Tuesday, 6 November 2018

மாதந்தோரும் பண்டிகை – அர்த்தமுள்ள ஹிந்து மதம்அற்புத இந்து மதம்...!


தமிழகத்தில் ஹிந்து துவேஷம் என்பது இப்பொழுது எல்லை மீறி போய்விட்டது. இந்துக்களின் பண்டிகையை விடுமுறை தின வாழ்த்து என்று கூறியதில் இருந்து இன்று தமிழர்கள் வேறு, ஹிந்துக்கள் வேறு என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள் திராவிடத்தை (அதாவது ஹிந்து எதிர்ப்பை) வைத்து பிழைப்பு நடத்திவந்த ஈவேரா கைத்தடிகள்.
நிற்க, இப்பொழுது இன்னும் ஒரு படி மேல போய், திராவிட தலைவர் கி.வீரமணி – பண்டிகைகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது என்று பொருள்பட ட்வீட் செய்துள்ளார்.

Asiriyar K.Veeramani@AsiriyarKV
இந்து வெறியை - பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டிட‘புஷ்கரணி’
‘அனுமன் ஜெயந்தி’, ‘நாரதர் ஜெயந்தி’ என்று புதிதுப் புதிதாக அறிமுகமா?
தமிழர்களே, இவர்களின் “பக்தி மயக்க பிஸ்கட்டில்” ஏமாறாதீர்!
தமிழில்கூட பெயரில்லா... https://www.facebook.com/1411405422228616/posts/1913762418659578/ …
279
304 people are talking about this


விநாயகர் சதுர்த்தி விழா, அனைத்து பேதங்களையும் களைந்து மக்களை ஒருங்கிணைக்கிறது. பண்டிகைகள் பண்பாட்டை, பாரம்பரியத்தை வளர்த்து எடுக்கிறது. ஹிந்து எதிர்ப்பையே பிரதானமாக கொண்ட கட்சிக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது வியப்பில்லை.
வாழ்க்கையை ஒரு பண்டிகையாக கொண்டாடினர் நமது முன்னோர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என பண்டிகைகளுக்கு குறைவு எதும் இல்லை நமது இந்திய திருநாட்டில். இப்படி வாழ்ந்த நம்மை சென்ற சில நூற்றாண்டுகளாக பாரதத்தின் மேல் படையெடுத்து வந்தவர்களின் சூழ்ச்சியால் நம் பெருமையை நாமே மறந்து இருந்தோம். எவ்வாறு வாழ்க்கையை கொண்டாடினோம், கொண்டாடிய பண்டிகைகள் என்னென்ன என்பதின் சிறு தொகுப்பே இக்கட்டுரை.
சித்திரை
சித்திரையில் இருந்து ஆரம்பிப்போம். சித்தரை முதல் நாள் வருட பிறப்பு. 60 வருடங்களை கொண்டது நமது தமிழ் பஞ்சாங்கம். சிங்கப்பூர், இலங்கை, மலேசியாவில் வாழும் தமிழர்கள்கூட சித்தரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். மா, பலா, வாழை முதலிய முக்கனிகளை இறைவனுக்கு படைத்து கொண்டாடுவோம். இதை மாற்றி தை முதல் நாள் புது வருடம் என்று தெலுங்கு பேசும் வம்சத்தினர் ஒருவர் மாற்ற முயன்றதை, நல்ல வேளை – மக்கள் அதை நிராகரித்து விட்டனரராம நவமி – சித்திரை மாதம், வளர்பிறையில் நவமி திதியில் விஷ்ணு அவதரித்த நாளே ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுகிறது. பகவான் ஸ்ரீராமனின் பெருமைகளை சொல்லவே பல கட்டுரைகள், புத்தகங்கள் போறாது. பூஜைகள், விரதங்களை மக்கள் மேற்கொள்வர். காலையில் உணவு உண்ணாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும் என்பது ஐதீகம். ராம நாமத்தின் மகிமையை உணராத பக்தர்களே இல்லை. இன்றும் வடநாட்டில் ஒருவரை பார்க்கும் போது “ராம் ராம்” என்றே முகமன் கூறுவர். சங்கடத்தில் இருக்கும் போது “ஸ்ரீ ராம ஜெயம்” எழுதுவதும் தொன்று தொட்டு வரும் வழக்கம்.சித்திரை திருவிழா : மதுரையில் தின்தோறும் திருவிழாதான். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணமும், அதன்பின் தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ஒருங்கே சேர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.மதுரை மற்றும் சுற்று பகுதிகளில் இருந்து வரும் மக்களின் எண்ணிக்கை வருடாவருடம் கூடிக்கொண்டே இருக்கிறது.சித்ரா பௌர்ணமி : சிவபெருமான் வழிபாடு சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும். மக்கள் பொங்கலிட்டு, அன்னதானம் செய்து வழிபடுவர். இவ்விழாவை பற்றி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆறு, நதி, கடல் போன்ற நீர் நிலைகளில் மக்கள் ஒன்று கூடி கலவை சாத உணவுகளை உண்டு மகிழ்கின்றனர்.
இது தவிர – மத்ஸ்ய ஜெயந்தி, வசந்த நவராத்ரி, ரமணர் ஆராதனை விழா, ஸ்ரீரங்கம் கஜேந்திர மோட்சம், சமயபுரம் மாரியம்மன் பூ சொரிதல் விழா, ஆதிசங்கரர் ஜெயந்தி, மஹாவீர ஜெயந்தி மற்றும் ராமானுஜ ஜெயந்தி என்று பல விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
வைகாசி
நரசிம்மர் ஜெயந்தி: வைகாசி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் நரசிங்க பெருமாள். அன்றய தினம் அனைத்து நரசிம்மர் கோவில்களில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.வைகாசி விசாகம்: முருகப்பெருமான் அவதரித்த தினம், அணைத்து முருகன் ஆலயங்களிலும் அழகு குமரனின் புகழ் பாடி கொண்டாட்டம். நம்மாழ்வார் அவதரித்த நாளும் இந்த நன்னாளே.திருவாரூர் தேர் : திருவாரூர் தேர் திருவிழா நடைபெறுவது இந்த மாதத்தில் தான். உலக பிரசித்தி பெற்ற ஆழி தேர் உலகிலேயே மிகப்பெரிய தேர் என்பது குறிப்பிடத்தக்கது. வான் அளாவிய கோஷங்களுடன் தேர் வருவதை காண கண் கோடி வேண்டும்.
ஆனி
கூர்ம ஜெயந்தி: ஆனி மாதம் தேய் பிறை துவாதிசியில் கூர்ம அவதாரம் நிகழ்ந்தது. பகவான் நாராயணன் கூர்ம அவதாரம் எடுத்து மந்திர மலையை தாங்கி நின்று தேவர்கள் அமுதம் பெற உதவினார்.
ஆனி மாத பௌர்ணமி : பெண்கள் சாவித்திரி நோன்பு மேற்கொள்ளும் நாள் இது. பெண்கள் தமது கணவன்மாரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் வேண்டி வழிபடுவது. இன்றைய தினம் குரு பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. குருவை வணங்குவதின் மூலம் குருவருள் கிடைக்க பெறலாம்.குரு பூஜை : ஆனி பூரத்தன்று அமர்நீதி நாயனாரின் குருபூஜையும், சிவனடியாருக்கு தொண்டு செய்ய தயங்கியதால் தனது மனைவியின் கரத்தை வெட்டி எறிந்த கலிக்கம்ப நாயனார் ஆகியோரின் குருபூஜையும் இந்த மாத்தில் தான் நடைபெறுகிறது.மாணிக்கவாசக பெருமானின் குரு பூஜை : ஆனி மாத மக நட்சத்திரத்தன்று சிதம்பரத்தில் ஈசனோடு ஐக்கியம் ஆனார். திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகாதார் என்ற புகழ் பெற்ற மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மகத்தில் நடைபெறும்.
ஆடி
தட்சிணாயணம் ஆரம்பம் ஆகும் ஆடி மாதம் திருவிழாக்களும் பண்டிகைகளும் ஆரம்பிக்கும் மாதமாகும்.
ஆடி வெள்ளி: இந்த மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளியும் அம்மன் வழிபாடு சிறப்பாக நடைபெறும். அனைத்து அம்மன், சக்தி, துர்க்கை ஆலயங்களில் பக்தி மனம் கமழும், யாகங்கள் நடைபெறும். விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கைகூடும்.ஆடி பூரம் : பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராகிய ஆண்டாள் அவரதரித்த திருநாள். ஆண்டாள் அருளிய திருப்பாவையும், வாரணம் ஆயிரமும் பாடி வர மனம் போல் மாங்கல்யம் அமையும். சிறிவில்லிபுத்தூர் ஆலயத்தில் விமர்சையாக விழா நடைபெறும்.ஆடி பெருக்கு : ஆடி 18 -ல் நடைபெறும் இந்த திருவிழா மிக விமர்சையாக கொண்டப்படுகிறது. இந்த பருவத்தில் தமிழக ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். நீர் நிலைகளுக்கு பூஜை செய்து தீபம் ஏற்றி வழிபடுவர். நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் வாழ்வில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் என்பது நம்பிக்கை.ஆடி அமாவாசை : பித்ருக்களின் ஆசீர்வாதத்தை வேண்டி வழிபாடும் நாள். இந்நாளில் வழிபடுவதில் மூலம் நம் பாவம் தொலைந்து, நமது சந்ததியினருக்கு நல்வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.ஆடி கிருத்திகை : கந்தனுக்கு உகந்த நாள். அன்று பக்தர்கள் காவடி எடுத்து, பாலபிஷேகம் செய்து தேவ சேதுபதியை வணங்குவர்.
ஆவணி
ஆவணி அவிட்டம்: அந்தணர்களுக்கான பண்டிகை. பூணுல் அணிபவர்கள் அவிட்ட நட்சத்திரத்தில் விரதம் இருந்து தமது பழைய பூணுலை மாற்றி புதியதை அணிந்து கொள்வர்.கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி : ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாள். ஆவணி மாதம் அஷ்டமி திதியில் கோகுலாஷ்டமி என்றும், ரோகினி நட்சத்திரத்தில் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. அன்று அணைத்து விஷ்ணு ஆலயங்களிலும் கொண்டாட்டங்களுக்கு குறைவு இல்லை. கண்ணன் என்றாலே கொண்டாடட்டம் தானே.கோவில் உற்சவங்களில் உறி அடித்தல் கண்டிப்பாக இடம் பெரும். வீடுகளில் கிருஷ்ணர் பாதம் வரைந்து குழந்தை கண்ணனை வரவேற்பர். சிறுவர் சிறுமியர்களுக்கு கண்ணன் மற்றும் ராதையை போல் அலங்காரம் செய்து மகிழ்வர்.வரலட்சுமி விரதம் : ஆவணி மாதம் ஒரு வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் வரும். அன்று மாங்கல்ய பலம் கூடவும், வீட்டில் லட்சமி கடாட்சம் பெருகவும் பெண்கள் நோன்பு மேற்கொள்வர். அனைத்து அம்மன், துர்க்கை, சக்தி மற்றும் மஹாலட்சுமி கோவில்களிலும் திருவிளக்கு பூஜை நடைபெறும்.விநாயகர் சதுர்த்தி : விநாயக பெருமான் அவதரித்த ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளே விநாயகர் சதுர்த்தி ஆகும். இன்று விநாயகரை வழிபட்டால் விக்னங்கள் நிவர்த்தி ஆகும் எனபது ஐதீகம். அனைவரும் வீட்டில் பிள்ளையார் உருவம் செய்து / வாங்கி வந்து வழிபடுவர்.
புரட்டாசி
ஆடி மாதம் மண்ணுக்கு உகந்தது என்றல், புரட்டாசி பெருமாளுக்கு உகந்து. புரட்டாசி சனிக்கிழமை அனைத்து பெருமாள் கோவில்களிலும் விஷேச வைபவங்கள் மற்றும் பிரமோற்சவம் நடைபெறும்.திருப்பதி பெருமாளை குலதெய்வமாக வழிபடுபவர்கள், புரட்டாசி சனிக்கிழமை அன்று மாவிளக்கு ஏற்றி வழிபடுவர். இம்மாதம் முழுவதும் தானியம் மற்றும் காய்கறி உணவுகளையே உட்கொள்வது வழக்கம்.ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாச்சியார் சந்நிதியில் நவராத்ரி விழா நடைபெறும். தைரியம், செல்வம், கல்வி ஆகியவை வேண்டி இவ்விழா நடைபெறுகிறது.சனி தோஷம் நீங்க சனிபகவானை நினைத்து சனிக்கிழமை விரதம் இருப்பதுண்டு.புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படுகிறது. முன்னோர்கள் வழிபாடு செய்வர். இந்நாளில் வழிபடுவதில் மூலம் தீர்க்க ஆயுள், உடல் ஆரோக்கியம் மற்றும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.நவராத்ரி : புரட்டாசி அமாவாசை பிறகு வரும் பிரதமை திதியில் இருந்து ஒன்பது நாட்களே நவராத்ரி. துர்கை, மஹாலக்ஷ்மி, சாரதா தேவி ஆகிய முப்பெரும் தேவிகளின் திருவிழாவே இது. வீடுகளில் கொலு வைத்து விரதம் இருப்பார்கள்.விஜயதசமி : எட்டு நாட்கள் போரிட்டு முடிவில் ஒன்பதாவது நாள் மகிஷாசுரனை வீழ்த்தியது விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. அடுத்த நாள் ஆயுதபூஜையாக வெகு விமர்சையாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
ஐப்பசி
தீபாவளி : இந்துக்களின் மிக பெரிய திருவிழாவான தீபாவளி இந்த மாதமே வருகிறது. அனைவரும் எண்ணெய் ஸ்னானம் செய்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவர். புதுமண தம்பதியர் தலை தீபாவளி கொண்டாடுவர்.கேதார கௌரி விரதம் : புரட்டாசி சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. கன்னிப்பெண்கள் நல்ல கணவனை வேண்டியும், திருமணம் ஆன பெண்கள், கணவருடன் இணை பிரியாது ஒற்றுமையுடன் வாழவும் விரதம் இருப்பர்.கந்த சஷ்டி திருவிழா : ஐப்பசி அமாவாசை அடுத்து வரும் ஆறு நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். சூரபத்மனை வீழ்த்தி முருக பெருமான் வெற்றி பெற்றதையே இவ்விழாவாக கொண்டாடப்படுகிறது. செந்தில் ஆண்டவனின் அனைத்து கோயில்களிலும் மிகப்பெரிய விழாவாக நடைபெறுகிறது.அன்னாபிஷேகம் : ஐப்பசி பௌர்ணமியில் அனைத்து சிவாலயங்களிலும் லிங்க திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். தஞ்சை பெரிய கோவிலில் மிக பெரிய விழாவாக நடைபெறும். உணவு தானியங்கள் பெருகி பசி பிணி ஏற்படாது.மாமன்னர் ராஜராஜன் விழா: ஐப்பசி சதயத்தில் பிறந்த மாமன்னர் ராஜராஜரை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை
திருவண்ணாமலை மகா தீபம் / பரணி தீபம் : தீபத்திருநாளை ஒட்டி அண்ணாமலை மலையின் மீது தீபம் ஏற்றப்படுகிறது. பஞ்சமூர்த்திகளும் அன்று தீப மண்டபத்தில் எழுந்தருளி இருப்பர். உற்சவராகிய அர்த்தநாரீஸ்வரர் அன்று ஒரு நாள் மட்டுமே தீப மண்டபத்தில் காட்சி கொடுப்பார்.
கார்த்திகை தீபம்: வேலவனை எடுத்து வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கவே இந்த திருநாள். அன்று இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபடும் அனைவருக்கும் நன்மைகள் பெருகும் என்று கார்த்திகேயன் அருள் புரிந்து இருக்கிறார்.சபரிமலை செல்ல கார்த்திகை ஒன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர்இம்மாதத்தில் திருமணத்திற்கு முகூர்த்தங்கள் நிறைய உண்டு.
மார்கழி
மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. இதன் மூலம் இந்த மாதத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
வைகுண்ட ஏகாதசி: மார்கழியின் முக்கிய பெரு விழா. அனைத்து வைணவ ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பு மிக முக்கிய அம்சம். பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பகவானை எண்ணி விஷ்ணுவின் திருநாமங்களை சொல்லி வழிபடுவர். பரமபத விளையாட்டு அனேகமாக அணைத்து இல்லங்களிலும் விளையாடப்படும்.பாவை நோன்பு : ஆண்டாள் நாச்சியார் மார்கழி மாதம் முழுவதும் நாராயணனை எண்ணி திருப்பாவை பாடி அரங்கனை கணவனாக அடைந்தாள். கன்னி பெண்கள் நல்ல கணவனை வேண்டி திருப்பாவை மற்றும் வாரணம் ஆயிரம் பாசுரம் சேவித்து மனம் போல் மாங்கல்யம் அமைய வேண்டுவர்.பகல் பாத்து, ரா பத்து உற்சவம் : ஸ்ரீரங்கத்தில் வருடம் முழுவதும் உற்சவமே, அதிலும் மார்கழி மாதமானால் பொழுதெல்லாம் உற்சவமே. பகல் பத்து உற்சவம் பத்து நாட்கள் நடைபெற்று வைகுண்ட ஏகாதசி அன்று நிறைவடையும். முதல் ஏழு நாட்கள் அரங்கன் முத்தங்கியில் காட்சி அளிப்பார். இந்த பத்து நாட்களும் மண்டபத்தில் ஆழ்வார்கள் எழுந்தருளி காட்சியளிப்பார். ஏகாதசி அடுத்து வரும் பத்து நாட்கள் ராப்பத்து விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறும்.திருவாதிரை : இவ்விழாவானது சிவபெருமானின் நடராஜர் ரூபத்திக்கு செய்யப்படுகிறது. தில்லையில் மிகப்பெரிய விழா இது.திருவெம்பாவை நோன்பு : கன்னிப்பெண்கள் கடைபிடிக்கும் மற்றும் ஒரு நோன்பு. இது திருவாதிரைக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்து ஆரம்பித்து திருவாதிரை அன்று நிறைவடையும்.படி உற்சவம் : குன்றின் மீது இருக்கும் குமரனின் ஆலயங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு படியிலும் நின்று முருகனின் புகழ் பாடப்படுகின்றது.அனுமன் ஜெயந்தி : மார்கழியில் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. வைணவ திருத்தலங்களில் உள்ள ஆஞ்சநேய சந்நிதிகளிலும், ஆஞ்சநேயர் கோவில்களிலும் வடைமாலை, வெற்றிலை மாலை ஆகியவற்றை சாற்றி வழிபாடு நடைபெறும்.
தை
பொங்கல் : தமிழர் திருநாள் என போற்றப்படும் பொங்கல் திருநாளாம் நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி. பழையன கழிந்து புதியன புகுதல். இரண்டாம் நாள் தை பொங்கல், சூரிய வழிபாடு செய்து பொங்கலிட்டு அறுவடை செய்த விளைச்சல்களை விவசாய பெருமக்கள் சூரியனுக்கு சமர்ப்பிப்பர். மூன்றாம் நாள் மாட்டு பொங்கல். உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை அலங்கரித்து வழிபடுதல். நான்காம் நாள் காணும் பொங்கல் என்று சுற்றத்தார் மற்றும் உறவினர்களோடு கூடி இருந்து மகிழ்வர்.
தை பூசம் : பௌர்ணமி ஒட்டி வரும் பூச நட்சத்திரத்தன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் விசேஷமாக நடைபெறும் விழா. அன்றுதான் உலகம் தோன்றியதாக ஐதீகம். முருகப்பெருமான் தாருகாசுரனை கொன்றதும் தை பூசத்தன்றே பழனியில் கொண்டாடப்படுகிறது.தை அமாவாசை : இன்னாளில் பித்ருக்களுக்கு திதி கொடுக்க நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம்.
மாசி
மாசி மகம் : மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுவது. பிறவி பெருங்கடலில் இருந்து மீண்டு இறைவனது திருவடியில் சேரவே இன்று கடலாடுவது. கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. அன்று மகா மகத்தில் நீராடுவது நமது அனைத்து பாவங்களையும் நீக்கிவிடும் என்பது ஐதீகம்.சிவராத்திரி : மாசி மாத தேய்பிறை சதுர்த்தி திதியில் அன்று இரவில் கொண்டாடுவது. சிவபெருமானை தியானித்து விரதம் இருந்தால் வேண்டிய விருப்பம் நிறைவேறும்.காரடையான் நோன்பு : மாசி மாத கடைசி நாளில் கடைபிடிக்கபட்டு பங்குனி முதல் தேதியில் நிறைவுபெறும். சுமங்கலி பிராத்தனை, கௌரி நோன்பு, சாவித்திரி நோன்பு என்றும் அழைக்கப்படும். தீர்க்கசுமங்கலியாய் இருக்க வரம் வேண்டி பெண்கள் விரதம் இருப்பர்.
பங்குனி
பங்குனி உத்திரம் முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாக கொண்டாடப்படுகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெற்றதும் பங்குனி உத்திரத்தன்றே. மேலும் ஆண்டாள் அரங்கன், ராமன் சீதை, முருகன் தெய்வானை ஆகியோரின் தெய்வ திருமணங்கள் நடைபெற்றதும் இதே பங்குனி உத்திரத்தில் தான். பழனியில் தேரோட்டம் நடைபெறும்.காமன் எரிப்பு பண்டிகையாம் ஹோலி பண்டிகையும் வஸோந்தற்சவமும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
பங்குனி மாதம் மாரியம்மன் கோவில்களில் கொடியேற்றி பூசாட்டுத்தல் என்னும் பண்டிகை 15 நாட்கள் நடைபெறும். சமயபுரம் மற்றும், பண்ணாரி மாரியம்மன் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவிழா அன்று கரகம் ஊர்வலம், குண்டம் இறங்குதல், அன்னதானம் போன்றவை நடைபெறும். வருடம் முழுவதும் மாரிமழை பெய்து மக்கள் சுபிட்சம் அடைய மாரியம்மனிடம் வழிபடுவார்கள். இதை பின்பற்றி தமிழகத்தில் உள்ள எண்ணற்ற மாரியம்மன் கோவில்கள் இதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக திருவிழா கோலம் பூளும்.

மேற்கூறிய அனைத்தும் பொதுவாக அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகைகள். இதைத்தவிர ஒவ்வொரு கோவில்களுக்கும் தனிசிறப்புடன் கூடிய விழாக்கள் உண்டு. சில விழாக்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே கொண்டாடப்படுவதும் உண்டு. கொடுக்கப்படும் பிரசாதங்களும் அந்தந்த பருவத்திற்கு உடலுக்கு நன்மை செய்யும்படி இருக்கும். உதாரணமாக ராம நவமிக்கு கொடுக்கப்படும் பானகம், நீர் மோர் போன்றவை கோடை காலத்திற்கு ஏற்றவை. ஆடி மாதம் அம்மன் திருவிழாக்களில் பிரசாதமாக கொடுக்கப்படும் கூழ் அந்த பருவத்துக்கு உடலுக்கு இதம் தருபவை.
இவ்வாறு வாழ்க்கையே கொண்டாடட்டமாக, உற்சவமாக கொண்டாடினர் நமது முன்னோர். இன்று நமது பண்டிகைகளை கொண்டாட நாம் நீதிமன்றத்தின் உத்தரவை நோக்கி இருக்க வேண்டிய சூழல். பண்டிகைகள் அனைத்தும், கொண்டாடப்படும் விதமும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டவை. ஆனால் இதற்கு மூட நம்பிக்கை சாயம் பூசி அழிக்க முற்படுகின்றனர். ஹிந்து மக்கள் உறுதியாக நின்று இதை நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த கடமை நமக்கு உள்ளது.
வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வாரணம்

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...