களின் 7 கோட்டைகள்
ஏழு புண்ய தலங்கள்
ஏழு புனித பாடகர்கள்
சூரியனின் ஏழு கிரணங்கள் (ஏழு வர்ணங்களில் கிரணம் விழும்)
ஏழு ஆண் குழந்தைகள்
எழு சூத்திரங்கள்
ஏழு சந்தஸ்கள்
ஏழு ஸ்வரங்கள்
விதை கருவில் உள்ள ந்ந்ழு சத்துப் பொருட்கள்
சப்த வத்ரி
சப்த வத்ரி என்னும் பெயருக்குப் பின் ஒரு கதை உண்டு. அவரை அவரது சகோதர்கள் தினமும் இரவு நேரத்தில் ஒரு அலமாரிக்குள் வைத்துப் பூட்டி விடுவர் என்றும் அவர் எந்தப் பெண்ணுடனும் குடும்ப உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே சகோதர்களின் நோக்கம் என்றும் இறுதியில் அவர் அஸ்வினி தேவர்களின் உதவியுடன் வெளியே வந்தார் என்றும் சொல்லுவர். இந்த சுவையான கதை அடையாளபூர்வ கதையாகும். அதாவது வறண்ட கோடையும் குளிரும் நீங்கி வசந்தகாலம் வருவதைக் குறிப்பதே இக்கதை. வேத கால ரிஷிகள் நாங்கள் மறை பொருளில்தான் பாடுவோம், பேசுவோம் என்று ஒரு மந்திரத்தில் கூறுவர். இதை அறிந்தே சங்க காலத் தமிழன் வேதங்களுக்கு ரஹசியம் (மறை) என்று பெயர் வைத்தான்.
சிந்துவெளியில் சீப்பு போன்ற எழுத்திலும் ஏழு கோடுகளைக் காண்க
சப்தகு என்று ஒரு வேத கால ரிஷி முனிவரும் உளர். இன்றும் சப்தரிஷி என்ற பெயர்களை நம் நண்பர்கள் இடையேயும் பார்க்கலாம். வான மண்டலத்தில் வலம் வரும் சப்தரிஷி மண்டல நட்சத்திரக் கூட்டத்தையும் அதில் வசிட்டருடன் இணபிரியாது நிற்கும் கற்புக்கரசி அருந்ததியையும் சங்க இலக்கியத் தமிழ் நூல்கள் ஆறு, ஏழு இடங்களில் விதந்து ஓதுவதையும் முன்னரே பல கட்டுரைகளில் கண்டு மகிழ்ந்தோம்.
பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்த்யாவந்தனத்தில் ஏழு ரிஷிகள் பெயரையும் சம்ஸ்கிருத யாப்பு இலக்கணத்தில் உள்ள ஏழு பெயர்களையும் சொல்லுவர். இது தவிர சப்தபதி, ஏழு கடல், ஏழு மலை, ஏழு நதி, ஏழு புனித நகரங்கள், ஏழு த்வீபங்கள் என்று ஏராளமாக ஏழு ஏழாக வகைபடுத்துவர்.
பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நாள்தோறும் சொல்லும் 7 ரிஷிகள்:
அத்ரி ப்ருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காஸ்ப, ஆங்கிரஸ ரிஷிகள்
பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நாள்தோறும் சொல்லும் 7 செய்யுள் இலக்கண அணிகள்:
காயத்ரி, உஷ்னிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பக்தி, த்ருஷ்டுப், ஜகதி
பிராமணர்கள் சந்தியாவந்தனத்தில் நாள்தோறும் சொல்லும் 7 வேத காலக் கடவுள்கள்:
அக்னி, வாயு, அர்க்க (சூரியன்), வாகீஸ (பிருஹஸ்பதி), வருண, இந்திர, விஸ்வேதேவா:
இதுதவிர மேல் ஏழு உலகங்களில் பூர், புவர், ஸ்வர் என்று சொல்லுவர். ஆனால் அதன் பொருள் அதற்கு மேலுள்ள மஹர், ஜன, தபோ, சத்ய லோகங்களையும் உள்ளடக்கியதாகும்.
ஏழு ராக்ஷசர்கள் — பூதங்கள், பாபிலோனியா
ராமபிரான் ஏழு மராமரங்களை ஒரே அம்பால் துளைக்கும் பரீட்சையில் தேறியது பற்றியும் அவருக்கு ‘’குட் –பை’’ — சொல்லும் போது விபீஷணன் நினைவுப் பரிசாக ஏழு தங்க பனைமரங்கள் பொம்மையைக் கொடுத்தது பற்றியும் ஏற்கனவே எழுதிவிட்டேன். இதே போல சங்கீத சப்தஸ்வர ரஹசியங்களையும் முன்னரே கண்டுவிட்டோம்.
திருமணத்தில் துவங்கும்சப்தபதி — ( ஏழு அடி நடந்து நட்பை உறுதி செய்து) — முதல் எல்லாவற்றிலும் ஏழு பிரதானம் ஆகும். கரிகால் சோழன் ரிக்வேதத்தில் சொன்ன படி எல்லோரையும் ஏழு அடி நடந்து சென்றுதான் வழியனுப்புவான் என்று சங்க இலக்கியம் செப்பும்:–
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
காலின் ஏழடிப் பின் சென்று கோலின்
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு
–பொருநர் ஆற்றுப்படை வரிகள் 165-167
‘’கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டமும் சங்க கால மன்னர் செய்த யாகங்களும்’’ — என்ற எனது 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கட்டுரையில் இது பற்றி எழுதியுள்ளேன்.
பாபிலோய ஏழு பூதங்கள்
வள்ளுவன் ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமைக்கும் (ஏழு பிறப்பு) பயன்படுவது பற்றி பாடிவிட்டான். ஆண்டாளோ எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் அடிமை என்று திருப்பாவையில் பாடுவாள். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவனைச் சந்தித்து அவன் முன்னால் கான் விளை பரிசுப் பொருட்களைக் குவித்து வணங்கியபோது எங்கள் குலம் உனக்கு ஏழு தலைமுறைக்கு அடிமைப்பட்டது என்று பெருமைபடப் பேசுவர். ஏழு என்றால் மிகப் பல — பரிபூரணம் என்ற பொருளும் இவைகளில் தொனிக்கும்!
பாபிலோனியாவில் உள்ள ஏழு பூதங்கள் குறித்து 3000, 4000 ஆண்டு பழமையான பாடல்கள் உள்ளன. எந்தௌ ஆங்கிலக் கட்டுரையில் பாடல் முழுதும் உளது. சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படும் புலி தேவதை, பேய் முத்திரை, கோமுக யக்ஷன் (ஆட்டு முக தக்ஷன் – தக்ஷன் செய்த யாகக் கதை — போன்ற முத்திரைகள்) ஆகியவற்றை சிந்து சம்வெளி முத்திரிகளுடன் ஒப்பிடுவது நலம் பயக்கும். ஆராய்ச்சியை புதிய திசையில் கொண்டு செல்லும்.
–சுபம்–
சிந்துசமவெளி பூத பேய் முத்திரைகள்
No comments:
Post a Comment