‘சிருங்காரம்’ என்பது வெறும் உடல்சுகமல்ல; பிறகு வேறென்ன? தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்!
நவரசங்களில் ஒன்றான சிருங்காரமே இந்த பூலோக சிருஷ்டியின் ஆதி மூலம். அந்த சிருங்கார ரசத்தை இந்தத் தலைமுறை மட்டுமல்ல முன்பு தப்பிதமாகப் புரிந்து கொண்டிருந்தவர்கள் கூட சரியான வகையில் எவ்விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கற்றுத் தருகிறது இந்த அருமையான பாடல்.
ஆனால், கலிஃபோர்னியாவில் மென்பொறியாளராக இருக்கும் செளபாவோ( செளபாக்யா) காதல் என்பதும், கணவன், மனைவி கூடல் என்பதும் மூக்குப் பிழிவதைப் போல சடுதியில் நடந்து முடிந்து விடக் கூடியது என்கிறாள். ரொமான்ஸ் எல்லாம் திரைப்படங்களில் வரும் ஹீரோ, ஹீரோயின்ஸுக்கும், நாவல்களில் வரும் கற்பனை கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே உகந்தது. நிஜ வாழ்வில் இணைந்தவர்களுக்கு அப்படியான சினிமாட்டிக் ரொமான்ஸ் தேவையில்லை என்பது அவளதும், அவளது கணவரதுமான புரிதல்கள்.
டெல்லியில் விலங்கியல் பேராசிரியையாக இருக்கும் அனிதாவோ ‘ச்சூ... அதுல அப்படி ஒன்னும் ஸ்பெஷல் இல்லே தீதி... இட்ஸ் லைக் எ கமிட்மெண்ட், வாரத்துக்கு 3 நாள் கம்பல்ஸரி அது வேணும்கறார் என் ஹஸ்பண்ட். Now a days... If I am interested or not... it happend in our life. என்று எந்தவிதமான சுவாரஸ்யமும் இன்றி தேங்காய் உடைப்பது போல உடைத்துப் பேசி நகர்கிறாள்.
சில வாரங்களுக்கு முன் விகடனில் வெளிவந்த சிறுகதையொன்றில், கல்லூரிப் பருவத்திலிருக்கும் இரு குழந்தைகளுக்குத் தாயான நடுத்தர வயது ஒல்லிப் பெண்ணொருத்தி, அவளை விட வயதில் இளையவனான பக்கத்து வீட்டு இளைஞனிடம் ‘செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்குமாமே?! அப்படியா? நிஜமாவா? என்று கேட்பதாக ஒரு வரி வாசித்தேன். சகஜமாகப் பேசும் நண்பன் தானே என்று யோசிக்காமல் இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டு பிறகு தன்னைப் பற்றி அவன் ஏதாவது தவறாகக் கருதி விடக்கூடாதே என்கிற பயத்தில் அவள் அந்த இளைஞனை தனது வசிப்பிடத்தில் இருந்து மொத்தமாக அப்புறப்படுத்தி விரட்ட குரூரமாக பல திட்டம் தீட்டுகிறாள் என்று கதை நீள்கிறது. இங்கே அவளது குரூரத்தைப் பற்றி நாம் பேச வேண்டியதில்லை. இத்தனை வயதுக்குப் பின்னும், தனது மகனுக்கே திருமணம் செய்யும் வயதிலிருக்கும் ஒரு பெண்மணியே கூட தாம்பத்யத்தில் பூரணத்துவம் பெற்றவளாக இல்லை. அவளுக்கு அது குறித்த கேள்விகள் இருக்கின்றன. யாரிடம் கேட்பதென்று தெரியாமல் அக்கா, அக்காவெனப் பழகும் பக்கத்து வீட்டு இளைஞனிடம் போய் அதைக் கேட்டு வைத்து விட்டு தன்னைத் தானே நொந்து அவனையும் நோகடிக்கிறாள். இது தான் அவலம்.
அவர்களுக்காவது சிருங்காரம் என்பது குடும்ப வாழ்வியலில் ஒரு அங்கம். அதிலும் கூட்டுக்குடும்ப வாழ்வில் இருக்கும் தம்பதிகளுக்கு அதெல்லாம் வீட்டில் யாருமற்ற நேரங்களில் எப்போதாவது கிடைக்கக் கூடிய போனஸ் சர்ப்ரைஸ் என்பது மாதிரியாகத் தான் நமது திரைப்படங்கள் நமக்குக் காட்டியிருக்கின்றன. ஆனால், இந்தப் பாடல் வீடியோவில் ஓய்ந்து போய் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணுக்கு சிருங்காரம் தான் வாழ்க்கையே! காரணம் அவளொரு விலைமாது. ஆனால், அவளது கோபம் என்னவென்றால்... இளமையில் அவளிடத்தில் சிருங்கார ரசம் தேடி ஓடி வந்தவர்களில் ஒருவரேனும் இப்போது அவளது மனமும், உடலும் சோர்ந்த நிலையில் அவளை ஏற்றுக் கொண்டு உதவத்தயாராக இல்லை. மீறி அவள் அவர்களிடத்தில் உதவி கேட்டு வந்தாளெனில்;
நீ அளித்த சுகத்துக்கும், நான் அளித்த பணத்துக்கும் கணக்கு நேராகி விட்டது. இனிமேல் நான் உனக்கொரு சகாயம் செய்யவேண்டும் எனில் ‘இறந்து போ’ என்கிறார்கள்.
அதனால், வாழ்வை வெறுத்துப்போய் கோயிலில் அமர்ந்திருக்கும் அவளுக்குள், சிருங்காரம் என்றால் வெறும் உடல்சுகம் மட்டும் தானா? கேவலம் அதற்காகத் தான் எப்போதுமே ஆண்கள், பெண்களை நாடுகிறார்களா? அதனால் தான் அழியப் போகும் இந்த உடல் மீதான ஈர்ப்பு குறையும் போது தன்னை அம்போவென இந்த சமூகம் கைவிட்டு விட்டதா? என்றெல்லாம் கேள்வி எழுகிறது. இந்தத் தொழிலை விட்டு விட்டு வேறு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்றால் அதற்கு இந்த உலகமும், சமூகமும் தடையாக நிற்கிறது. பிறகு இந்த உடலுக்கான மரியாதை தான் என்ன? வெறும் சரீர சுகத்தை அனுபவிப்பதற்காக மட்டும் தான் இந்த உடலை ஆண்டவன் நமக்கு அளித்திருக்கிறானா? சதைப்பிண்டமான இந்த உடலைத் தாண்டியும் பார்க்க முடிந்தால் உள்ளிருக்கும் மனதை உணர முடியாதா? சிருங்காரம் என்றால் அது உடல் அங்கங்கள் மட்டும் தானா? எனத் தன்னைத் தேடி வந்து ஆறுதல் கூறும் நாட்டிய வித்வானிடமும் அவள் கேட்கிறாள்.
எஸ்.பி.பியின் மந்தகாஸக் குரலில் அந்தப் பாடலைக் கேட்பதற்கான வீடியோ...
அவளது கேள்வி கண்டு அவள் மீது பரிதாபம் கொள்ளும் நாட்டிய வித்வான் நன்றாக பரதம் தெரிந்தவளான அந்தப் பெண்ணுக்கு பரத மொழியிலேயே சிருங்காரம் என்றால் என்ன என்பதை அழகான பாடல் வாயிலாக விளக்குவார். நிஜமாகவே இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியவரே!
பாடலைக் கேட்டால் நீங்களும் அதை ஒப்புக் கொள்ளக்கூடும். பாடல் தெலுங்கில் இருந்தாலும் அதற்கான சப் டைட்டில் ஆங்கிலத்திலும் விரிகிறது. எனவே மொழி புரியாதவர்களாலும் பாடலின் சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். சப் டைட்டிலும் புரியாதெனில், கீழே உள்ள மொழிபெயர்ப்பு உங்களுக்கு உதவக்கூடும்.
ஷண நேரம் மட்டும் சந்தோசத்தைத் தந்து மறையக்கூடிய உடலின்பம் அல்ல சிருங்காரம், இருட்டறையில் சரஸ, சல்லாபங்களில் ஈடுபட்டு, கீழான ஆசைகளுக்கு இடமளித்துப் பின்பு மோகம் தீர்ந்ததும் மறப்பதுமல்ல சிருங்காரம். ஆடற்கலையில் வல்லோன், காலைத் தூக்கி நின்றாடும் தெய்வம் சிவபெருமானின் நடன மேதாவிலாசத்தின் உச்சம் சிருங்காரம். ஸ்ரீகிருஷ்ணனின் வேணுகானம் சிருங்காரம். வேய்ங்குழலை காதலி போல் பாவித்து தன் சுவாசத்தை அமுதகானமாக்கி ஆயர்பாடியைத் தாலாட்டும் மாயக்கண்ணனின் குழலோசையின் உச்சம் சிருங்காரம். சத்யபாமா அந்தப் பொல்லாத கிருஷ்ணன் மீது பொய்க்கோபம் கொள்வதும் கூட சிருங்காரமே! அவள் கோபம் முதிர, முதிர அப்போதும் விடாது அவளைத் தூண்டி விட்டு, பொறாமை கொள்ள வைத்து பிற கோபியருடன் ஆடிப்பாடி முடிவில் சத்யபாமாவையே சரணடையும் கிருஷ்ணனின் தீராத விளையாட்டும் சிருங்காரமே. அண்ணலும் நோக்க அவளும் நோக்கி ராமனும் சீதையும் மிதிலையில் கொண்ட காதலும் சிருங்காரம். பின்பு ப்ரிய நேர்கையில் அவ்விருவர் உள்ளமும் பிரிவாற்றாமையால் பட்ட பாடும் சிருங்காரமே! நடராஜ நாட்டிய சிகரம் சிருங்காரம்! ஸ்ரீகிருஷ்ண வேணுகானம் சிருங்காரம்
தாழிட்ட கதவுக்கு அப்பால் நிகழ்வது என்னவென்று அறியமுடியாததைப் போல, நேசம் கொண்ட இரு மனங்களும் ஒருவர் மனதில் இருப்பதை மற்றவர் அறிந்து கொள்ள முயல்கையில் இரு மனங்களுக்குள் நிகழும் ரசவாதமும் சிருங்காரமே! கேட்கத் தெவிட்டாத இரு ராகங்கள் ஒன்றாகி முயங்கி நிற்பதைப்போல காதலினால் ஒன்றிணைந்தவர்கள் ஈருடல் ஓருயிராய் இயைந்து வாழ்கையில் நிகழும் தாம்பத்யமெனும் தேகயாகம் சிருங்காரம். அந்தி மயங்கி சூரியன் துயில் கொள்ளச் செல்கையில் பூமியில் உயிர்கள் அனைத்தும் காமனின் மலர்க்கணைகளால் வீழ்த்தப்பட்டவர்களாய் தன் இணையை நாடிச்செல்லத் தூண்டும் மென்னுணர்வுகளின் சங்கமம் சிருங்காரம். மூன்று முடிச்சிட்டு தம் இணையெனத் தீர்மானித்து ஏற்றுக் கொண்ட மங்கையுடன் பெற்றோரும் உற்றாரும் வாழ்த்தி அனுமதிக்க ஒரு புனித கணத்தில் ஆணும், பெண்ணும் நிகழ்த்தும் பவித்ர யாகம் சிருங்காரம்! நடராஜ நாட்டிய சிகரம் சிருங்காரம், ஸ்ரீகிருஷ்ண வேணுகானம் சிருங்காரம்.
உடலின் ஆசைத்தூண்டல்களோ, மோக மயக்கங்களோ சிருங்காரமல்ல, உச்சி முதல் உள்ளங்கால் வரை மனமும், உடலும் ஒளி விட்டுப் பிரகாசிக்கச் செய்வதான தெய்வீக அனுபவமே சிருங்காரம்! ஆலயங்களில் கூடலின் வெவ்வேறு ரூபங்களை விலாவாரியாகச் சிலாகிக்கும் சிலாரூபங்களின் நிர்வாணம் அர்த்தமற்ற காமத்தூண்டல்கள் அல்ல. இந்த உலகை நிர்மாணித்த ஆதிசக்தியும் சிவனும் கொண்ட பூரண தாம்பத்யத்தின் தத்ரூப விளக்கங்களே அவை. ரதி, மன்மதனை ஆஸ்தான தேவதைகளாகக் கொண்டு விரியும் பூமியின் ஜன சிருஷ்டியை விஸ்தரிக்க அபிஷேகிக்கப்படும் பிராணநீரில் முகிழ்க்கும் பரிசுத்தமான சிறு மலர் சிருங்காரம். பிரம்ம சிருஷ்டியைப் போஷிக்க சதா இரு உயிர்களுக்குள் நிகழும் பவித்ர யாகம் சிருங்காரம்! நடராஜ நாட்டியத்தின் உச்சம் சிருங்காரம்! ஸ்ரீகிருஷ்ண வேணுகானம் சிருங்காரம்!
இத்தனை பவித்ரமான இந்த சிருங்கார உணர்வை வெறுமே சிறுநீர் கழிப்பதைப் போலவோ, மூக்குப் பிழிவதைப் போலவோ, தலையில் பேன் அரிப்பைத் தீர்ப்பது போலவோ, அல்லது உடல் அரிப்பைத் தீர்த்துக் கொள்ளவோ மட்டுமே பெரும்பாலான மனிதர்கள் கையாள்வதன் பெயர் சிருங்காரம் அல்ல. அதன் பெயர் வேறு என்கிறது இந்தப்பாடல்!
மொத்தத்தில் சிருங்காரத்தின் வெவ்வேறு பாவங்களான காதலும், காமமும், தாம்பத்யமும் நிகழ வேண்டியது இப்படித்தானேயன்றி வெறுமே உடல் இச்சைகளைத் தீர்ப்பது மட்டுமேயாக அல்ல என்கிறது இப்பாடல்.
நுங்கும், நுரையுமாய்ப் பாய்ந்தோடி கடலோடு சங்கமிக்கும் நதியைப் போல, மென்காற்றின் திசையெங்கும் இதம் பரப்பும் மலரின் நறுமணம் போல... ஈடுபடும் உணர்வேயின்றி தன்னை மறந்த லயிப்பில் நிகழ்வதே சிருங்காரம் அதாவது இந்தப்பாடலில் சொல்லப்பட்டிருப்பதைப் போல ஸ்ரீகிருஷ்ண வேணுகானம் கேட்ட உணர்வோ, நடராஜ நாட்டிய உச்சம் கண்ட சிலிர்ப்போ மிஞ்சவேண்டும் உள்ளத்தில் தித்திப்பாகத் தங்க வேண்டும் அந்த உணர்வே சிருங்காரம் என்கிறது இப்பாடல். அப்படியல்லாது வேதனையான உணர்வைத் தரும் எதுவொன்றும் சிருங்காரமாகாதாம்.
No comments:
Post a Comment