Saturday, 7 December 2019

தலை கீழாக கட்டப்பட்ட கோயில்,

தலை கீழாக கட்டப்பட்ட கோயில், தமிழர்களின் வியக்க வைக்கும் கட்டிடக் கலையை உணர்த்தும் கழுகுமலை வெட்டுவான் கோயில்
 கழுகுமலை வெட்டுவான் கோயில் தலை கீழாக கட்டப்பட்ட கோயில் தமிழர்களை தலை நிமிர வைத்த கட்டிடக் கலை... வாருங்கள் வெட்டுவான் கோயில் விபரங்களை முழுமையாக பார்ப்போம்...


கழுகுமலை வெட்டுவான் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை எனும் இடத்தில் அமைந்துள்ளது. கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கழுகு மலையில் ஊரிலிருந்து 1 கிமீ தொலைவில் இருக்கும் மலை மீது குடைவரை கோயில்கால பிரமாண்டமாக காட்சி தருகின்றது.

1200 ஆண்டு பழமை:

இந்த குடைவரை கோயில் திராவிட கட்டிட கோயில் வடிவமைப்பை பயன்படுத்தி சுமார் கிபி 800ல் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.


பொதுவாக ஒரு கோயிலோ அல்லது வீடோ கட்டும் போது அஸ்திவாரம் போட்டு கீழிருந்து மேலாக கட்டுவார்கள், ஆனால் இந்த குடை வரை கோயில் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளதால், மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது.

அதாவது முதலில் கோபுரம், பின்னர் அப்படியே கீழாக சென்று சிற்பங்கள், கருவறை, அடித்தளம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.தலைகீழாக கோயிலை கட்ட மலையை குடைந்து, தமிழர்களின் கட்டிட  திறமையை தலை நிமிரச் செய்துள்ளனர்
.
இந்தியாவில் குடைவரை குகைக் கோயில் என்றது ஞாபகம் வருவது எல்லோராவில் அமைந்துள்ள கைலாசநாதர் குகைக் கோயில்.

அந்த வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள எல்லோரா என சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பாக மலையை குடைந்து குகை கோயிலை பாண்டிய மன்னர்களால் செதுக்கப்படுள்ளது. 

பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவ கன்னியர், பூத கணங்கள் என பல சிற்பங்கள் மிகவும் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பல சிலைகள் முழுமைப்பெறாமலும் நிற்கின்றன.

கருவறையில் பிள்ளையார் சிலை வைக்கப்படுள்ளது. ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட மிருதங்க தட்சிணாமூர்த்தி இங்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.*

கோயில் அரைகுறையாக நிறுத்தப்பட்டதற்கு பல யூகங்கள் கூறப்படுகின்றன. கோயில் வேலை நடந்து கொண்டிருந்த நிலையில், பாறையில் வெடிப்பு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டிருக்கலாம் அல்லது போரில் மன்னன் இறந்ததால் அப்படியே விடப்பட்டிருக்கலாம் என கருத்து நிலவுகிறது.

தாமரைப் பூ தொங்குவது போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. கரடுமுரடான கழுகு மலை மீது ஏறி சற்று எட்டிப்பார்த்தால் மிகவும் கலைநயமிக்க வெட்டுவான் கோயில் தென் படுகிறது.

ஒரே கல்லினால் ஆன கோயில் என்பது தான் சிறப்பு. ஒரு பெரிய மலையை ‘ப’ வடிவில் செதுக்கி அதில் 7.50 மீட்டருக்கு சதுரமாக வெட்டி, கோயிலை மேலிருந்து கீழாக வெட்டி அர்புதமாக உருவாக்கியுள்ளனர்.கழுகு மலை ஊருக்கு ஒரு அடையாளமாக இந்த கோயில் திகழ்கின்றது.

மலையின் மற்றொரு பகுதியில் சமணர்கள் சித்தாந்தம் போதித்த பல்கலைக்கு அடையாளமாக பல பாறைகளின் செதுக்கப்ப்ட்ட தீர்த்தங்கரர்களின் சிற்பங்களே சாட்சியாக அமைந்துள்ளன.

இதில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர் சிற்பங்கள் 90க்கும் மேற்பட்ட வட்டெழுத்துக்கள் மலையை ஒரு மிகச் சிறந்த சிற்பக்கூடமாக காட்சி அளிக்கிறது.

இந்த சமணக் கல் படுக்கைகள் குடைவரை கட்டிட அமைப்பு பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (கிபி 768-800) உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

 குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என்பார்கள் அது போல கழுகு மலையில் கீழே முருகன் குடைவரை கோயில் உள்ளது.

இந்த கழுகு மலையில் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலில் ஒன்றாக இங்கு அமைந்துள்ள முருகன் கோயிலும் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள  முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழின் மூலம் பாடியுள்ளார். இந்த திருத்தலத்தில் முருகன் மேற்கு நோக்கி பார்த்தபடி காட்சி அளிக்கிறார். 

மேற்கு நோக்கி முருகன் அமைந்துள்ள மூன்று திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த கோயில் ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது.
இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார்.

வாழ்க பாரதம் 🇮🇳
வளர்க பாரதம் 🇮🇳

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...