உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் போப்டே, சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வு காண்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்ச்சு ஆகியோர் அடங்கிய மத்தியஸ்தக் குழுவை கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவின் சமரசப் பேச்சுவார்த்தையில் அனைத்து தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 6ந் தேதி தொடங்கப்பட்டு தினசரி வாதங்கள் நடைபெற்றன. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 16ந் தேதியன்று நிறைவடைந்தன.
உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்தக் குழுவின், சமரசப் பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளையும் தீர்வுகளையும் அறிக்கையாக முத்திரையிட்ட உறையில் அன்றைய தினம் தாக்கல் செய்தது. இந்த நிலையில் இன்று காலை அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது.
No comments:
Post a Comment