`வரலாறு என்பது போராட்டமே' என்கிறார் இந்திய வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பர். வெற்றிக்காகவும் வாழ்வுக்காகவும் போராடி வந்தவர்களின் வரலாறுகள் நமக்குத் தெரியும். ஆனால், நம்முடைய வரலாற்றை ஆய்வு செய்யவே இப்போது போராட வேண்டியிருக்கிறது. இந்திய வரலாற்றுப் பக்கங்களில் தமிழகத்தின் வரலாறுகள், கடந்த சில ஆண்டுகளாகவே மறைக்கப்பட்டு வருகின்றன. தொல்லியல் களங்கள் அதிகமுள்ள தமிழகத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டதென்னவோ பெயரளவுக்குத்தான். அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கும் முறையான அறிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியாத நிலையில்தான், இந்தியத் தொல்பொருள் துறை இருக்கிறது.
தமிழர்களின் வரலாறு திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகின்றதா என்ற கேள்வி எல்லோருக்கும் எழாமல் இல்லை. ஆதிச்சநல்லூர் முதல் கீழடிவரை ஆய்வுக்கும் அறிக்கைக்கும் போராடியே பெற வேண்டிய சூழலில் இருக்கின்றது நம் வரலாற்றுப் பக்கங்கள். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழகத்துக்கு இந்த நிலைதான் தொடர்கின்றது.
Sponsored
திருநெல்வேலி அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் மிகப்பெரிய தொல்லியல் களமாகக்கண்டறியப்பட்டு, கடந்த 2004-ம் ஆண்டு அகழ்வாய்வு நடத்தப்பட்டது. தொல்குடி முதுமக்கள் தாழிகள், தொல்பொருள்கள் என எண்ணற்றப் பழைமையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. அங்கு நடந்த ஆய்வுகள் குறித்து தொல்லியல்துறை சார்பில் முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தப் பணியில் ஈடுபட்ட மானுடவியல் அறிஞர் ராகவன், தன் ஆய்வறிக்கைகளை மத்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். ஆனால், அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு மத்திய அரசு தயாராக இல்லை.
Sponsored
ஆதிச்சநல்லூர் நாகரிகம் என்பது சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் முற்பட்டது. சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் சோகார், இங்கு ஆய்வுகளை மேற்கொண்டார். அதில் கிடைத்த தொல்பொருள்களை பெர்லின் அருங்காட்சியகத்தில் வைத்தார். இதற்கு `ஆதிச்சநல்லூர் பொக்கிஷம்’ என்றே பெயர் வைத்தார். `இத்தனை சிறப்புமிக்க ஆதிச்சநல்லூர் அகழவாய்வு அறிக்கை ஏன் இன்னும் முழுமையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை?' என்பதே வரலாற்று அறிஞர்களின் கேள்வியாக உள்ளது.
தமிழகத் தொல்லியல் துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது ``ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்''என்று தெரிவித்தார்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வைவிடவும் கீழடி ஆராய்ச்சிக்குத் தமிழ் அறிஞர்கள் போராட்டமே நடத்திவிட்டார்கள். தமிழ் அறிஞர்கள் மட்டுமல்லாது தமிழக அரசியல் தலைவர்களும் கீழடி ஆராய்ச்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர். 2014-ம் ஆண்டு கீழடி அகழ்வாராய்ச்சிக்குக் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது முதல் இரண்டுகட்ட ஆய்வு அறிக்கையை ஆராய்ச்சிக்குச் சம்பந்தமே இல்லாதவர்களைக் கொண்டு தயாரிக்கச் சொல்லி உத்தரவிட்டது மத்தியத் தொல்லியல் துறை. தமிழரின் வரலாற்றின் மேல் அக்கறையுள்ள பலர், இதற்காகவே நீதிமன்றப் படியேறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பழங்காலக் கோயில்கள், பாறை ஓவியங்கள், ஆழ்கடல் ஆராய்ச்சி என்று இன்னும் பல தொல்லியல் களங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. அதோடு புனரமைப்பு என்ற பெயரில் கோயில்களும் சிதைக்கப்பட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. உலக தொல்லியல் தினத்தில், இதுகுறித்து வரலாற்று அறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.
குடவாயில் பாலசுப்ரமணியன், ஆராய்ச்சியாளர்:
``தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் பணிகளில் நிறைய விஷயங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால், தொல்லியல்துறை ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது, தொல்லியல் அறிவோடு செயல்படாமல், வரலாற்றுச் சான்றுகளைத் தெரியாமலேயே அவர்கள் அழித்து வருகிறார்கள். தஞ்சை பெரிய கோயிலில் இருந்த இரண்டு கல்வெட்டுகள், இதுபோன்ற புனரமைப்பின்போது சிதைக்கப்பட்டிருக்கின்றன. தொல்லியல்துறையில் சான்றுபெற்ற அதிகாரிகளே, இதுபோன்ற புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தஞ்சை மற்றும் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாக்கப்படாத, புனரமைக்கப்படாத கோயில்கள் ஏராளமாக உள்ளன. இந்தக் கோயில்களை எல்லாம் தொல்லியல் துறை கையிலெடுத்துப் பராமரிக்க வேண்டும். உதாரணமாக, கும்பகோணத்துக்கு அருகில் பெளண்டரீகபுரத்தில் குலோத்துங்கச் சோழன் கட்டிய கோயில் ஒன்று உள்ளது. அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோயில், யாருமே பராமரிக்காததால் சிதிலமடைந்துள்ளது. அறநிலையத்துறையும் சரி, உள்ளூர் மக்களும் சரி, யாருமே இதுபோன்ற தொன்மையான கோயில்களைப் பாதுகாப்பதில்லை. பழைமையான இத்தகையக் கோயில்களை அதன் பழைமை மாறாமல் புனரமைக்க வேண்டும்".
ஶ்ரீதரன், முன்னாள் தொல்லியல் துறை ஆய்வாளர்:
``தமிழகத்தில் நிறைய தொல்லியல் கண்டுபிடிப்புகள் இப்போதும் கண்டெடுக்கப்படுகின்றன. தனிப்பட்ட நபர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளில் வரலாற்றுச் சான்றுகள் நிறையக் கிடைப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளிவருகின்றன. இதுபோன்ற ஆய்வுகளையும், ஆய்வறிக்கையையும் தொல்லியல் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற கண்டுபிடிப்புகளைத் தொல்லியல் துறை பட்டியலிட்டு, ஒவ்வொன்றாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வுகளில் கண்டெடுக்கப்படும் பொருள்களை அருகிலுள்ள அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்".
சு.வெங்கடேசன், எழுத்தாளர்:
`` `கீழடியில் நின்றுபோன ஆராய்ச்சியை அமர்நாத் ராமகிருஷ்ணனே நடத்த வேண்டும்' என்று கடந்த 4 வருடமாகத் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், கடந்த 3-ம் தேதி மத்தியத் தொல்லியல் துறை வெளியிட்ட குறிப்பில், கீழடி தொடர்பான ஆய்வில் இனி அமர்நாத் தொடர மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பாக, நண்பர்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். வரும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் முதற்கட்ட ஆய்வு முடிவுகளை அமர்நாத் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்".
சுவாமிநாதன் நடராஜன், தொல்லியல் ஆர்வலர்:
இந்தியத் தொல்பொருள் துறையைப் பொறுத்தவரையில், புதிய ஆராய்ச்சியையும் அகழ்வாராய்ச்சியையும் மேற்கொள்வதைவிட, தொன்மையான புராதனச் சின்னங்களைப் பராமரிப்பதற்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். கல்வெட்டுத் துறையில் இன்னும் பல புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவின் தொன்மை குறித்தும், அதன் வரலாற்றுச் சிறப்புக் குறித்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். தொல்லியல் துறையில் நிறைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். புராதனச் சின்னங்களை முப்பரிமாணத் தோற்றத்தில் ஆவணப்படுத்த வேண்டும்".
நன்றி விகடன்
No comments:
Post a Comment