'' ஐராவதேஸ்வரர் கோயில் இராஜகம்பீர மண்டபத்தின் வெளிக்கோட்ட சிற்பம். இரண்டாம் இராஜராஜன் காலம்.
இத்திருவுருவம் சூர்ய மண்டலத்தில் விளங்கும் சிவசூரியன் திருவுருவமாகும்.
சூர்ய மண்டலத்தில் திகழும் உருத்திரன் எனும் சிவப்பரம்பொருள் அர்த்தநாரீஸ்வரராக நான்கு முகங்களும் எட்டு தோள்களும் கொண்டவராகக் காட்சியளிக்கிறார் .
அடியேன் சிவசூரியன் பற்றி ஒரு பதிவினை ௧௦ - ௭ - ௨௦௧௭ அன்று எனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் ; மீண்டும் ஒருமுறை அன்பர்களுக்காகப் பதிவு செய்கின்றேன் .
சூர்ய மண்டலத்தில் விளங்கும் சிவசூரியன் !!!
தாராசுரம் அருள்மிகு ஐராவதேசுவரர் திருக்கோயில் வெளிப்புறக்கோட்டது தென்கிழக்கில் கிழக்கு நோக்கி அமைந்த கோட்டத்தில் மிகவும் அபூர்வமாகத் திகழும் சிவசூரியன் திருவுருவம் !!!
சூர்ய மண்டலத்தில் திகழும் உருத்திரன் எனும் சிவப்பரம்பொருள் அர்த்தநாரீஸ்வரராக நான்கு முகங்களும் எட்டு தோள்களும் கொண்டவராகக் காட்சியளிக்கிறார் .
சிவமகாபுராணம் இத்திருமேனியைச் சிறப்புடன் குறிக்கிறது .அதன் விரிவைக் காண்போம் .
ஒரு சமயம் எந்த பூஜையைச் செய்தால் நற்கதி பெறலாம் என்று தேவர்கள் கேட்க பரம்பொருள் , சூர்ய மண்டலத்தில் நின்று அவர்களுக்கு காட்சி தந்தார் .
அப்போது ,அவர் கோடி மின்னல்கள் திரண்டது போன்று ஒளி பொருந்தியவராக விளங்கினார். நான்கு திருமுகங்கள், எட்டுத் திருக்கரங்கள் பன்னிரண்டு கண்கள் , பாதி சிவனும் பாதி சக்தியுமான அர்த்தநாரீஸ்வர வடிவம்,தலையில் ஜடாமண்டலம்,சிவந்த சந்தானம் பூசி ,சிவந்த ஆடை தரித்து சிவந்த பூக்களால் ஆன மாலை சூடி,சிவந்த கற்களால் இழைத்த ஆபரண்களைப் பூண்டு அருட்காட்சி தந்தார்.
அவர் அருகில் ஒளிப்பிழம்பாக தேவி நின்றார் .அவர்களுக்கு வலப்புறம்பிரமனும் இடப்புறம் திருமாலும் நின்றனர் .அம்பிகையைச் சுற்றி அவருடைய சக்தி கணங்களும் நவகிரகங்களும் காணப்பட்டனர் .சூரியவடிவமாகப் பரம்பொருளும் சந்திரன் வடிவமாக தேவியும் காட்சிதந்தனர் .
இக்காட்சியைக் கண்ட தேவர்கள் அளவில்லாத ஆனந்தமடைந்துவணங்கினர் ;அப்போது ,பரம்பொருள் என்னை சூரியமண்டலத்து நடுவில் வைத்து சூரியனோடு வணங்கினால் எல்லா இன்பங்களும் கிட்டும் என்று அருளினார் .சிவலிங்க பூஜையே மேலான பூஜை என்றும் அருளினார் .
அன்றுமுதல் ஆன்றோர்கள் சூர்ய மண்டலத்தில் விளங்கும் சிவப்பரம்பொருளான சிவசூர்யனை காலையிலும் மாலையிலும் வணங்குகிறார்கள் .அப்படி வணங்கும்போது கீழ்வரும் மந்திரத்தைக் கூறுவது மரபாகும் .
'' ஸௌர மண்டலா மத்யஸ்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம்
நீலக்கிரீவம் விருபாக்ஷம் நமாமி சிவமவ் யயம் ''
இதன் பொருள் ==
'' சூர்ய மண்டலத்தின் நடுவில் இருப்பவரும் ஸம்ஸார நோய்க்கு மருந்தானவரும் நீல நிறமான கழுத்துள்ளவரும் நெற்றியில் கண்ணுள்ளவரும் ஒப்பற்றவருமான சிவபெருமானை வணங்குகிறேன்'' என்பதாகும்
.
சிவமகா புராணம் கூறும் இந்த சிற்பத் திருமேனியைக் கோயில்களில் காண முடிவதில்லை .மிகவும் அபூர்வமாக ,தாராசுரம் அருள்மிகு ஐராவதேசுவரர் திருக்கோயில் வெளிப்புறக்கோட்டது தென்கிழக்கில் கிழக்கு நோக்கி அமைந்த கோட்டத்தில் சிவமகா புராணம் கூறும் சிவசூர்யனைத் தரிசிக்கின்றோம்.
இவருக்கு முன்புறம் ,இடம் ,வலம் ஆகியவற்றில் அமைந்த முகங்கள் அழகுடன் திகழ்கின்றன .பின்னால் உள்ள முகம் தெரியவில்லை .தலையைச் சுற்றிலும் சூர்ய மண்டலம் திகழ்கிறது .எட்டுத் திருக்கரங்களில் தாமரை ,தண்டம்,கபாலம்,கத்தி,ஜபமாலை,பாசம்,அங்குசம்,உடன் வரதமுத்திரையும் திகழ்கிறது .நின்ற நிலையில் அமைந்துள்ள இத்திருமேனி ஒருபால் பெண்மைக்குரிய தனத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
சிவமகாபுராணம் கூறும் அடிப்படியில் அமைந்துள்ள சிவசூரியத் திருமேனியை பலர் அறியாது பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்;பலர் இத்திருமேனியை '' மகா மாயை '' என்றும் கூறி மயங்குகிறார்கள் .
அன்பர்களே ,தாங்கள் வேறு எந்தத் தலத்திலாவது சிவசூரியத் திருமேனியைக் காணில் புகைப்படத்துடன் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
இப்பதிவினைக் கண்ணுற்ற அன்பர் ராஜசேகர் அமலாவதி அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் == இச்சிலையின் கீழ் உள்ள சோழர் கல்வெட்டில் அர்த்தநாரி சூரியன் என்றுள்ளது.
அன்பர் மருத்துவர் பொன்னம்பலம் சிதம்பரம் அவர்கள் பதிவில் அன்பர் மதுசூதனன் கலைச்செல்வன் அவர்கள் .'' திருவண்ணாமலையில் இருப்பவர். இவருக்கு 4 முகங்கள் உண்டு. 4வது முகம் பின்பக்கம் உள்ளது. தாராசுரத்தில் உள்ளது இதனினும் எழில் நிறைந்தது. '' என்று பின்னூட்டமிட்டு புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார் .அடியேன் அப்புகைப்படத்தை இணைத்துள்ளேன் .
நன்றி ==அன்பர் பூசை. ச .அருணவசந்தன் ---'' சிவ மஞ்சரி ''--தொகுதி எண் ௩ பக்கம் --௩௫௮ மற்றும் ௩௫௯ .[ இஃது சிவப்பரம்பொருளுக்குக் கட்டப்பட்ட சொற்கோயில் ]
புகைப்படங்கள் ==தஞ்சை ,தாராசுரம் அருள்மிகு ஐராவதேசுவரர் திருக்கோயில் வெளிப்புறக்கோட்டது தென்கிழக்கில் கிழக்கு நோக்கி அமைந்த கோட்டத்தில் மிகவும் அபூர்வமாகத் திகழும் அருள்மிகு சிவசூரியன் திருவுருவம் .மற்றும் தாராசுரம் அருள்மிகு ஐராவதேசுவரர் திருக்கோயில்.
No comments:
Post a Comment