#ஹரப்பா_கந்தனும்_கார்த்திகை_மாதரும்
- அரவிந்தன் நீலகண்டன்
ஹரப்பா பண்பாட்டு இலச்சினை அது. எழுவர் கை கோர்த்து நிற்கின்றனர். மேலே ஒரு மரம் நெருப்பை போல பிளந்து நிற்க அதிலிருந்து கை வளையங்களும் இரு கொம்புகள் கொண்ட தலையணியும் அணிந்த ஒரு தெய்வம் வெளிப்படுகிறது. அதன் முன்னர் ஒரு பூசகர். பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. அருகில் ஒரு ஆடு. எதை அல்லது யாரை குறிக்கிறது இந்த இலச்சினை? ஹரப்பா பண்பாட்டு இலச்சினைகளை ஆராய்ந்தவர்களில் முக்கியமாக அஸ்கா பர்போலாவையும் ஐராவதம் மகாதேவனையும் கூற வேண்டும். (இருவருமே ஆரிய-திராவிட இரட்டையை ஒத்துக் கொண்டவர்கள். ஆனால் ஹரப்பா இலச்சினைகளை அறிந்திட வேத இலக்கியங்களில் உள்ள தொன்மங்களையே அடிப்படையாக கொண்டு இவற்றினை அணுகியுள்ளனர். இதை குறித்து இறுதியில் பார்க்கலாம்.) இது குறிப்பது முருகனாக இருக்கலாமா எனும் சாத்தியத்தை இங்கு முன்வைத்து இதனை அணுகலாம். முதலில் இந்த இலச்சினையில் உள்ள மரம் எது? இங்கிருந்து நம் தேடலை தொடங்கலாம்.
அந்த மரம் அரச மரம் என்றே முதல் கணிப்பில் தோன்றுகிறது. ஆனால் ஹரப்பா சித்திர எழுத்துகளில் கிளை பிரிந்த இலைகளுடன் காணப்படுவதை ’வட’ எனும் ஆலுடனேயே இணைக்கிறார் பர்போலா. உதாரணமாக:
fishfig– வட + மீன் = வடமீன் (அருந்ததி)
இதை ஆலமரம் என்றே கருதலாம். ஆலமரத்தின் சித்திர எழுத்துரு போலவே இந்த இலச்சினையில் காணப்படும் ‘மரமும்’ எழுவதை காணக. முருகனின் வசிப்பிடங்களில் ஆலும் ஒன்று.seal1 ’ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும்’ என பரிபாடல் அவன் வசிக்கும் இடங்களை கூறும். ‘துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும்’ என்று சொல்லும் கலித்தொகை. ஆல மரத்துக்கு மற்றொரு குறியீட்டுத் தன்மையும் உண்டு. அதற்கு பிறகு வருவோம். இனி இந்த ஏழு மகளிர் யார் அவர்களுக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்ப்போம். ஏழு மகளிரின் மிக பழமையான தொன்மம் அவர்களை சப்த ரிஷிகள் எனும் ஏழு விண்மீன்களுடன் இணைப்பதாகும். பாரத தொன்மங்களில் சப்தரிஷிகளுடன் தொடர்புடைய ஏழு பெண்கள் கார்த்திகை மாதர் அறுவரும் அருந்ததியும் ஆவர். சதபத பிராமணத்தில் (2,1,2,4) சப்த ரிஷிகளின் மனைவியரான கார்த்திகை மாதர் எழுவரென்றும் அதில் அருந்ததி தவிர பிறர் கற்பொழுக்கம் தவறியதால் தம் கணவரிடமிருந்து பிரிந்தனர் என்றும் அவரே கார்த்திகை மாதர் அறுவராகினர் என்றும் கூறப்படுகிறது. இவர்களை ஸ்கந்தனுடன் இணைக்கும் மிகப் பழமையான முழுமையான தொன்மம் மகாபாரதத்தில் (3.213.1-3.219.11) கூறப்பட்டுள்ளது. இங்கு அக்னியின் மகனான ஸ்கந்தனுக்கு கார்த்திகை மாதர் வளர்ப்பு அன்னையராக இருந்தனர் என்றும் எனவே அவர்கள் விண்மீன்களாக வானில் என்றென்றுமாக இருந்தனர் என்பதும் கூறப்படுகிறது.
கிருத்திகை எனும் வடமொழி பெயருக்கான் வேர் சொல் ‘அறுபடுதல்’. ’அறுமீன்’ என கார்த்திகை கூறப்படுவதில் ’அறு’ என்பது இதே murugan_babyபொருளை சிலேடையாக அளிப்பதையும் அஸ்கோ பர்போலா சுட்டுகிறார். அக்னி மூலமாக கார்த்திகை விண்மீன்கள் வானுலகில் இடம் பெற்றன என தைத்ரீய சம்ஹிதை (5.3.9) கூறுகிறது. ஆனால் கார்த்திகை மாதராகவே அருந்ததியையும் குறிக்கும் வழக்கம் இருந்துள்ளது என்பதை நம்மால் காண முடிகிறது. ’அறுபட்டு’ அறுவரானோரில் அருந்ததி இல்லாத போதிலும் அவள் கார்த்திகை மாதரில் முதன்மையானவள் அன அழைக்கப்பட்டுள்ளாள். அக்னியுடன் சப்த மாதரை இணைக்கும் கருத்தொன்றை முண்டக உபநிடதம் (1.2.4) கூறுகிறது. சுவாரசியமாக பின்னர் அக்னியின் ஏழு பண்புகளை குறித்து பேசும் போது அதே உபநிடதம் குகையின் வாழும் பிராணன் குறித்து கூறுகிறது. (குகன் அவனது மற்றொர் பெயர். குகையில் வளரும் கனலே என ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் பாரதி பாடுவார்.) இந்த தொன்மத்துடன் இணைந்த நடன உரு ஒன்று பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகிறது. அது சங்க இலக்கியங்களில் நாம் காணும் குரவை கூத்து ஆகும். ’குரவை என்பது எழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கை கோத்து அந்நிலைக் கொப்ப நின்றாடலாகும்’ என்பது வரையறை. இதில் குன்றக்குரவை முருகனை புகழ்ந்து செயப்படும் வழிபாட்டு செயலாகும். சப்த அன்னையராக இருந்து அறுவரான கார்த்திகை பெண்டிர், எழு மகளிர் ஆடும் குரவை கூத்து ஆகிய இரண்டுமே தொடர்புடையதாக இருக்கலாம். இரண்டுக்கும் தொடர்புடைய ஒரு இணைப்பாக முருக பெருமான் இருக்கிறார்.
இனி அந்த ஆடு. ஆட்டை பலி கொடுத்து முருகனுக்கு பூசை செய்யப்படுதல் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது ‘சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து’ அவன் வணங்கப்படுதலை திருமுருகாற்றுப்படை கூறுகிறது. (மறி-ஆடு).
goat1ஆலயத் தேர்களில் காட்டப்படும் திருமுருகனின் வடிவங்களை விளக்கும் முனைவர் ராஜு காளிதான் பின்வரும் வடிவத்தை சுட்டுகிறார்:
ஆலயத் தேர்களில் காணப்படும் முருகனின் இன்னொரு வடிவம் அருணதமூர்த்தி என்பது.
இந்த வடிவத்தில் காணப்படும் முருகன் ஒரு மூர்க்கமான வெள்ளாட்டை வீரபாகுவின் உதவியுடன் அடக்கி, அதை தன்னுடைய வாகனமாக்கிக் கொண்டார் என்பதைப் போல உள்ளது.
ஜடாமுடியுடனும், தாடியுடனும் காணப்படும் பிரும்மா ஒரு பலிதானம் கொடுக்கும் காட்சி உள்ளது.
அதில் வளைந்தக் கொம்புகளைக் கொண்ட ஒரு ஆடு யோம குண்டத்தில் விழுவது போலவும், தான் அடக்கிய ஆட்டின் மீது அமர்ந்தபடி முருகன் செல்லும் காட்சியும் காணப்படுகிறது.
இப்போது ஹரப்பா இலச்சினையை திரும்ப ஒரு முறை பாருங்கள்.
இந்த இலச்சினையில் மரம் பிளந்து நடு நிற்கும் தெய்வம் கந்த வழிபாட்டுடன் மற்றொரு வடிவத்துடனும் தொடர்புடையதாக இருக்கலாம்.ramachandran1 பழந்தமிழர் இலக்கியத்தில் முருக வழிபாட்டின் ஒரு முதன்மை வடிவமும் மிகவும் பரவியதுமான வழிபாடு கந்து வழிபாடு ஆகும். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் எஸ்.ராமச்சந்திரன் கூறுகிறார்:
சிவலிங்கம் என்று சைவர்களால் குறிப்பிடப்படும் வடிவம் சங்ககாலத்தில் கந்து அல்லது கந்தழி என குறிப்பிடப்பட்டது. இலங்கையின் பழமையான வரலாற்று நூலான மகாவம்சத்தில் தமிழகத்தில் லிங்க வழிபாடு வழக்கிலிருந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புகள் கந்து வழிபாட்டையே குறிப்பிடுகின்றன என்பதில் ஐயமில்லை. கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் எழுதப்பட்ட பட்டினப்பாலையில் (வரி 249) பூம்புகார் நகரிலிருந்த “கந்துடைப் பொதியில்” குறிப்பிடப்பட்டுள்ளது. திருமுருகாற்றுப்படை (வரி 226) முருகன் உறைகின்ற இடங்களாக மன்றம், பொதியில், கந்துடை நிலை கியவற்றைக் குறிப்பிடுகிறது. முருகனை ஸ்கந்தன் என அழைக்கின்ற சமஸ்கிருத மரபு கந்து வழிபாட்டு தொடர்பில் உருவான மரபாகலாம்.
ராமச்சந்திரன் குறிப்பிடும் கந்து வழிபாட்டுக்கும் லிங்க வழிபாட்டுக்குமான தொடர்பை ஸ்டெல்லா க்ராம்ரிஸ்ச் ஸ்தாணு என்பதுடன் தொடர்புபடுத்தி விளக்குகிறார். பிரபஞ்சத்தின் அச்சாக தூணாக ருத்ரன் நிற்பதையும் யோக நிலையில் விந்துவினை மேல் நோக்கி செலுத்தும் கோட்பாட்டின் தொன்மமாகவும் இதனை அவர் காட்டுகிறார். ( The Presence of Siva,1981, பக்.119) இதை ஹரப்பா யோகி இலச்சினையுடனும் தொடர்பு படுத்த முடியும். கிரேக்க புராணங்களிலும் பிரபஞ்சங்களின் ஊடாக நிற்கும் ஒளிமயமான நெருப்பு ஜுவாலைகளாலான கம்பத்தினைக் குறித்து கூறப்படுகிறது. எர் எனும் புராணவீரன் அவனது சிதை எரியூட்டப்படுதற்கு சற்று முன்னர் உயிரளிக்கப்பட்டு வேறு சிலருடன் பிற உலகங்களுக்கு செல்கிறான். அப்பாதையில் அவனும் அவன் கூட்டத்தாரும் “ஒரு செங்குத்தான ஒளிமயமான கம்பம் போன்ற ஒன்று விண் உலகங்களையும் மண்ணுலகையும் இணைத்து சுழலவைப்பதாக” கண்டனர். (Book of the Republic, 10 ஆம் பாடல்) ஆனால் இந்த உருவாக்கங்கள், ரிப்பளிக்கில் ஏறுவதற்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்னதான பழமையான பழங்குடி இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர். பின்லாந்து தேசத்தில் கிறிஸ்தவம் வருவதற்கு முந்தைய நம்பிக்கைகளில் உலக சிருஷ்டி குறித்த தொன்மப்பாடலில் (kaleval) இந்த பிரபஞ்ச அச்சு வருகிறது. இப்பாடலில் அது ஸம்போ (Sampo) என அழைக்கப்படுகிறது. ஸம்போ என்பது முவ்வேர்களை பூமியிலும், ஆகாயத்திலும், சமுத்திரத்திலும் கொண்ட பிரபஞ்ச மரம். இது அதர்வண வேதத்தில் கூறப்படும் பிரபஞ்ச அச்சுக்கம்பமான ஸ்கம்பத்துடன் தொடர்புடையதாகும். (Giorgio De Santillana, Hertha von Dechend, Hamlet’s Mill: An Essay on Myth and the Frame of Time , பக்.140) அதர்வண வேதம் (10,7) இந்த ஸ்கம்பத்தைனை இருப்பையும் இருப்பின்மையையும் தனது கிளைகளாக கொண்ட மரமாக பேசுகிறது. ஒரு தொன்மம் ஒரு ஆழ்ந்த தத்துவ குறியீடாக பரிணமிக்கும் தருணம். ஆக, இலச்சினையில் மரத்தின் நடுவில் காணப்படும் இந்த தெய்வம் கந்த கடவுளின் கந்து-ஸ்கம்ப வழிபாட்டின் ஆதி வடிவமாக இருக்க வாய்ப்புள்ளது.
murugan_mahishavadam ஹரப்பா இலச்சினைகளில் மற்றொன்றிலும் முருகன் காட்டப்பட்டிருக்கலாம். மகாபாரதம் ( 3.22) மகிஷாசுரனையும் பத்மர்களையும் தாரகனையும் ஸ்கந்தன் வேலெறிந்து வதம் செய்ததை சொல்கிறது. பின்னர் மகிடனை வதம் செய்தவள் கொற்றவை என்றான போதிலும் பத்மாசுரனையும் தாரகனையும் முருகன் வதைத்தான் என்பது மாறவில்லை. ஹரப்பா இலச்சினைகளின் தொன்மங்களை ஆராய்ந்த சோவியத் இந்தியவியலாளர்கள் மகாபாரதம் கூறும் மகிஷ வதத்தை இந்த இலச்சினை காட்டுவதாக கருதுகின்றனர். (The Soviet Decipherment of the Indus Valley Script: Translation and Critique, Ed. Arlene R. Zide, Kamil V. Zvelebil, Walter de Gruyter,1977, பக்.114-5) எனில் நாம் முதலில் கண்ட இலச்சினை முருக வழிபாட்டின் முதன்மை அம்சங்கள் பலவற்றை (குரவை, கந்து வழிபாடு, குறமகள் வெறியாட்டு, மறி பலியிடுதல்) இணைத்து காட்டும் ஒரு இலச்சினை என்றே நாம் கண்டடையலாம்.
முருகன் குறிப்பிட்ட இந்த தொன்மங்கள் அனைத்துமே இன்றைய பாரத பண்பாட்டிலும் சரி, தமிழர் வழிபாட்டிலும் சரி நன்றாக பேணி வளர்ந்து பரிணமித்திருப்பதை நாம் காணலாம். உண்மையில் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய ஆச்சரியமாகவும் மர்மமாகவும் இருக்கும் இலச்சினைகள், பாரத பண்பாட்டு சூழலில் பொருத்தப்படும் போது அழகிய முறையில் முடிச்சவிழ்ந்து நம் பண்பாட்டின் நம் ஆன்மிக மரபின் தொடர்ச்சியையும் செழுமையையும் நமக்கு காட்டுகின்றன.
இவை அனைத்துமே ஆரியர் படையெடுப்பு கோட்பாடு ஆரிய-திராவிட இரட்டை ஆகியவற்றை அறிவியல் ஆதாரமோ பண்பாட்டு அடிப்படையோ இல்லாததாகுகின்றன என்பது தெளிவு. ஒரு வேளை ஹரப்பா பண்பாட்டில் ஆரியர் வருவதற்கு முன்னால் இருந்து அவற்றை ஆரியர் உள்வாங்கினர் என கருதலாமா எனில் அது வரலாற்று ரீதியாக இயலாத ஒன்றாகும். ஏனென்றால் கார்த்திகை ஏழு சகோதரிகளாக இருந்து அறுவராகினர் என்பது பல மேற்கத்திய பாகன் தொன்மங்களில் உள்ளதாகும். ’வட’ எனும் சொல் ஆலமரத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. வாடை காற்று என்பது அதிலிருந்தே வருகிறது. vata‘வாடை’ எனும் சொல் காற்றுடன் தொடர்புடையதாக பிற ‘இந்தோ ஐரோப்பிய’ மொழிகளிலும் உள்ளன. ஆனால் தமிழிலேயே இது முழுமையான பொருளுடையதாக உள்ளது. மேலும் முருகவேள் வழிபாட்டின் மிக பழமையான மிகவும் பரவியிருந்த வழிபாட்டு முறையான கந்து வழிபாட்டின் வேர்களும் தொன்மங்களும் கூட மேற்கத்திய ‘இந்தோ-ஐரோப்பிய’ மொழிக்குழும தொன்மங்களில் வியாபித்துள்ளன. இவை அனைத்தையும் கணக்கிலெடுக்கும் போது வடமொழி தமிழ் மொழி ஆகியவற்றின் ஆதி வடிவங்கள் ஹரப்பா பண்பாட்டிலேயே இருந்திருந்தன. பின்னர் அவை அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து பரவி பல புதிய வடிவங்களை அடைந்திருக்கலாம் என கருதவே இந்த தொன்மங்களும், மொழியாடல்களும் இடம் தருகின்றன.
ஆனால் இந்த இருமை பிளவு பார்வை பல நேரங்களில் முழுமை நோக்கையும் முக்கிய கண்டறிதல்களையும் தடுத்து விடுகின்றன. உதாரணமாக மேற்கண்ட ஹரப்பா இலச்சினையில் எழுமாதரையும் கார்த்திகையையும் தொடர்புபடுத்திய அஸ்கோ பர்போலா அல்லது ஹரப்பா ஆராய்ச்சியாளர் அடுத்த இயல்பான நிலைபாடாக இந்த இலச்சினை காட்டும் தெய்வத்தை ஏன் கந்தனுடன் தொடர்புபடுத்தவில்லை எனும் கேள்வி எழுகிறது.
எதுவாயினும், பலவாறாக வெளிப்படும் பன்மையை ஏற்பவனாகவும் அனைத்து பன்மைகளும் ஒருங்கிணையும் ஒருமையாகவும் ஆறுமுகன் உள்ளான். பாரத பண்பாட்டின் சமன்வய இயக்கத்தின் முதன்மை வெளிப்பாடுகளில் முக்கியமானவர் முருகக் கடவுள்.
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண்டு உரைதலும் அறிந்தவாறே
என்பது நக்கீரர் வாக்கு.
அந்த ‘அறுவர் பயந்த ஆறமர் செல்வனை’ இந்த திருக் கார்த்திகை திருநாளில் வணங்குவோம். அதே நேரத்தில் இத்திருநாளின் பழமை வேர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை உணர்வோம். இத்தகைய பழமையும் புத்தாக்கமும் தொடர்ச்சியும் கொண்ட பண்பாடுகள் உலகெங்கும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஹிந்து பண்பாடு -குறிப்பாக தமிழ் நாட்டில்-இவற்றை தன்னுள் கொண்டு இன்றும் வாழ்கிறது. எனவே இதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், பரப்ப வேண்டியதன் அவசியம், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு கட்டாயமாகிறது. பாரதத்தை இணைக்கும் மற்றொரு முக்கிய அம்சம் சப்த அன்னையர்/சப்த கன்னியர் வழிபாடு. அதனை நாம் பிறிதொருநாள் காணலாம்.
காலைத் தேநீருடன் மீண்டும் நாளை சந்திப்போம்.
இதில் மேலும் அறிய இணையத்தில்:
http://www.harappa.com/indus/34.html
http://www.harappa.com/script/script-indus-parpola.pdf
http://www.harappa.com/script/parpola12.html
http://murugan.org/tamil/kalidos-1989.htm
குறிச்சொற்கள்: Harappa, ஆரியர், கடம்பன், கந்தன், கந்தபுராணம், கந்து வழிபாடு, கல்வெட்டியலாளர் எஸ்.ராமச்சந்திரன், கார்த்திகை, கார்த்திகை பெண்கள், காலை தேநீருடன் கொஞ்சம் இந்துத்துவா, சிந்து சமவெளி நாகரிகம், சிவலிங்கம், திராவிடர், முருகன், ராமச்சந்திரன், வானவியல், ஹரப்பா
No comments:
Post a Comment