Wednesday, 20 December 2017

மெய்ப்பொருள் வேந்தர்

மெய்ப்பொருள் வேந்தர்…

நாடும் நகரும்:
மெய்ப் பொருள் வேந்தர் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலாடு (திருமுனைப்பாடி) நாட்டை ஆண்டவர். இந் நாட்டிற்குச் சேதிநாடு என்னும் பெயரும் உண்டு. இந்தச் செய்திகளை,

“சேதிநன் னாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான்”
“இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்து’’
“சோதிவெண் கொடிகள் ஆடும் சுடர்நெடு மறுகிற் போகிச்
சேதியர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்”
“இன்னுயிர் செகுக்கக் கண்டு எம்பிரான் அன்பர் என்றே
நன்னெறி காத்த சேதி நாதனார்’

என்னும் பெரியபுராணப் பாடல் பகுதியால் அறியலாம். மெய்ப் பொருள் வேந்தரை 'மலாடர் கோமான்’ எனச் சேக்கிழார் கூறியிருப்பதைக் கொண்டு, இவ்வேந்தர் மலையமான் மரபில் வந்தவர் என்பது புலனாகும். மலையமான் மரபில் வந்தவர்களுள் பல பங்காளிக் குடும்பங்கள் இருந்திருக்கலாம், அவற்றுள் ஒரு பிரிவுக்குச் சேதியர்' என்னும் மரபுப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவரே "மெய்ப்பொருள் வேந்தர்' அதனால்தான் இவர், சேதியர் பெருமான்', 'சேதி நாதனார் என்றெல்லாம் சேக்கிழாரால் குறிப்பிடப்பட்டுள்ளார். சேதியரால் ஆளப்பட்டதால் நாடு சேதி நாடு’ எனப்பட்டது.
ஆட்சியும் மாட்சியும்: மெய்ப் பொருள் வேந்தர் அறநெறி வழுவாமல் நாடுகாத்தார்; சிறந்த வீரமும் வலிமையும் உடையராய் விளங்கினார்; போர் முனைகள் பல வென்றார். முத்தநாதன் என்னும் பகை மன்னன் ஒருவன் மெய்ப்பொருள் வேந்தரை வென்று சேதிநாட்டைப் பறித்துக் கொள்ளப் பலமுறை முயன்று படையெடுத்துப் பார்த்தான்; ஒவ்வொரு முறையும் தோல்வியே அவனுக்குக் காத்துநின்றது; எனவே, குதினால் வெல்லச் சூழ்ச்சி செய்தான்.
புராண வரலாறு: மெய்ப் பொருள் மன்னர் படைவீரத்துடன் கொடை வீரமும் உடையவராய்த் திகழ்ந்தார்; புலவர்களைப் போற்றினார்; சிவனடியார்களைச் சிவனாகவே கருதி வழிபட்டார்; அடியார்கள் விரும்பியன வெல்லாம் அளித்து வணங்கினார். மெய்ப்பொருளாரது இவ்வியல்பறிந்த முத்தநாதன் ஒரு சிவனடியார்போல் கோலங்கொண்டு கோவலூர் அரண்மனை யெய்தினான். அடியார் என நம்பிய மெய்ப்பொருளார் அவனை வரவேற்று வணங்கினார். தான் அரிதிற் கிடைத்த அருள் நூற் பொருள் விளக்க வந்திருப்பதாக அவன் அறிவித்தான். அவனை மேலிருத்தி, தாம் கீழிருந்து, அருளுரை வழங்க வேண்டினார் மன்னர். அவன் அருள் நூலை எடுப்பவன்போல், மறைத்து வைத்திருந்த கூரிய கொலைக் கருவியை எடுத்து அரசர்மேல் பாய்ச்சி நினைத்ததை முடித்தான். அடுத்து நின்றிருந்த அரசரின் உதவியாளனாகிய தத்தன் என்பான் முத்தநாதன்மேல் பாய முனைந்தான். அரசர் தடுத்து, அடியாரை நகர் எல்லை தாண்டும்வரை காவலுடன் இட்டுச் சென்று நலமுடன் வழியனுப்பி வரும்படி பணித்தார். அவனும் அவ்வாறே செய்தான். அந் நற்செய்தியறிந்து மகிழ்ந்து மன நிறைவுடன் உயிர் நீத்தார் மெய்ப்பொருளார் - இது பெரிய புராண வரலாறு.
நாயனார்: இறைவன் திருவருளே மெய்ப்பொருள் என உணர்ந்து ஒழுகியதால் இவர் மெய்ப்பொருள் வேந்தர் எனப் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அங்ங்னமெனில் இவருக்கு இயற்பெயர் ஒன்று இருந்திருக்கவேண்டும். இவர் சிவநெறியிலும் சிவனடியார் வழிபாட்டிலும் மிக்குச் சிறந்து விளங்கியதால், சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராக வைத்து வழிபடப் பெறுகிறார். சைவ உலகம் இவரை மெய்ப்பொருள் நாயனார் என்றே அழைக்கும்.
காலம்: எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினர் எனக் கருதப்படும் சுந்தரரால் இவர் திருத்தொண்டத் தொகையில் பாடப்பட்டிருப்பதால், சுந்தரர் காலத்துக்கும் முற்பட்டவர் இவர் என்பது தெளிவு. "இவர் வழியில் சுதர்மான் முதலிய மூவர் வம்சம் உண்டாயிற்று. இவர் காலம் ஒளவையார் காலமாக இருத்தல் வேண்டும். தந்தை தெய்வீக அரசன், தாய் சோழன் குமாரியாகிய பொன்மாலை" - என இவரைப் பற்றி 'அபிதான சிந்தாமணி’ ஆசிரியர் எழுதியிருப்பது ஆராய்ச்சிக்குரியது.
• பெரிய புராணம் - மெய்ப்பொருள் நாயனார் - 1,6,8,24.
Source: “கெடிலக்கரை நாகரிகம்”, பேராசிரியர் புலவர் சுந்தர சண்முகனார்.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...