Saturday, 9 December 2017

பலராமர், கிருஷ்ணர் காசு. இந்திய-கிரேக்க மன்னரால் 2200 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.

நாத்திக வாதம் பேசும் தமிழர்களும், தங்களுக்கு முன் திராவிடர் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்ட சில தமிழர்களும் நூறு வருடங்களாக உலகை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு தமிழ் இலக்கியம் பற்றிய அறியாமையே காரணம். ஏமாறுபவன் இருக்கும் வரை உலகில் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது இயற்கை நியதி. “இளிச்ச வாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்”, “குனியக் குனியக் குட்டுவார்கள்” என்ற பழமொழிகளே இதற்குச் சான்று.

வெள்ளைக் காரர்கள் அவர்களுடைய மதத்தைப் பரப்பவும், ஆட்சியை நிலை நாட்டவும் ஆரிய-திராவிட இனவாதத்தைப் பரப்பி இந்து தெய்வங்களை இரு கூறுபோட்டு ஒரு கோஷ்டி ஆரிய தெய்வங்கள் என்றும் மற்றொரு கோஷ்டி திராவிட தெய்வங்கள் என்றும் ‘அக்மார்க்’ முத்திரை குத்தினர். இதை சில திராவிடங்களும் பற்றிக் கொண்டு பொய்ப் பிரசாரம் செய்துவந்தனர்.

தமிழர்களுக்கு தெய்வங்களே கிடையாதென்றும் ஆரியர்கள்தான் இப்படி இந்து மத தெய்வங்களைப் “புகுத்தினார்கள்” என்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார்கள். ஆங்கிலமும் தெரியாத, தமிழும் படிக்காத, பாமர ஜனங்கள் அதை நம்பி ஏமாந்தனர். காஞ்சிப் பெரியவர் போன்ற சிலர் மட்டும் அன்பான முறையில் அறிவுபுகட்ட முயன்றனர். ராக்காயி, மூக்காயி, மஹமாயி, சாத்தன், ஐயனார் என்பன எல்லாம் வேத கால தெய்வங்கள் என்றும், அந்தப் பெயர்கள் அனைத்தும் சம்ஸ்கிருதப் பெயர்கள் என்றும் சொற்பொழிவாற்றி உதரணங்களையும் கொடுத்தார்.

சங்க இலக்கியத்தில் உள்ள 2389 பாடல்களைப் பயின்றவருக்கு ஆரிய, திராவிட என்ற சொல் எல்லாம் நகைப்பைத் தரும். திராவிட என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆரிய என்ற சொல் இருந்தாலும் அது இனவாதப் பொருளில் பயிலப்படவில்லை.

தமிழ் இலக்கியத்தின் மிகப் பழைய பகுதிகளில் ராமன், பலராமன், பரசுராமன், சிவன், கொற்றவை (துர்கை), முருகன் ஆகிய எல்லோரும் மதிப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கான இடங்களில் பிராமணர்கள், வேதங்கள், இந்து மத நம்பிக்கைகள், மறு ஜன்மம், தகனம், கர்ம வினைக் கொள்கை, இந்திரன் வருணன், அக்னி, சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், சுவர்க்கம், நரகம் முதலியவையும் குறிப்பிடப்படுகின்றன.

பெஸ்நாகர் என்னும் இடத்தில் கிரேக்க மன்னன் எழுப்பிய கருட ஸ்தம்பம்.

தொல்காப்பியத்தில் இந்திரன், வருணன், துர்க்கை, அக்னி, பலராமன், விஷ்ணு ஆகியவர்களைத் தமிழர் தெய்வங்களாகப் போற்றி இருப்பதை ஏற்கனவே மூன்று கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்.
இதோ சங்கத் தமிழ் நூல்களில் இருந்து சில பகுதிகள்:

புறநானூறு:
ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞாண் கொளீ இ
யொருகணை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிறலமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல (புறம் 55)

பொருள்: மலையையே வில்லாகவும் பாம்பை நாண் ஆகவும் கொண்டு ஒரே வில்லில் அசுரர்களின் மூன்று கோட்டைகளை அழித்த சிவபெருமானைப் போற்றும் பாடல் இது. கழுத்தில் கறை ஏற்பட்டு நீலகண்டனாக விளங்கும் சிவனுக்கு நெற்றியில் ஒற்றைக் கண் இருப்பது தலையில் நிலவின் பிறை இருப்பது ஆகியவற்றையும் புலவர் மருதன் இள நாகன் குறிப்பிடுகிறார்.

முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பழைய பாண்டிய மன்னனைப் பாராட்டும் பாடலில் காரி கிழார் என்னும் புலவரும் சிவனின் மூன்று கண்களையும், சடையையும் பாடுகிறார்:-முக்கட் செல்வர், நீணிமிர் சடை (புறம் 6)

சிவபெருமான் தான் ஆதிசிவன், முதற் கடவுள் என்று புறம் 166 கூறும்: ‘’முது முதல்வன்’’.

அகநானூறு:
ஞாலநாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வ
னாலமுற்றங்கவின் பெறத்தை இ (அகம் 181)
பொருள்:–உலகம் எல்லாம் பரவும் புகழுடைய நான்கு வேதங்களான பழைய நூலை அருளிய சிவபெருமானின் ஆலமுற்றம்! என்று பரணர் என்னும் புகழ்மிகு புலவர் பாடுகிறார். இதே பாடலில் ஆய் எயினன் என்பவன் முருகப் பெருமான் போல வீரம் உடையவன் என்றும் போற்றப் படுகிறான்.

பரணரும் கபிலரும் இரட்டைப் புலவர் போல சங்க நூல்கள் முழுதும் வியாபித்து நிற்கின்றனர். அவர் தம் திரு வாயால் மலர்ந்தருளிய சொல்லில் வேதத்தை, நான்மறைகளை ‘’முதுநூல்’’ என்று போற்றுவதைக் கவனிக்கவேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பரணருக்கே அது மிகப் பழைய நூல் என்றால், வேதங்களின் காலத்தை யாரே கணிக்க வல்லார்?

நக்கீரர் பாடிய பாடலில் (புறம் 56) இந்துமதம் பற்றிய ஏராளமான கருத்துகளை அளிக்கிறார்:-
ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்ச்சி மணிமிடற்றோனுங்
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல் வெந் நாஞ்சிற் பனைக் கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்
மணிமயி உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் (புறம் 56, நக்கீரர்)

பொருள்:–காளையைக் கொடியாகக் கொண்ட தீயைப் போல விளங்கும் சடையையும் மழு என்ற ஆயுதத்தையும் உடைய நீலமணி போன்ற கழுத்தை உடையவனும், கடலில் வளரும் வெண்மையான சங்கு நிறம் கொண்ட, கொல்லும் கலப்பை என்ற ஆயுதத்தை உடைய பனைக்கொடி உடைய பலதேவனும் தூய்மை செய்யப்பட்ட நீலமணி போன்ற மேனியயும் கருடக் கொடியையும் உடைய வெற்றியை விரும்பும் கண்ணனும் , நீலமணி போன்ற மயில் கொடி உடைய மாறாத வெற்றி பொருந்திய மயில் ஊர்தியை உடைய முருகப் பெருமானும் உலகம் காக்கும் வலிமையும் தோற்காத நல்ல புகழும் உடையவர்கள்.

இந்துமத தெய்வங்களின் கொடிகள் வாகனங்கள், வருணனைகள் எல்லாம் ஆப்கனிஸ்தான் முதல் கன்னியாகுமரி வரை இதே காலத்தில் ஒரே மாதிரியாக இருப்பது எண்ணி எண்ணி இறும்பூது எய்ய வைக்கும். குஷான மன்னர்கள் கட்பீஸசும், கனிஷ்கரும் காளைவாகனத்துடன் சிவன் இருக்கும் நாணயங்களை வெளியிட்டனர். வடமேற்கு இந்தியப் பகுதிகளை ஆண்ட கிரேக்க வம்சாவளி மன்னர்கள் பலராமனுக்கும் கண்ணனுக்கும் (Bactrian coins of Agathocles 180 BCE) நாணயம் வெளியிட்டதும், (Greek King Heliodorous 113 BCE) விஷ்ணுவின் கருட வாகன தூண் அமைத்ததும் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்தன. அதற்கு 200 வருடங்களுக்குப் பின் 4000 மைல்களுக்கு அப்பால் வாழ்ந்த நக்கீரரும் அதையே செப்புவது இந்து மதத்தின் பரந்த தாக்கத்தை நிலைநாட்டுகிறது.

பல ராமன் & கண்ணன்
நக்கீரர் பாடலில் பலராமனை பனைக்கொடியோன் என்று பாடியதைக் கண்டோம். தொல்காப்பியரும் இந்த பனைக்கொடியைக் குறிப்பிட்டவுடன் உரைகாரர்கள் இது பலதேவனுடைய கொடி என்று உரை கண்டுள்ளனர். புறம் 58ல் இதைவிட உறுதியான ஒரு செய்தி வருகிறது. கண்ணனும் பலதேவனும் இணைபிரியாமல் இருப்ப்பது எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழ் நாட்டில் கண்ணனுக்கும் பலதேவனுக்கும் சேர்ந்தே சந்நிதிகள் இருந்தன. காலப்போக்கில் பலதேவன் மறைந்துவிட்டார். காரிக்கண்ணன் பாடிய புறம் 58ல் இரண்டு மன்னர்கள் ஒன்றாக இருந்ததைக் கண்டவுடன் அவருக்கு ‘’கண்ணன் – -பலதேவன்’’ நினைவே வந்தது. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு இருந்தாரை காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடல் இதோ:–

“பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும், என்று
இரு பெருந்தெய்வமும் உடன் நின்றா அங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?”
இந்தப் பாடலில் ‘’இரு பெரு தெய்வங்கள்’’ என்ற சொற்றொடரைக் கவனிக்கவும். இனி சில ராமாயணக் காட்சிகள்:

தமிழ் ராமாயணம்
வால்மீகி, கம்பன் சொல்லாத விஷயங்களை சங்கப் புலவர்கள் கூறுகின்றனர்:-
புறம் 378 ஊன்பொதி பசுங்குடையார்:–
கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
. . . . . . . . .
பொருள்:– இராமனுடன் வந்த சீதையை மிக்க வன்மையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின் , சிவந்த முகமுடைய மந்திகளான சுற்றம், அந்த அணிகளை அணிந்து விளங்கிக் கண்டவர் நகைத்து மகிழ்ந்தது போல……..

பெண் குரங்குகளுக்கு (மந்தி) எந்த நகையை எந்த உறுப்பில் அணிய வேண்டும் என்று தெரியாததால் வெவ்வேறு இடங்களில் தாறு மாறாக அணிந்தனவாம்!

ராவணன் ஒரு தமிழன் என்று சிலர் பொய்ப் பிரசாரம் செய்கையில் 2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஊன்பொதி பசுங்குடையார், ராவணன் ஒரு அரக்கன் என்று தெள்ளத் தெளிவாக உரைப்பது படித்துச் சுவைக்க வேண்டியது ஆகும்.

அகம் 70 மதுரைத் தமிழ்கூத்தனார் கடுவன் மள்ளனார்:–

. . . . . .
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரு பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
பல் வீஷ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

பொருள்:– வெற்றிவேலை ஏந்திய பாண்டிய மன்னரின் மிகுந்த பழமை உடைய திருவணைக்கரையின் (தனுஸ்கோடி) அருகில், ஒலிக்கும் பெரிய கடல் துறையில், பறவைகள் ஆரவாரம் செய்தன. வானரங்களுடன் போர் திட்டத்தை வகுப்பதற்காக இராமன் அங்கே வந்தான். ஆல மரத்தில் இருக்கும் பறவைகளிடம் கை அசைத்து பேசாதே என்று சைகை செய்தவுடன் பறவைகள் பேசாமல் இருந்தன. அதே போல இவ்வூரும் ஆரவாரம் அடங்கி அமைதியாகி விட்டது.

இராம பிரானின் அபூர்வ ஆற்றல் பற்றிக் கூறும் இப்பாடல் போலவே பிற பாடல்களில் கிருஷ்ணனுடைய அபூர்வச் செயல்களையும் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டின் தென்கோடி வரை, மாய மந்திரம், அபூர்வ ஆற்றல்கள் பற்றி நம்பிக்கை ஏற்பட்டத்தானது பகுத்தறிவு என்ற பெயரில் பொய் பிரசாரம் செய்வோருக்கு சரியான சவாலாக அமையும்.

அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்திரர்

கண்ணனின் அபூர்வ ஆற்றல்

அகம் 59 (மதுரை மருதன் இளநாகன்)
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீ இயர்
மரம் செல மிதித்த மா அல் போல
புன் தலை மடப்பிடி உணீ இயர்

கண்ணன் குருந்த மரத்தை ஆய மகளிர்க்கு (கோபியர்) வளைத்துத் தந்தாற் போன்று ஆண்யானை ஒன்று, தன் பெண் யானை உண்ணும்படியாக மரத்தின் கிளையை வளைத்துத் தந்தது.
இதே பாடலில்,

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
என்ற வரிகள் திரு முருகனின் சூரபதுமன் வதையையும், திருப்பரங் குன்றத்தின் பெருமையையும் கூறுகிறது.

புறம் 174 (மாறோக்கத்து நப்பசலையார்):–
அணங்குடை அவுணர் கணங்கொண்டி ஒளித்தெனச்
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
அஞ்சன உருவன் தடுத்து நிறுத்தாங்கு

—— . . .
பொருள்:–மற்றவரை வருத்தும் அச்சம் பொருந்திய அரக்கர் ஞாயிற்றை எடுத்துக் கொண்டுபோய் மறைத்தனர். தொலைவில் விளங்கக் கூடிய அந்த்த ஞாயிற்றைக் காணாததால் இருளன்னது உலகத்தாரின் கண்ணை மறைத்தது. அப்பொழுது உலகத்தாரின் நோய்கொண்ட துன்பம் நீங்குமாறு மிகுந்த வன்மை உடைய மை போன்ற கரிய நிறம் உடைய மேனியனான திருமால், அந்த வட்டமான ஞாயிற்றைக் கொண்டுவந்து இந்த உலகத்தின் இருள் நீக்குவதற்காக வானத்தில் நிறுத்தினான் – என்று புறநானூற்று உரை கூறும்.

இது சூரிய கிரகணம் பற்றிய பாடலென்றும் மஹாபாரதத்தில் ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சியாக இது இருக்கலாம் என்றும் நான் ஏற்கனவே எனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டேன். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டின் தென் கோடி வரை கண்ண பிரானின் மாயச் செயல்கள் பற்றிய கதைகள் பாமர மனிதனுக்கும் தெரிந்ததை இப்பாடலின் வாயிலாக அறிகிறோம்.

ராமாயண சிற்பங்கள்

அகம் 175 (ஆலம்பேரி சாத்தனார்)
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி
நேர்கதிர் நிரைத்த நேமி அம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்
பொருள்:– கதிர்கள் ஒழுங்காக அமைந்த சக்கரத்தை உடைய திருமாலின் பகைவர் போர் ஒழிவதற்குக் காரணமான மார்பிலுள்ள மாலை போல பல நிறம் உடைய வான வில்லை உண்டாக்கியது. கண்ணன் கையில் உள்ள சுதர்சன சக்ரம் தமிழ் நாடு வரை புகழ் எய்தியதைக் காண்கிறோம்.

புறம் 198 (வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்):–
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம் – என்று புலவர் குறிப்பிடுவதை சிலர் ஆலமரத்துக்கு அடியில் அமர்ந்த சிவன் என்றும் இன்னும் சிலர் ஆல் இலையில் மிதந்த திருமால் என்றும் உரை கண்டுள்ளனர்.

பரசுராமன் அகம் 220 (மருதன் இளநாகன்):–

மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்விக்
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்

பொருள்:– என்றும் நீங்காத வேள்வித் தீயை உடைய செல்லூரில், மதம் பொருந்திய யானையின் கூட்டம் போர்முனையிலே அழித்த மன்னர் பரம்பரையை அழித்தவர் பரசுராமன். அவர் முன்காலத்தில் அரிதாய் முயன்று செய்த வேள்வியில் கயிற்றால் கட்டப்பட்ட வேள்வித் தூணைப் போல அரிதில் காண முடியாதது என் தலைவியின் மார்பு.

கேரள மக்கள் பரசுராமனை முழுமுதற் கடவுளாக வழிபடுவதும் மேலைக் கடற்கரை முழுதும் பரசுராமன் தந்த பூமி என்று கொண்டடுவதும் எல்லோரும் அறிந்ததே. அவர் சங்கப் பாடலில் மழுவாள் நெடியோன் என்று போற்றப்படுவது படித்து இன்புறத் தக்கது.

தமிழர்கள் 2000 ஆண்டுகளாக வணங்கும் ராமன், பலராமன், பரசுராமனை நாமும் வணங்கி தமிழ் பண்பாட்டைத் தழைக்கச் செய்குவோம்.

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...